எஸ்பி வேலுமணியிடம் பேசியது “இதுதான்”.. எடப்பாடிக்கு செந்தில் பாலாஜி பதிலடி!

Published On:

| By Mathi

Senthi Balaji EPS SP Velumani

சட்டசபை வளாகத்தில் அதிமுகவின் அதிருப்தி அணியின் எஸ்பி வேலுமணி, சி.விஜயபாஸ்கரிடம் பேசியது என்ன என்பது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு (EPS) முன்னாள் அமைச்சரான திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி (Senthil Balaji) பதில் அளித்துள்ளார்.

கோவையில் நேற்று மே 16-ந் தேதி செய்தியாளர்களிடம் செந்தில் பாலாஜி கூறியதாவது: கோவையில் 10-ல் 3 தொகுதிகளை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கோவை மாவட்டத்தில் வழங்கி இருக்கின்றார்கள் வாக்காளப் பெருமக்கள். வரக்கூடிய காலங்களில் முழுவதுமான வெற்றிக்கு நாங்கள் அயராது உழைப்போம் என்ற உறுதியோடு இந்த நன்றியறிவிப்பை நாங்கள் மக்களைச் சந்தித்து நன்றிகளைத் தெரிவித்து வருகின்றோம்.”

ADVERTISEMENT

கேள்வி: தவெக ஆட்சி பொறுப்பேற்றதுல இருந்தும், பதவியேற்றதுல இருந்தும் தற்போது வரையிலும் அதோட செயல்பாடுகள் எப்படி இருக்கு? ஏன்னா அமைச்சரவை விரிவாக்கமே இப்பதான்… இன்னும் முழுமையா முடிவடையல, இப்பதான் அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டிருக்கு. எப்படி பார்க்கிறீங்க?

செந்தில் பாலாஜி: இந்த ஒரு வார காலமா சமூக வலைதளங்களில் வரக்கூடிய கருத்துக்களை நீங்கள் எல்லாம் பார்த்திருப்பீர்கள். எப்படிப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன, அவர்களுக்கு வாக்களித்தவர்கள் கூட எப்படிப்பட்ட கருத்துக்களை முன்மொழிந்து வருகின்றார்கள் என்பதையெல்லாம் நீங்கள் பார்த்துக் கொண்டு இருக்கின்றீர்கள். ஆக, ஒரு வார காலம் இப்பொழுது ஆகியிருக்கின்றது. இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருந்து பார்ப்போம். இந்த அரசு எப்படி செல்கிறது என்பதும், மக்களுக்கான திட்டங்களை எப்படி கொண்டு சேர்க்கின்றார்கள் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

ADVERTISEMENT

குதிரை பேரம்

கேள்வி: குதிரை பேரம் நடக்குது என்ற வார்த்தையை தொடர்ச்சியாக பார்க்க முடியுது. ஒவ்வொரு கட்சியும், எதிர்க்கட்சியும் குற்றம் சாட்டுறாங்க, இதை எப்படி பார்க்கிறீங்க?

செந்தில் பாலாஜி: நீங்க சட்டமன்றத்தில் பார்த்தீங்க… இப்ப அதிமுக என்ற ஒரு இயக்கம் இரண்டாகப் பிளவுபட்டு, ஒரு அணி வந்து ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படக்கூடிய ஒரு சூழலை அங்க பார்த்தோம். ஆகவே, சட்டமன்றத்தில் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியினுடைய தலைவர் பெருமக்கள் இது குறித்த கருத்துக்களை முன்மொழிந்து இருக்கின்றார்கள், நீங்களும் அதைப் பார்த்தீங்க. பொதுமக்களும் அதைப் பார்த்துகிட்டு தான் இருக்காங்க.

ADVERTISEMENT

அதனால வந்து, இந்த அரசு எப்படிச் செல்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். மக்களுக்கான… அவங்க என்னன்னா, எங்களுடைய சட்டமன்றத்தினுடைய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மிகத் தெளிவாக அந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது உரையாற்றுகின்ற பொழுது, அவர்கள் தேர்தல் நேரத்தில் என்னென்ன வாக்குறுதிகளைக் கொடுத்தார்களோ அதையெல்லாம் பட்டியலிட்டு, ‘இதையெல்லாம் நீங்கள் நிறைவேற்ற வேண்டும், அதற்கு கால அவகாசம் வேண்டும்’ என்று கேட்டிருக்கின்றீர்கள், ‘ரொம்ப நாள் எடுத்துக்காதீங்க, செய்வதற்கான முயற்சிகளை முன்னெடுங்கள்’ என்று சொல்லியிருக்கின்றார்கள். நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

எஸ்பி வேலுமணியிடம் பேசியது என்ன?

கேள்வி: ”செந்தில் பாலாஜியுடன் எஸ்பி வேலுமணி என்ன உரையாடினார்?” என எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளாரே?

செந்தில் பாலாஜி: சட்டசபை லாபியில வரும்போது அங்க நின்னுகிட்டு இருந்தாங்க…எஸ்பி வேலுமணி, புதுக்கோட்டை விஜயபாஸ்கர், எங்க எம்எல்ஏஸ் எல்லாரும் நின்னுகிட்டு இருந்தாங்க. அப்ப நாங்க சைன் பண்ணும்போது, அந்த இடத்துல கையெழுத்து போடக்கூடிய இடம் அது. கையெழுத்து போடும்போது அவங்களும் இருந்தாங்க, நாங்களும் இருந்தோம்.. மற்றபடி வேறொன்றும் நாங்க வந்து அரசியல் சம்பந்தப்பட்ட கருத்துக்கள் எதுவும் பேச வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்ல, நாங்க பேசவும் இல்லை.

என்ன மாற்றம் கொண்டு வரப் போறீங்க?

கேள்வி: மக்கள் இந்த முறை வந்து எப்படி வாக்களிச்சிருக்காங்க? இது என்ன ஒரு செய்தி சொல்ல வருது? உண்மையான மாற்றத்தை எதிர்பார்க்கிறாங்களா?

செந்தில் பாலாஜி: உண்மையான மாற்றத்தை நீங்க ஒரு வாரம் பார்க்கிறீங்க, என்னென்னவெல்லாம் மாற்றங்கள் நடந்திருக்குன்னு. ஆக, உண்மையான மாற்றங்கள் என்ன நடக்கப் போகுதுங்கிறதை பொறுத்திருந்து பார்க்கணும். அதாவது என்னைப் பொறுத்தவரைக்கும் நான் உங்ககிட்ட கேட்கக்கூடிய ஒரே ஒரு கேள்வி, பொதுவாக என்னன்னா… மாற்றம்னா என்ன?

இந்தியால தொழில்துறையில தமிழ்நாடு நம்பர் ஒன், அதுல என்ன நீங்க மாற்றங்கள் கொண்டு வரப்போறீங்க? உயர்கல்வி சேர்க்கையில இந்தியால தமிழ்நாடு நம்பர் ஒன், அதுல என்ன நீங்க மாற்றங்களைக் கொண்டு வரப்போறீங்க? மருத்துவத்துல இந்தியால தமிழ்நாடு நம்பர் ஒன், அதுல என்ன நீங்க மாற்றங்களைக் கொண்டு வரப்போறீங்க? பொருளாதார வளர்ச்சியில இந்தியால தமிழ்நாடு இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டியிருக்கு, அதுல என்ன நீங்க மாற்றங்களைக் கொண்டு வரப்போறீங்க?

ஆக பொதுவாக, மாற்றம் என்று சொன்னால் ஒரு கொள்கை ரீதியான ஒரு முடிவு இருக்கணும். ‘நாங்க வந்து கல்வியில இந்த மாற்றங்களைச் செய்யப் போறோம், நாங்க மருத்துவத்துல இந்த மாற்றங்களைச் செய்யப் போறோம், நாங்கள் தொழில்துறையில இந்த மாற்றங்களைச் செய்யப் போறோம்’ அப்படிங்கிறதெல்லாம் அவங்க தேர்தலுக்கு முன்பாக எதையும் சொல்லல. ‘இதெல்லாம் நாங்க செய்யறோம்’ங்கிற அந்த வாக்குறுதிகளையும் அவங்க கொடுக்கல.

ஆக பொதுவாக, சில சமூக வலைத்தளங்கள், சில பத்திரிகைகள், சில தொலைக்காட்சிகள் தான் சில நேரங்கள்ல ‘மாற்றம் மாற்றம்’ அப்படிங்கிறாங்க. என்ன விதமான மாற்றம்ங்கிறதை சொன்னாத்தான் அது சரியா தவறான்னு கருத்துக்களைச் சொல்ல முடியும். ஆக, ஒரு வளர்ச்சி பெற்ற மாநிலமாக, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக நம்முடைய மாண்புமிகு எங்களுடைய கழகத் தலைவர் அவர்கள் முதலமைச்சராக இருந்து தமிழ்நாட்டை வழிநடத்தி இருக்கின்றார்கள்.

இதைத் தக்க வச்சாலே போதுமானது. இதுக்கு மேல அவங்களுடைய சக்திகள் அதிகமாக இருந்து, இந்த நிலையை விட அடுத்த நிலைக்கு அழைத்துச் சென்றால் பாராட்டிற்குரியது. ஆனால், இதிலிருந்து தமிழ்நாடு பின்நோக்கிச் செல்லாமல் இந்த நிலையைப் பாதுகாத்து எடுத்துச் சென்றால் இதுவே மக்களுக்குப் பல்வேறு நிலைகள்ல ஒரு உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லக்கூடிய ஒரு வாய்ப்பாக இருக்கும்.

ஆட்சி கவிழுமா?

கேள்வி: இந்த அரசு விரைவில் கவிழும், நாடாளுமன்றத்தோடு சட்டமன்றத் தேர்தல் வர வாய்ப்புகள் இருக்குன்னு ஸ்டாலின் சொல்லியிருக்கிறாரே, அதுக்கான வாய்ப்புகள் தென்படுதா?

செந்தில் பாலாஜி: எங்களுடைய தலைவர் ஸ்டாலின், அது குறித்த சில கருத்துக்களைச் சொல்லியிருக்காங்க. இன்னைக்கு இருக்கிற சூழ்நிலையை நம்ம பார்த்துட்டு இருக்கிறோம், நீங்களும் பார்த்துட்டு இருக்கிறீங்க, பொதுமக்களும் பார்த்துட்டு இருக்கிறாங்க. ஒரு எதிர்பார்ப்போடு மக்கள் வாக்களித்ததாகத் தான் நாங்க நினைக்கிறோம், நான் நினைக்கிறேன். அந்த எதிர்பார்ப்புகள் எந்த அளவிற்கு இந்த அரசு பூர்த்தி செய்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். வரக்கூடிய நாட்கள்ல நம்ம இங்கதான் இருக்கப் போறோம், உங்களோடுதான் நானும் இருந்து பணியாற்றப் போறேன். என்னுடைய கோவை தெற்கு தொகுதியினுடைய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமர்ந்து எங்களுடைய மக்களைச் சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்ற இருக்கின்றோம். பொறுத்திருந்து பார்ப்போம். இவ்வாறு செந்தில் பாலாஜி கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share