பருத்தி மீதான இறக்குமதி வரி தற்காலிகமாக ரத்து!

Published On:

| By Pandeeswari Gurusamy

Temporary suspension of import duty on cotton

பருத்தி மீதான இறக்குமதி வரிகளை நீக்க வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், வரும் செப்டம்பர் 30 வரை தற்காலிகமாக ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 25 சதவிகிதம் அளவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உயர்த்தினார். மேலும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததால் இந்தியாவிற்கு அபராதம் விதிக்கும் வகையில் ஆகஸ்ட் 7ம் தேதி மேலும் 25 சதவிகித வரியை அமெரிக்கா உயர்த்தியது. இந்த வரி விகித உயர்வு ஆகஸ்ட் 27ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. டிரம்பின் இந்த வரிவிதிப்பால் இந்தியா ஏற்றுமதியில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என தொழில்துறையினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

குறிப்பாக இந்திய ஆயத்த ஆடைகள் (RMG) ஏற்றுமதிக்கு அமெரிக்கா ஒரு முக்கிய சந்தையாக இருப்பதால், அமெரிக்காவின் அதிக வரிகளால் ஜவுளித் துறை மிகவும் பாதிக்கப்படும். 2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த ஆடை ஏற்றுமதியில் அதன் பங்கு 33 சதவீதமாக இருந்தது என்று ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (AEPC) தெரிவித்திருந்தது.

இந்நிலையில் “உள்நாட்டு பருத்தி விலைகள் சர்வதேச விலைகளுடன் ஒத்துப்போக உதவும் வகையில் பருத்தி மீதான இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்று இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு ( CITI ) நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறது.

ADVERTISEMENT

டிரம்ப் 50 சதவிகிதம் வரை வரியை உயர்த்தி அறிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பருத்தி மீதான இறக்குமதி வரியை நீக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இதைத்தொடர்ந்து அமெரிக்காவின் 50 சதவீத வரிகள் காரணமாக ஜவுளித் துறையில் வேலை இழப்பு ஏற்படும் என்ற பரவலான அச்சம் நிலவுவதால், இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையான அமெரிக்க சந்தையில் இந்தியப் பொருட்கள் போட்டித்தன்மையற்றதாக மாறும் நிலையில், பருத்தி இறக்குமதிக்கான 11 சதவீத வரியை இடைக்காலமாக நீக்குவதாக நிதி அமைச்சகம் நேற்று (ஆஅகஸ்ட் 18) அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

பருத்தி மீதான இறக்குமதி வரி மற்றும் வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி (AIDC) ஆகியவற்றை நீக்குவது “பொது நலனுக்காக அவசியம்” என்றும், அந்த அறிவிப்பு இன்று (ஆகஸ்ட் 19) முதல் செப்டம்பர் 30 வரை அமலில் இருக்கும் என்றும் அரசு சார்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share