தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்து இரண்டு நாட்கள் தான் ஆகின்றது, அதற்குள் இத்தனை கேள்வி கேட்கின்றீர்கள். படுத்துக்கொண்டு யோசித்து கேள்வி கேட்டால் என்ன செய்ய முடியும் என அமைச்சர் செங்கோட்டையன் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
கோவை விமான நிலையத்தில் தமிழக நிதியமைச்சர் செங்கோட்டையன் இன்று (மே 17) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “முதல்வர் என்ன நினைக்கிறாரோ அதை நிறைவேற்ற வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது.”என்றார்
ஊழல் இல்லாத ஆட்சி என்பது குறித்த கேள்விக்கு, “பொறுத்திருந்து பாருங்கள்” என பதில் அளித்தார்.
10 பேர் மட்டும் அமைச்சரவையில் இருப்பது குறித்த கேள்விக்கு, “அமைச்சரவை என்பது இப்படித்தான் இருக்கும். ஜெயலலிதா இருக்கும்பொழுது ஏழு பேர் தான் முதலில் அமைச்சர்களாக போட்டார்கள், பின்னர் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டது.
முதலமைச்சர் நிலையிலிருந்து எப்படி இயக்க வேண்டியது என்பது அவர்தான் முடிவு செய்ய வேண்டும். எங்களை பொறுத்தவரையில் ஒரே ஒரு கருத்தை சொல்ல விரும்புகின்றோம், நான் என்று ஒருவர் நினைத்தால் ஆண்டவன் தான் என்று காட்டுவார்” என தெரிவித்தார்.
கஜானா காலி என்று விஜய் சொல்லி இருக்கும் நிலையில் உங்களுக்கு நெருக்கடி எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு, “நெருக்கடிகளை சமாளிக்கின்ற திறமை தமிழக வெற்றிக் கழக தலைவர் நிரந்தர முதல்வர் விஜயால் முடியும்” என்றார்.
கஜானா காலி என்பது சரியான பதமா? என்ற கேள்விக்கு, “பொருளாதாரம் என்பது படிப்படியாக ஆய்வு செய்து தான் தெளிவான விளக்கம் சொல்ல முடியுமே தவிர நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு உடனடியாக பதில் சொல்ல முடியாது” என பதில் அளித்தார்.
மேலும் பேசிய அவர், “எடப்பாடி பழனிசாமி நிலைப்பாடுகளை பார்க்கும் பொழுது ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோரது இயக்கம் (அதிமுக)அவரால் வலுவிழுந்து இருக்கிறது. தான் ஒருவர் மற்றும் போதும் என்று அவர் நினைக்கிறார், காலத்தின் கட்டாயம், அதை மாற்றி காட்டுவோம்” என்றார்.
மகளிர் உரிமை தொகை சிலருக்கு போகவில்லை என்று தகவல் குறித்த கேள்விக்கு, “ஆட்சிக்கு வந்து இரண்டு நாட்கள் தான் ஆகின்றது, அதற்குள் இத்தனை கேள்வி கேட்கின்றீர்கள். படுத்துக்கொண்டு யோசித்து கேள்வி கேட்டால் என்ன செய்ய முடியும். இப்பொழுதுதான் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பொழுது தான் சென்னை செல்கிறேன் அதற்குள் இத்தனை கேள்வி கேட்டால் நான் என்ன சொல்வது? உங்கள் வீட்டு பொருளாதாரத்தை உடனே கேட்டால் சொல்ல முடியுமா? முதல்வர் ஒவ்வொன்றாகத்தான் செய்வார் , எடுத்த உடனேயே அவர் சொன்னது 200 யூனிட் மின்சாரம்,
அதை மக்கள் வரவேற்றார்கள் , மகளிருக்கு பாதுகாப்பு அளிப்பது, போதை பொருள் தடுப்பது என தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.
டாஸ்மாக் கடைகள் எங்கெங்கு இருக்கிறது என்பதை அறிந்து பேருந்து நிலையம், ஆலயம் ஆகிய இடங்களில் இருக்கக்கூடாது என முடிவு செய்து 717 கடைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் பெரிய சாதனை. பொறுப்பேற்றவுடன் இவ்வளவு சாதனைகள் செய்திருப்பது இந்தியாவில் இவரை தவிர வேறு யாரும் இல்லை.” என்றார்.
அதிமுகவுக்கு எவ்வளவு அமைச்சர்கள் என்ற கேள்விக்கு , “நீங்கள் தான் சொல்ல வேண்டும் , நாங்கள் இதுவரை ஒன்றும் சொல்லவில்லை” என்றார்.
