திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் (Trichy East Bypoll) திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி (Anbil Mahesh) போட்டியிடுகிறார்.
சட்டசபை தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய 2 தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டியிட்டார். இந்த 2 தொகுதிகளிலும் விஜய் வெற்றி பெற்றார். இதனையடுத்து திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை விஜய் ராஜினாமா செய்தார்.
கடந்த மே 10-ந் தேதி தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர்.
இந்நிலையில் திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இத்தொகுதிக்கு விரைவில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.
விஜய் முதல்வரான பின்னர் நடைபெறும் முதல் இடைத் தேர்தல்; விஜய் வெற்றி பெற்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் என்பதால் பெரும் கவனம் பெற்றுள்ளது.
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட திமுக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
இந்நிலையில் திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தாம் போட்டியிடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். இது தொடர்பாக ஆலோசனை நடத்திய திமுக தலைவர் ஸ்டாலினும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போட்டியிடுவதற்கு ஒப்புதல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து தேர்தல் களப் பணிகளை அன்பில் மகேஷ் தொடங்கிவிட்டார். திருச்சி கிழக்கு தொகுதியானது திமுகவின் திருச்சி தெற்கு மாவட்டத்தில் இடம் பெறுகிறது. திருச்சி தெற்கு மாவட்ட செயலாளராகவும் அன்பில் மகேஷ் இருப்பதால் தேர்தல் களப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
தவெக வேட்பாளர் யார்?
இதனிடையே திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக வேட்பாளராக போட்டியிட கடும் போட்டி நிலவுகிறது. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் உட்பட பல முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் கடுமையாக முயற்சித்து வருகின்றனர். தவெகவின் மூத்த தலைவரான, லால்குடியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த கு.ப.கிருஷ்ணனன் தமது மகனுக்கு திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு பெறுவதில் மும்முரமாக இருந்து வருகிறார்.
2026 திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் முடிவுகள்
- ஜோசப் விஜய் (தவெக)- 91,381
- இனிகோ இருதயராஜ்(திமுக)- 63,965
- ராஜசேகரன் (அதிமுக) 19,715
- டாக்டர் கிருஷ்ணசாமி (நாதக) 4,790
தவெக தலைவர் விஜய் 27,416 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்
