முதல்வர் விஜய் தலைமையிலான ஒன்பது அமைச்சர்களுக்கான துறைகள் நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டன இதில் பள்ளிக்கல்வித்துறை தமிழ் வளர்ச்சித் துறை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக ராஜ்மோகன் நியமிக்கப்பட்டுள்ளார் அவரது நியமனத்திற்கு நடிகர் விஷால் இன்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில்,”முதல்வர் விஜய் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பொறுப்பான அமைச்சரவை துறைகளை நீங்கள் ஒதுக்கீடு செய்துள்ளதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறோம். எனினும், நமது ‘திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் சினிமாட்டோகிராஃப் சட்டம்’ (Film Technology and Cinematograph Act) துறையின் புதிய அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர் ராஜ்மோகன் இந்தத் துறையில் போதிய அனுபவம் இல்லை என்பது சற்று வருத்தமளிக்கிறது.
ஏனெனில், நமது முதலமைச்சராகிய நீங்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அடிமட்டத்திலிருந்து இந்தத் திரையுலகின் ஒரு அங்கமாக இருந்து வருகிறீர்கள். திரையுலகின் சவால்களை உங்களை விட யாராலும் இவ்வளவு ஆழமாகப் புரிந்துகொள்ள முடியாது. தற்போது நலிவடைந்து வரும் நமது திரைத்துறையை மீட்டெடுக்கவும், தயாரிப்பாளர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை வழங்கவும் பல சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. இந்தச் சூழ்நிலையில், திரையுலகம் குறித்த புரிதல் குறைவாக உள்ள ஒரு அமைச்சரிடம் எங்கள் சங்கத்தின் மூலமாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ கோரிக்கைகளையும் குறைகளையும் எப்படிக் கொண்டு சேர்ப்பது என்ற தயக்கம் எங்களிடம் உள்ளது.
மாண்புமிகு அமைச்சர் ராஜ்மோகனை குறைத்து மதிப்பிடுவது எங்கள் நோக்கமல்ல, இது எங்கள் திரையுலகச் சூழல் குறித்த ஒரு ஆதங்கம் மட்டுமே. எனவே, அன்புகூர்ந்து முதலமைச்சர் பின்வரும் மிக முக்கியமான கோரிக்கைகளைப் பரிசீலித்து, திரைத்துறைக்குத் தேவையான நிவாரணங்களை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்:
முக்கியக் கோரிக்கைகள்:
அரசு டிக்கெட் முன்பதிவு இணையதளம் (Govt Ticketing Window):
அரசின் மூலமாகத் தனியாக ஒரு டிக்கெட் முன்பதிவு தளத்தை அறிமுகப்படுத்த வேண்டும். இது அரசுக்குக் கூடுதல் வருவாயைக் கொண்டு சேர்ப்பதுடன், தற்போது டிக்கெட் ஒன்றுக்கு ரூ.30 வரை கூடுதல் கட்டணம் செலுத்தி வரும் பொதுமக்களுக்கும் பெரிய நிம்மதியாகவும், சுமையைக் குறைப்பதாகவும் அமையும்.
உள்ளாட்சி அமைப்புகள் வரி (Local Body Tax) ரத்து:
நாடு முழுவதும் “ஒரே நாடு, ஒரே வரி” (GST) என்ற நடைமுறை இருக்கும் போது, தியேட்டர் டிக்கெட்டுகளுக்கு இரட்டை வரி விதிக்கும் ஒரே மாநிலமாகத் தமிழ்நாடு நீடிக்கிறது. இந்த உள்ளாட்சி அமைப்புகள் வரியை உடனடியாக முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
சிறு பட்ஜெட் படங்களுக்கான மானியத்தை உயர்த்துதல்:
தற்போது சிறு பட்ஜெட் மற்றும் நடுத்தரத் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் மானியத் தொகை மிகவும் சொற்பமாக உள்ளது. எனவே, ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் இந்த மானியத் தொகையை கணிசமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் திரையுலகத்தினர் தொடர்ந்து இதே கோரிக்கைகளைத் தான் முன்வைத்து வருகின்றனர். அடிமட்டத்திலிருந்து வந்த நீங்களாவது இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வைத் தந்து, நலிந்து வரும் திரைத்துறைக்கு மறுவாழ்வு அளிப்பீர்கள் என்று முழுமையாக நம்புகிறோம்.” என குறிப்பிட்டுள்ளார்.
