நாங்கள் போட்டியிடுவோம்.. ஆனால்.. ரஜினி குறித்து மனம் திறந்த கமல்

Published On:

| By Pandeeswari Gurusamy

kamal

சென்னையில் இன்று (மே 17) செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “விஜயை சின்ன வயதில் இருந்து பார்த்துக்கொண்டே இருக்கிறேன். அவர் சிஎம் ஆவதில் எனக்கு என்ன பொறாமை? அரசியலில் நான் இல்லை என்று சொல்லி விலகியாச்சு. அரசியலில் நான் இல்லாதபோது, அவர் மேல் எனக்கு ஏன் பொறாமை? ஒருவேளை கமல்ஹாசன் ஏதாவது முதலமைச்சர் ஆகியிருந்தால் எனக்குப் பொறாமை வந்திருக்குமோ என்னமோ தெரியாது! அப்போ கூட வந்திருக்காது. ‘கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்கிறது கிடைக்காது’ எனத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து இன்று மதுரை விமான நிலையத்தில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “எப்போது மதுரைக்கு வந்தாலும் இந்த அன்பு சூழ்ந்து கொண்டே இருக்கிறது. சந்தோஷம்” என்றார்.

ADVERTISEMENT

விஜய் முதல்வராக பதவியேற்று ஆட்சி நடத்தி வருவது எப்படி உள்ளது என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “இரண்டு நாட்கள், ஆறு நாட்கள், 15 நாட்களில் சொல்லக்கூடியது ஜோசியமாகத்தான் இருக்க முடியும். புதியவர்கள் நிறைய பேர் வந்திருக்கிறார்கள். அதனால் ஒரு ஆறு மாதம் டைம் கொடுக்க வேண்டாமா? புதியவர்கள் என்பது அரசியலுக்கு புதிது கிடையாது.

சுதந்திரம் கிடைத்தபோது எல்லோரும் புதிய அமைச்சர்கள் தான். முதியவர்களை நாம் குறைவாக எடை போடவும் வேண்டாம், அதிகமாக எதிர்பார்க்கவும் கூடாது. நீங்கள் தானே ஓட்டு போட்டீர்கள். அது நல்லபடியாக நடக்கிறதா என்பதை நீங்கள் தான் கவனிக்க வேண்டும். நாங்களும் கண்காணிக்கிறோம்” என்றார்.

ADVERTISEMENT

திராவிட கட்சிகள் இல்லாத புதிய ஆட்சியை கொண்டு வந்திருக்கிறார் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் பேசும் ஒருவர் கட்சி ஆரம்பித்தால் என்னைப் பொருத்தவரை அது திராவிட கட்சி தான்” என்றார்.

மும்மொழிக் கொள்கை கட்டாயம் என சிபிஎஸ்இ கூறுவது குறித்த கேள்விக்கு, “தமிழ்நாட்டை கட்டாயப்படுத்த முடியுமா பார்த்திருக்கிறோம் இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.

ADVERTISEMENT

ரஜினிகாந்த் “விஜய் வெற்றி பெற்றது எனக்கு ஆச்சரியம் கலந்த ஒரு சந்தோஷம். ஒருவேளை கமல் முதல்வராகி இருந்தால் கூட நான் பொறாமைப்பட்டிருப்பேன்” என்று சிரித்தவாறு கூறியது குறித்த கேள்விக்கு, “ரஜினிகாந்த் சிரிப்போடு தான் சொன்னாரே தவிர, நாங்கள் இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்து பொறாமைப்பட்டது கிடையாது. நாங்கள் போட்டியிடுவோமே தவிர பொறாமைப்பட்டது கிடையாது” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share