”இப்படி எல்லாம் பேசுவதா?” ரூ.10.5 லட்சம் கோடி சர்ச்சை.. அமைச்சர் கீர்த்தானாவுக்கு ‘டோஸ்’ விட்ட தங்கம் தென்னரசு

Published On:

| By Mathi

Thangam Thennarasu vs Keerthana

திமுக ஆட்சியில் “ரூ10.5 லட்சம் கோடி (Rs 10.5 Lakh Crore) எடுத்துட்டு கழுவிட்டுப் போய்ட்டாங்க”என தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் (Minister Keerthana) பேச்சுக்கு முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு (Thangam Thennarasu) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தங்கம் தென்னரசு தமது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: முற்றிலும் உண்மைக்குப் புறம்பாகவும், மாநிலத்தின் நிதி நிர்வாகம் குறித்தான சாதாரண அடிப்படைப் புரிதல் இல்லாமலும், “பத்தரை லட்சம் கோடி எடுத்துட்டு கழுவிட்டுப் போய்ட்டாங்க” என்று போகிற போக்கில் புழுதி வாரித் தூற்றி, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தொழில்துறை அமைச்சர் அவர்கள் அவதூறு பரப்புவதும், உள் நோக்கோடு கழகத்திற்கு எதிராக ஆதாரமில்லாமல் மக்களிடையே ஒரு மாய பிம்பத்தை சமூக வலைதள ஜோடனைகள் மூலம் கட்டமைக்க முயற்சிப்பதும், விஷமத்தனமானது மட்டுமல்ல; வன்மையாகக் கண்டிக்கத்தக்கனவும் ஆகும்.

ADVERTISEMENT

இட்டுக்கட்டி கூறுவதா?

அரசு நிர்வாகத்தில் அனுபவமின்மை காரணமாக, மக்களை ஏமாற்றிக் குழப்பும் வகையில் தமிழ்நாட்டின் நிதி நிர்வாகம் குறித்து இட்டுக்கட்டிக் கூறுவது அவரது முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது எனினும், அரசு நிர்வாகத்திலும், அமைச்சரவையிலும் பல ஆண்டுகள் அனுபவமிக்கவரான செங்கோட்டையன் அவர்களும், நிதித்துறை நிர்வாக நடைமுறைகளில் நேரடி அனுபவமிக்க தற்போதைய நிதித்துறை செயலாளர் அவர்களும் இடித்துரைத்து தொழில் துறை அமைச்சரின் கற்பனைக் குதிரைக்குக் கடிவாளம் போட்டு நிறுத்த முன்வருவார்களா? அல்லது பொய்யும், புனைகதைகளும் மிக்க இத்தகைய மலிவான பிரச்சாரங்களுக்குத் துணை போகப் போகிறார்களா? இவ்வாறு தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share