கேரள முதல்வராக வி.டி.சதீஷன் தேர்வு

Published On:

| By Pandeeswari Gurusamy

V.T. Satheesan

கேரள மாநில முதல்வராக இன்று (மே 14) வி.டி. சதீஷனை காங்கிரஸ் கட்சி தேர்வு செய்துள்ளது.

கேரள மாநில சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த நான்காம் தேதி நடைபெற்றது.

ADVERTISEMENT

கேரளாவில் 102 தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) வெற்றி பெற்ற நிலையில், முதல்வர் பதவிக்கு கட்சிக்குள் கடும் போட்டி நிலவியது. அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.டி. சதீஷன், மற்றும் மூத்த தலைவர் ரமேஷ் சென்னித்தலா ஆகியோரின் பெயர்கள் முதல்வர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டன.

சட்டப்பேரவைக்குத் தேர்வான காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு அறிக்கை தாக்கல் செய்ய, அஜய் மக்கான் மற்றும் முகுல் வாஸ்னிக் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த அறிக்கை கட்சித் தலைமையிடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், கே.சி.வேணுகோபால், வி.டி சதீஷன் மற்றும் ரமேஷ் சென்னிதலா ஆகியோரிடம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர்.

முதல்வரைத் தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்ததால் காங்கிரஸ் தலைமை திணறியது. இந்த நிலையில், 10 நாட்களுக்கு மேலாக நிலவிய உட்கட்சிப் போராட்டம் இன்று முடிவுக்கு வந்துள்ளது. வி.டி சதீஷனை கேரள முதல்வராகவும், காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவராகவும் தேர்ந்தெடுத்துள்ளதாக காங்கிரஸ் தலைமை இன்று அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து, கேரளாவில் விரைவில் முதல்வர் பதவியேற்பு மற்றும் அமைச்சரவைப் பதவியேற்புக்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share