தவெக தலைவர் விஜய் குதிரைப் பேரத்தில் ஈடுபடவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் தவெக அரசு மீது நேற்று நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீது உறுப்பினர்கள் உரையாற்றினர். அப்போது பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “சபையில் பெரும்பான்மையை நிரூபிக்க குதிரைப் பேரம் நடந்துள்ளது. தமிழக வரலாற்றில் இது நடக்காத விஷயம். முதல்வர் விஜய், ‘நான் யாரையும் சந்திக்க முகமூடி அணிந்து செல்ல மாட்டேன்’ என்று பேசிய நிலையில், தன்னைச் சந்திக்க வாகனத்தில் முகத்தை மூடிக்கொண்டு வந்தவர் யார் என்பதை அவர் தெரிவிக்க வேண்டும். பெரும்பான்மையை நிரூபிக்க குதிரைப் பேரம் என்றால், அதைவிட ஒரு தலைகுனிவு இந்த சபைக்குத் தேவையில்லை” என்றார்.
இதற்கு பதிலடி கொடுக்கம் வகையில் சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் ஜோசப் விஜய், “இந்த அரசு குதிரை வேகத்தில் செயல்படும் அரசே தவிர, குதிரைப் பேரத்தில் ஈடுபடும் அரசு அல்ல” என்றார்.
இதைத் தொடர்ந்து நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “முதல்வர் விஜய், சட்டப்பேரவையில் திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைத்துள்ளார். ஏற்கனவே 120 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவுடன் விஜய் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டார். அதிமுகவிடம் ஆதரவு கோர வேண்டிய அவசியம் இல்லை.
இருப்பினும், அதிமுக ஆதரவு கொடுக்க முன்வந்தால் அதை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை. அமமுகவில் இருக்கும் ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர் தாமாக முன்வந்து ஆதரவு அளிப்பது குதிரைப் பேரமாகாது. பெரும்பான்மையை நிரூபிக்க விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை.
திராவிடக் கட்சிகளைத் தோற்கடிக்க வேண்டும் என்பது அவரது நோக்கமும் அல்ல. அவர் ஆட்சி அமைக்க முயற்சித்து அதில் வெற்றி பெற்றுள்ளார்” என்று தெரிவித்தார்.
