சட்டப்பேரவையில் இன்று தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.
அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.
இதுதொடர்பாக முதல்வர் விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதில், மேஜிக்கல் நம்பர் நமக்கு இல்லை என்று கூறும் தி.மு.க., அவர்கள் செய்ய முடியாத மக்கள் நலன் சார்ந்த பலவற்றை மேஜிக்கலாகவும் மிராக்கிளாகவும் நமது அரசு செய்து காட்டப் போவதைப் பார்க்கத்தான் போகின்றனர். ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக நாம் சாதித்துக் காட்டத்தான் போகின்றோம். அப்போதும் சொத்தைக் காரணங்களைக் கூறி, இந்தத் தி.மு.க. தப்பிக்கத்தான் பார்க்கும். அதையும் நம் மக்கள் பார்க்கத்தான் போகின்றனர் என கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள உதயநிதி ஸ்டாலின், “ பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட – மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி” என்று விமர்சித்துள்ளார்.
