தொடரும் நலத்திட்டங்கள்.. கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1000 வரவு வைப்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

முந்தைய திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் வங்கிக் கணக்குகளில் இன்று ரூ.1,000 வரவு வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக கடந்த 10ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பேற்றார். பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் பேசும்போது, அரசின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு, சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு மற்றும் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன.திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை, மற்றும் புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வந்தது. தவெக ஆட்சி அமைத்த நிலையில், கடந்த ஆட்சியின் நலத்திட்டங்கள் தொடருமா என்ற ஐயம் எழுந்தது.

இது குறித்து நேற்று சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்கள் இந்த ஆட்சியிலும் தொடர வேண்டும்” என வலியுறுத்தினார். அப்போது பதிலளித்த முதலமைச்சர் ஜோசப் விஜய், முந்தைய அரசின் முக்கியத் திட்டங்கள் தொடரும் என உறுதியளித்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில், புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்களின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1,000 அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share