2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. திமுக கூட்டணி 73 இடங்களுடன் இரண்டாவது இடத்திலும், அதிமுக கூட்டணி 53 இடங்களுடன் மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டது. அதிமுக 47 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது.
கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சியை இழந்திருந்த அதிமுக இந்த முறையும் தோல்வியைச் சந்தித்ததால் கட்சியினரிடையே அதிருப்தி எழுந்துள்ளது. இதற்கிடையில் திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்ற தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் அதிமுகவில் கருத்துக்கள் நிலவி வருகிறது. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் எடப்பாடிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். இதனால் அதிமுகவுக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது.
சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் தனியாகக் கூடி, தவெக அரசுக்கு ஆதரவு கொடுப்பது என்றும், அதிமுகவின் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்றும் முடிவு செய்தனர். சட்டசபையில் அதிமுக குழு தலைவராக எஸ்.பி. வேலுமணியைத் தேர்வு செய்தனர்.இதனிடையே எடப்பாடி பழனிசாமியை சட்டசபை குழுத் தலைவராகத் தேர்வு செய்து அவரது தரப்பினர், தற்காலிக சபாநாயகராக இருந்த கருப்பையாவிடம் கடிதம் வழங்கினர். அதேபோல் எஸ்.பி. வேலுமணியை சட்டசபை குழுத் தலைவராகத் தேர்வு செய்து சி.வி. சண்முகம் தரப்பினர் சபாநாயகரிடம் கடிதம் அளித்தனர். இதனால் அதிமுக அணி இரண்டாக உடையும் சூழல் உருவானது.
இந்நிலையில் நேற்று தமிழக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்ட அதிமுக அணியினர் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்ட 26 பேரின் மாவட்டச் செயலாளர் பதவியைப் பறித்து எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தார்.
இரு அணிகளுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் பதவிப் பறிப்பு வரை தொடர்வதால் அதிமுக தரப்பினரிடையே பெரும் பதற்றம் நிலவுகிறது. இதைத் தொடர்ந்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது.
அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த தலைவர் சி.வி. சண்முகம் ஆகிய இரு தரப்பினரிடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக அதிமுகவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
