அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பாதிப்பா? – சிவி சண்முகம் திட்டவட்டம்

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழக சட்டமன்ற தேர்தலில் இரண்டாவது முறையாக அதிமுக தோல்வி அடைந்த நிலையில் அதிமுகவினர் இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தலைமையில் ஒரு அணியும் பிரிந்து மோதலில் ஈடுபட்டனர். நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவி சண்முகம் தரப்பு அரசுக்கு ஆதரவு அளித்துள்ளது.

இந்நிலையில் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி. சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோரைக் கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்தார். இது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று சென்னை எம்சிஆர் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய சிவி சண்முகம், “நாங்கள் ஏதோ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அலுவலகத்துக்கு நாங்கள் வரப் போவதாக வெளியான செய்தியின் அடிப்படையில் காவல் துறை குவிக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். ஒன்றைத் தெளிவாகச் சொல்கிறோம். இந்த ரத்தம் அதிமுகவின் ரத்தம். எங்களை சாதாரண உறுப்பினர்களாக, சட்டமன்ற உறுப்பினர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, அமைச்சர்களாக பதவிகளை கொடுத்து அழகு பார்த்த இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். புரட்சித் தலைவர் எம்ஜிஆர், அம்மா அவர்கள் கட்டிக் காப்பாற்றிய அந்த இயக்கம்.

நாங்கள் மதிக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைக் கழகத்தை எங்கள் கோயிலாகவே நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ADVERTISEMENT

எந்த நிலையிலும், எந்தச் சூழ்நிலையிலும், எந்தக் காரணத்திற்காகவும் எங்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழகத்தில் ஒரு தூசி கூட படுவதற்கோ, எந்தவித பாதிப்பும் ஏற்படுவதற்கோ நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

எந்த நிலையிலும், எந்தச் சூழலிலும், எந்தக் காரணத்திற்காகவும் நாங்கள் அங்கு வர மாட்டோம். சட்டப்படி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உண்மையான தொண்டர்கள் என்பதை நிரூபித்த பிறகுதான் அங்கே எங்கள் கால் பதியும். ஆகவே யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. எந்த நிலையிலும், எந்தச் சூழ்நிலையிலும் எங்கள் கோயிலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அப்படியொரு நிலை ஏற்பட்டால், எங்கள் உயிர் மீதுதான் அந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைக் கழகத்தில் கால் வைக்க முடியும். ” என தெரிவித்தார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share