தி.மு.க எதிர்ப்பின் வடிவங்கள்: புனிதவாத அயர்ன் டோம்களும், மூட நம்பிக்கை டிரோன்களும்!

Published On:

| By Minnambalam Desk

Social Psychology of Rumors

ராஜன் குறை

தி.மு.க தேர்தல் தோல்விக்கான காரணங்களை கண்டறிய குழு அமைத்துள்ளது. அந்த கட்சிக்கு ஆளுமையிற் சிறந்த தலைவர் ஸ்டாலின் இருக்கிறார். ஆற்றல் மிக்க இளந்தலைவர் உதயநிதி இருக்கிறார். கட்சியில் ஆழ்ந்த அனுபவமிக்க மூத்தவர்களும், துடிப்புள்ள இளம் தலைமுறையினரும் இருக்கிறார்கள். நிச்சயம் அவர்கள் விரிவாக ஆராய்ந்து தக்கபடி எதிர்கால நடவடிக்கைகளை வகுப்பார்கள்.

ஒவ்வொரு தேர்தலும் ஒரு தனித்துவமான சூழ்நிலையில் நடைபெறுவது. பல்வேறு உடனடிக் காரணங்களால் வாக்குகள் இடம் பெயர்ந்துவிடும். எனவே அவற்றைக் குறித்து ஆராய்ந்து அறியவேண்டும். ஒவ்வொருவரும் வெவ்வேறு கோணத்தில் பல காரணங்களைக் கூறுவர். தாங்கள் உரையாடிய ஒரு சிலர் கூறியவற்றை வைத்து சில அம்சங்களைக் கூறுவார்கள். யாராலும் ஐந்து கோடி பேர் எப்படி சிந்தித்து வாக்களிக்கிறார்கள் என்று உறுதிபடக் கூற முடியாது.

ADVERTISEMENT

அதே சமயம் வரலாற்றுப் பார்வையில், மானுடவியல் பார்வையில் சில அம்சங்கள் தொடர்ச்சியாக இருக்கின்றன. அது தி.மு.க பார்ப்பனீய, ஜாதீய கருத்தியல் மேலாதிக்கத்தை எதிர்த்துப் போடும் எதிர்நீச்சல். இது மேலோட்டமான பார்வையில் பார்த்தால் புரியாது. சற்றே ஆழமாகக் கவனமாகப் பார்க்க வேண்டும். ஏன் தி.மு.க-விற்கு எதிராக பரப்பப்படும் வதந்திகள் எளிமையாக நம்பப் படுகின்றன? அதன் மீதான குற்றச்சாட்டுகள் எதனால் எளிதில் ஏற்கப்படுகின்றன? பகுத்தறிவு சார்ந்த அரசியலை முன்னெடுப்பதில் எத்தகைய சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது என்பதையெல்லாம் கணக்கில் கொள்ள வேண்டியள்ளது.

தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள உருவகம் சமகால போர் முறைகள் சார்ந்தது. இப்போதெல்லாம் தொலைதூரம் பாயும் ஏவுகணைகளை நாடுகள் ஒன்றன்மீது ஒன்று ஏவிக்கொள்கின்றன. அந்த ஏவுகணைகள் வருவதை கண்டறிந்து சுட்டுவீழ்த்தும் ஆற்றல் கொண்ட ரேடார்களும், தடுப்புக் கணைகளும் கொண்ட அமைப்புகளை ஒவ்வொரு நாடும் நிறுவிக்கொள்கிறது. இஸ்ரேல் நாட்டின் ஆற்றல் மிகுந்த ஏவுகணைத் தடுப்பு வலைப்பின்னலுக்கு இரும்பு விதானம், அயர்ன் டோம் என்று பெயர்.  இந்த அயர்ன் டோமின் கண்காணிப்புகளுக்குள் சிக்காமல் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த எதிரி நாடுகள் முயல்கின்றன.

ADVERTISEMENT

மானுடவியல் கோணத்தில் புனித மையங்களாக கட்டமைக்கப்படும் ஜாதீய உருவகங்கள் உருவாக்கும் புனிதவாதம் என்பது அயர்ன் டோம் போன்றது. பகுத்தறிவுக் கணைகள் ‘புனித மையங்களை’ தாக்காமல் பார்த்துக் கொள்ளும் திறன் கொண்டது. அதே சமயம் மூட நம்பிக்கை டிரோன்கள் தொடர்ந்து பகுத்தறிவுப் பரப்பை தாக்கியவண்ணம் இருக்கும். இந்த பின்னணிதான் தி.மு.க-வின் அரசியல் பயணத்தை சவால் மிகுந்ததாக ஆக்குகிறது; அதே சமயம் அதற்கு பெரும் வரலாற்று ஆற்றலையும் வழங்குகிறது. ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வரும்போதும் தி.மு.க தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் அடித்தளமிடும்.  தேர்தலில் சரிவைச் சந்திக்கும், ஆனாலும் மீண்டெழும். இந்த இயங்கியலை சற்றே விரிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

Social Psychology of Rumors

வதந்திகள் என்னும் சமூக உளவியல் பரப்பு

தேர்தலில் வாக்களிக்க இந்த முறை டில்லியிலிருந்து வந்தபோது டில்லி விமான நிலையத்தில் ஒருவர் என்னிடம் உரையாடினார். நெற்றியில் பொட்டு வைத்திருந்தார். பொதுவான சில விஷயங்களை பேசியபிறகு எந்த தொகுதியில் வாக்களிக்கப் போகிறேன் என்று கேட்டார். நான் சொன்னவுடன் அங்கே யார் வெற்றி பெறுவார்கள் என்று கேட்டார். நான் பட்டும் படாமல் பெரும்பாலும் அ.இ.அ.தி.மு.க-தான் அந்த தொகுதியில் வெற்றி பெறுகின்றது என்று கூறினேன். அவர் உடனே “கோயில்களை இடிப்பவர்கள் வெற்றி பெறாமல் இருக்க வேண்டும்” என்றார்.

ADVERTISEMENT

நான் அப்பாவியான தொனியில் “அ.இ.அ.தி.மு.க கோயில்களை இடிக்கிறதா?” என்று கேட்டேன். அவர் பதறிப்போய்விட்டார். காதருகே வந்து கிசு, கிசு குரலில் “தி.மு.க சார்” என்று கூறினார். நான் விடவில்லை. அதே அப்பாவிக் குரலில் “அப்படியா? எந்த ஊரில் கோயிலை இடித்தார்கள்?” என்று கேட்டேன். அவர் நிறைய கோயில்கள் என்றார்.

நான் சட்டென்று கறாரான குரலில் “ஒரு ஊர், ஒரு இடத்தையாவது சொல்லுங்கள். நான் தினமும் டிவி பார்க்கிறேன். செய்தித்தாள் படிக்கிறேன். அப்படி எதுவும் கேள்விப் படவில்லையே” என்றேன். அவர் உடனே, “இல்ல சார், வாட்ஸ்-அப்பில் நிறைய வருது. அதைத்தான் சொன்னேன்” என்று கூறினார். நான் “ஏன் சார், கோயிலை இடித்தால் டிவியில் செய்தி வராதா? வாட்ஸ் அப்பில் மட்டும் வருமா?” என்று கேட்டேன். ஒரு மாதிரி அசட்டு சிரிப்புடன் எழுந்து சென்றுவிட்டார்.

இப்படி ஒரு நபருடன் பேசியதை மட்டும் வைத்துக்கொண்டு நாம் தேர்தல் முடிவுகளுக்கான காரணங்களை யூகிக்க முடியாது. ஆனால் ஒரு அம்சத்தை சிந்திக்க முடியும். கடந்த ஐந்தாண்டுகால தி.மு.க ஆட்சியில் அமைச்சர் சேகர் பாபு அறநிலையத் துறைக்கு கணிசமாக வலுச்சேர்த்தார். ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்களை மீட்டார். ஏராளமான கோயிகளுக்கு திருப்பணி செய்தார். சன் நியூஸில் எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு ஊரில் கோயில் குடமுழுக்கு, கும்பாபிஷேகம் என்று செய்தி லைவாக போட்டுக்கொண்டே இருப்பார்கள்.

Social Psychology of Rumors

அது போதாது என்று அறநிலையத்துறை அமைச்சர் முருகன் மாநாடெல்லாம் நடத்தினார். இந்து முன்னணி அர்ஜுன் சம்பத்தையே மாநாட்டிற்கு அழைத்தார். பகுத்தறிவாளர்கள் விமர்சனத்தைச் சந்தித்தார். மற்றொருபுறம் முதலமைச்சரின் இணையர் துர்கா ஸ்டாலின் அம்மையாரே இறை நம்பிக்கை மிகுந்தவர். அவர் கோயில்களுக்கு செல்லும் காட்சிகளும் ஊடகங்களில் பரவலாக வெளிவந்துள்ளன.

இவ்வளவிற்கு பிறகும், தி.மு.க கோயில்களை இடிக்கும் கட்சி என்று எப்படி வதந்தி பரப்ப முடிகிறது? அதை ஏன் மக்கள் நம்புகிறார்கள்? இப்போதுதான் வாட்ஸ்-அப், டிவிட்டர் எல்லாம். அதெல்லாம் இல்லாத எழுபதுகளிலிருந்தே இந்த வதந்திகள் சுற்றிக் கொண்டுதான் இருக்கின்றன. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் ஏன் கடவுள் மறுப்பு பேசினார், அண்ணாவும், கலைஞரும் அதனை எப்படி மூட நம்பிக்கை எதிர்ப்பாக, ஜாதியாதிக்க எதிர்ப்பாக தகவமைத்தார்கள் என்ற கருத்தியல் வரலாற்றை முழுமையாக உள்வாங்கினால்தான் இந்த டிரோன் தாக்குதல்களை சமாளிக்க முடியும். அதற்கு மானுடவியல் பார்வை உதவும்.

சமூகங்களின் புனித மையங்கள்

பல ஆதிவாசி இனக்குழு சமூகங்களில் ஒரு புனிதச் சின்னம், பிம்பம், விலங்கு, ஏதோவொரு மரம், பாறை என்று ஒன்று இருக்கும். அதை தங்களை வழிநட த்தும் சக்தியாகக் கருதுவார்கள். அதற்கான சடங்குகளை, வழிபாடுகளைச் செய்யும் பூசாரிகள் இருப்பார்கள். அந்த பூசாரிகளே குழுவின் தலைவனை அங்கீகரிப்பார்கள். ஒரு சமூக ஒழுங்கை நிலைநாட்டிக்கொள்ள இப்படியான ஏற்பாடுகள் தேவைப்பட்டன என்பதுதான் மானுடவியல் பார்வை.

விவசாயம், வர்த்தகம் எல்லாம் தோன்றி, சமூக அமைப்பு விரிவடைந்தபோது கோயில்களும், தெய்வங்களும், புராணங்களும். பூசாரி வர்க்கமும் விரிவடைந்தன. புனித நூல்கள், மத அமைப்புகள் உருவாயின. அரசர்கள், பேரரசர்கள் எல்லாம் மதககுருமார்கள் துணையுடன் ஆட்சி செய்தார்கள். ‘அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்” என்பன போன்ற கூற்றுக்கள் எப்படி சமூக நெறிகளை பாதுகாக்க தெய்வம் என்ற கருத்தாக்கம் தேவைப்பட்டது என்பதைக் காட்டுவது.

இன்றுவரை தெய்வம் தண்டிக்கும் என்ற அச்சமே மக்களை குற்றம் செய்யாமல் தடுக்கிறது என்று பலரும் நினைக்கிறார்கள். குழந்தைகளிடம் தப்பு செய்தால் சாமி கண்ணை குத்தும் என்று சொல்லி வளர்க்கிறார்கள். ஆங்கில ஹிண்டு நாளிதழில் வரும் திருமணத்திற்கு இணை தேடும் விளம்பரங்களில் இணையர் கடவுள் பயம் (God Fearing) உள்ளவராக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப் பட்டிருக்கும். கடவுள் பயம் இருந்தால் தவறு செய்யமாட்டார் என்பது கருதுகோள்.

Social Psychology of Rumors

ஆனால் நடைமுறையில் பார்த்தால் கடவுள் பக்தி உள்ளவர்கள் பல மோசடிகளைச் செய்வார்கள். ஒழுக்கமின்றி இருப்பார்கள். அதெற்கெல்லாம் சேர்த்து கோயில்களுக்கு நிதி அளிப்பார்கள். பல சாமியார்கள் மோசமான குற்றச்சாட்டுகளில் கைதாவார்கள். அப்போதும் கூட அவர்களுடைய பக்தர்கள் அவர்களை வழிபடுவதை நிறுத்த மாட்டார்கள். பிரேமானந்தா என்ற சாமியாரின் பக்தர்கள் அவரை சிறையிலேயே சென்று வழிபட்டார்கள். சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்ட போது அவரது சில ஆசாரமான பழக்கங்களுக்கு சிறையில் வசதி செய்து கொடுக்கப்பட்டது.

உலகம் முழுவதிலும் வரலாற்றில் பல உதாரணங்களைச் சொல்லலாம். புனித மையங்களில் உள்ளவர்களின் குற்றங்கள் எல்லாம் பெரிதுபடுத்தப்படாது. இத்தாலியில் பிரமச்சர்ய விரதமேற்ற போப்பாண்டவருக்கு ரகசிய உறவில் பிறந்த பிள்ளைகள் என்று பகிரங்கமாக அறியப்பட்டவர்களே வாழ்ந்தார்கள், போர்களில் ஈடுபட்டார்கள்; ஆட்சி செய்தார்கள். ஆனாலும் போப்பாண்டவரின் புனிதமான பீடம் பாதிக்கப்படவில்லை.   

ஆனால் புனித மையங்களை எதிர்ப்பவர்கள் பல சிக்கல்களை சந்திப்பார்கள். அவர்கள் மாற்று புனித மையங்களை உருவாக்கினால் தப்பிக்கலாம். புனித மையங்கள் என்ற கருத்தையே எதிர்த்தால் அது சமூக அங்கீகாரம் பெறுவது பெரும் சவால்தான். ஏனென்றால் நடைமுறை வாழ்க்கையில் பல நெருக்கடிகளை சந்திக்கும் எளிய மக்களுக்கு கடவுள்களும், கோயில்களும். புனித மையங்களும் தேவை என்பதுதான். “மதம் ஒடுக்கப்பட்டவர்களின் பெருமூச்சு; இதயமற்ற உலகின் இதயம்; ஆன்ம வரட்சியுற்ற நிலையின் ஆன்மா” என்று கார்ல் மார்க்ஸ் கூறியதுபோல, வெகுஜன உளவியலில் கடவுளுக்கான தேவையை முற்றிலும் அகற்றுவது சாத்தியமல்ல.

பெரியாரின் பகுத்தறிவு இயக்கம் ஏன்?  

இந்தியாவில் புனிதவாதம் மிக விரிவான சமூக அமைப்பை, நால்வர்ண படிநிலையை உருவாக்கியதும், அவர்ணர்களாக ஒரு பிரிவை ஒதுக்கியதும்தான் முக்கியமான பிரச்சினை. சமஸ்கிருத மொழியை உருவாக்கிய ஆரிய இனத்தவர்கள் கால்நடை மேய்ப்புக் குழுக்களாக இருந்தார்கள். அவர்கள் யாகங்கள் செய்து அதில் மாடுகளை, குதிரைகளை பலியிடும் வழக்கம் கொண்டிருந்தார்கள். அவர்கள் வழிபாட்டு பாடல்களாக வேதங்களை உருவாக்கினார்கள். இவர்களது யாகம் போன்ற நம்பிக்கைகளை மறுத்து புத்தம், சமணம், அஜீவகம் உள்ளிட்ட சிரமண மதங்கள் தோன்றின.    

சிரமண மதங்களை எதிர்கொண்ட ஆரியர்கள் யாகங்களை கைவிட்டு தங்களை மறுதகவமைப்பு செய்துகொண்டார்கள். வேதங்களில் மையப்படுத்தப்பட்ட கடவுள்களை மாற்றி, பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளை மையப்படுத்திய புராணங்களை எழுதினார்கள். ராமாயண, மகாபாரத இதிகாசங்களை உருவாக்கினார்கள். வர்ணாஸ்ரம தர்மங்களை வகுத்த தர்ம சாஸ்திரங்களை எழுதினார்கள். இவற்றுள் முக்கியமானது மனு தர்ம சாஸ்திரம்.  

வர்ண தர்ம கோட்பாட்டில் பிராமணர்களே உயர்ந்தவர்கள். சத்திரியர்கள் இரண்டாம் நிலை; வைசியர்கள் மூன்றாம் நிலை. இவர்களுக்கெல்லாம் சேவை செய்பவர்கள் சூத்திரர்கள் என்ற நான்காம் வர்ணத்தினர். இந்த நால்வர்ணத்திற்கு வெளியேதான் விலக்கப்பட்ட அவர்ணர்கள். இந்த கோட்பாட்டை நிலைநிறுத்த மறுபிறவிக் கோட்பாட்டை உருவாக்கினார்கள். ஒருவர் செய்த பாவ, புண்ணியம்தான் அவருடைய அடுத்த பிறவியை தீர்மானிக்கும். பாவம் செய்தவர்களுக்கு தண்டனைதான் அவர்கள் சூத்திரர்களாக, அவர்ணர்களாக பிறப்பது என்று ஒரு மிகப்பெரிய மூடநம்பிக்கையை உருவாக்கிப் பரப்பினார்கள். பல்வேறு வரலாற்றுக் காரணங்களால் வெற்றியும் பெற்றார்கள்.

இப்போதும் நீங்கள் மக்கள் பேச்சில் “போன ஜென்மத்தில் என்ன புண்ணியம் செய்தேனோ உங்களுக்கு மகனாகப் பிறந்தேன்” “முற்பிறவியில் என்ன பாவம் செய்தேனோ உங்களுக்கு மகளாகப் பிறந்தேன்” என்றெல்லாம் கூறுவதைக் கேட்கலாம். மக்கள் மனதில் இறை நம்பிக்கை, மறுஜென்மக் கோட்பாடு, நால்வர்ணக் கோட்பாடு எல்லாம் ஒன்றோடொன்று கலந்துவிட்டன.

பெரியார் முதலில் இறைநம்பிக்கையை மறுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அவர் வர்ண தர்ம பிரிவினையை, ஏற்றத்தாழ்வை நீக்க வேண்டும் என்றுதான் நினைத்தார். பல சீர்திருத்தவாதிகளும் நினைத்தார்கள். வைக்கம் போராட்டம், சேரன்மாதேவி குருகுல பிரச்சினை ஆகியவற்றில் பெரியார் எப்படி பார்ப்பனர்கள் தங்கள் மூட நம்பிக்கையில், வர்ண தர்ம கோட்பாட்டில் தீவிரமாக இருக்கிறார்கள் என்பதைக் கண்டார். சனாதன தர்மம் என்று இந்த மூட நம்பிக்கைகளுக்கு பெயர் வைத்து அதனைக் காப்பதற்காக பல சங்கங்களைக் கூட பார்ப்பனர்கள் உருவாக்கினார்கள்.

Social Psychology of Rumors

இதனால்தான் பெரியார் இறை நம்பிக்கையிலிருந்து அனைத்தையும் கேள்வி கேட்க வேண்டும் என்று முடிவு செய்தார். பகுத்தறிவு என்பது எதையும் கேள்வி கேட்காமல் ஏற்கக் கூடாது என்பதுதான். உலகம் முழுவதுமே நவீன காலத்தில் மனிதர்கள் எதையும் சிந்தனைக்கு உட்படுத்தாமல் ஏற்கக் கூடாது என்ற பகுத்தறிவு நோக்கு பரவியது. பெரியார் இந்தியாவில் யாரும் செய்யத் துணியாத அளவு எல்லா புனிதவாத உருவகங்களையும் கேள்வி கேட்டார். மக்களையும் கேட்கச் சொன்னார். அவர் 1929-ஆம் ஆண்டு திருச்சியில் நிகழ்த்திய சொற்பொழிவு, திராவிடன் தினசரியில் பிரசுரமானது, ஆனைமுத்து அவர்கள் தொகுத்த பெரியார் சிந்தனைகளில் இடம் பெற்றுள்ளது. அதில் அவர் கூறுவது தெளிவைத் தரும்:

சாதி வித்தியாசத்தை ஒழிக்க முற்படுகையில், மதமென்பது ஒழிந்து போகுமேயானால் அந்த மதம் நமக்கு வேண்டாம். அது இப்போதே அழிந்து போகட்டும். மதத்தை பொசுக்கும்போது வேதமும் பொசுங்கிப் போவதாக இருந்தால், அந்த வேதம் என்பது இப்போதே வெந்து போகட்டும். வேதத்தை ஓட்டும்போது கடவுளும் ஓடிவிடுவாரென்றால் அந்த கடவுளும் இப்போதே ஓடிவிடட்டும். அப்பேர்ப்பட்ட கடவுள் நமக்கு வேண்டவே வேண்டாம்.

சாதி வித்தியாசத்தை ஒழிப்பதுதான் அவருக்கும், பகுத்தறிவிற்கும் முக்கியம். அதற்கு இடையூறாக புனிதவாத மையங்களும், மூட நம்பிக்கைகளும் வருவதால்தான் அவற்றையும் கேள்விக்கு உள்ளாக்க வேண்டிய அவசியம் வருகிறது. இந்த அடிப்படை புரிதலை அவர் பலமுறை விளக்கியுள்ளார். கடவுள் மறுப்புதான் முக்கியமென்றால் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற கோரிக்கையை வைக்க வேண்டியதில்லையே. எனவே பெரியாரின் கடவுள் மறுப்பென்பது மூட நம்பிக்கை டிரோன்களை வெளிப்படுத்தும் புனித வாத அயர்ன் டோம்களையே தாக்குவதுதான். மூட நம்பிக்கை டிரோன்கள் பகுத்தறிவை நோக்கி வரவில்லையென்றால் அயர்ன் டோமை தாக்க வேண்டிய அவசியமில்லை.

Social Psychology of Rumors

தி.மு.க வெளிப்படுத்திய புரிதல்

ஒரு பகுத்தறிவு இயக்கமாக பெரியார் மக்களின் சுதந்திர சிந்தனையை தூண்டுவதற்காக கடவுள் மறுப்பை முன்வைத்தார். வெகுஜன கட்சியாக மக்கள் ஆதரவை திரட்ட முற்பட்ட தி.மு.க,  தேர்தல் களத்திலும் ஈடுபட்டபோது, மக்களிடம் வேரூன்றியுள்ள கடவுள் நம்பிக்கையை, புனிதவாத மையங்களை முற்றிலும் நிராகரிப்பது சாத்தியமில்லை.

அதனால் அண்ணா ஜாதி மறுப்பு பகுத்தறிவிற்கு, மூட நம்பிக்கை எதிர்ப்பிற்கு உகந்த வகையில், திருமூலரின் வாக்கியமான “ஓன்றே குலம், ஒருவனே தேவன்” என்ற கூற்றை கட்சியின் பார்வையாகக் கூறினார். மனித குலம் என்பது சாராம்சத்தில் ஒன்றுதான் என்பதும், அத்தகைய மனித குலத்தின் மூல சக்தி என்பதும் எத்தனை வடிவங்களில் வழிபட்டாலும், வழிபடாவிட்டாலும் ஒன்றாகத்தான் இருக்க முடியும் என்பதும் பொருள்.

கலைஞர் இன்னமும் எளிமையாக பராசக்தி வசனத்தில் “கோயில்கள் கூடாது என்பதல்ல; கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாக இருக்கக் கூடாது” என்று எழுதினார். தி.மு.க மதச்சார்பின்மை, மத நல்லிணக்கம் ஆகியவற்றையே வலியுறுத்தியது.அதே சமயம் மதத்தின் பெயரால் மூட நம்பிக்கைகளை பின்பற்றுவதையும் விமர்சித்தது. ஜாதீயம், பெண்ணடிமைத்தனம் என பல சனாதன பார்ப்பனீய புனிதவாத சிந்தனைகளை முற்றிலும் நிராகரித்தது.

மேலும் ஆரிய புராண, இதிகாசக் கற்பனைகளில்  அரக்கர்கள் என்று வர்ணிக்கப்பட்டவர்கள் ஆரியர்களுடன் முரண்பட்டு மோதிய இந்தியாவின் பூர்வகுடிகள் என்பது பல ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்ட கருத்து. அதனால் புராண இதிகாசங்களின் அடிப்படையில் இன்று பொதுப் பண்டிகைகளாக அரக்கர்கள் கொல்லப்பட்டதை கொண்டாடுவதாக அமைந்தவற்றை தி.மு.க தலைவர்கள் அங்கீகரிப்பதில்லை. குறிப்பாக தீபாவளி தமிழ் பண்டிகை அல்ல என்பது அவர்களது கொள்கை சார்ந்த நோக்கு.

Social Psychology of Rumors

அதே சமயம் தமிழ்நாட்டில் தழைத்த சைவம், வைணவம் ஆகியவற்றின் முற்போக்கான கூறுகளை தி.மு.க அங்கீகரிக்கும். உதாரணமாக ஜாதி வேற்றுமையை எதிர்த்த வைணவ இறையாளர் ராமானுஜர் குறித்து கலைஞரே தொலைக்காட்சி தொடர் ஒன்றினை எழுதி, அதனை கலைஞர் தொலைக்காட்சியில் வெளியிட்டார். ராமானுஜர் மதத்தில் புரட்சி செய்த மகான் என்று குறிப்பிட்டார். அதற்காக திருப்பதி கோயில் தேவஸ்தானத்திலிருந்து ஒரு குழு வந்து அவருக்கு மரியாதை செய்தது.

இந்திய வெகுஜன அரசியலில் பார்ப்பனீய, ஜாதீய உளவியல் இந்திய பெருந்தேசிய சொல்லாடலுடன் பிணைந்துள்ளது. அவையெல்லாம் புனிதவாத அயர்ன் டோமாக உள்ளன. அதனை எதிர்த்து அரசியல் செய்யும் தி.மு.க, அதுவே தமிழ்நாட்டில் திராவிட-தமிழர் என்ற தன்னுணர்வின் வரலாற்று விசையாக இருந்தாலும் எல்லா காலங்களிலும் எதிர்நீச்சல் போடும் தேவை ஏற்படுகிறது.

புனிதவாத மூடநம்பிக்கைகளின் மதச்சார்பற்ற மாற்றாக கதாநாயக நட்சத்திர வழிபாடு அமைகிறது. நட்ச த்திர நடிகர்களின் கட்-அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்யப்படுகிறது. அதனால் திரை நடிக பிம்ப அரசியல் எப்போதும் புனிதவாத மையங்களுடன் தன்னை இணைத்துக்கொள்வதையும் காணலாம். புனிதச் சடங்குகள் அரசியலாக மாறுகின்றன. அதனையும் சேர்த்தேதான் தி.மு.க-வின் பகுத்தறிவு அரசியல்  எதிர்கொள்ள வேண்டும்.

கட்டுரையாளர் குறிப்பு:  

Social Psychology of Rumors - rajan kurai

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள:rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share