திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மாற்றாக திரைநாயக பிம்பங்கள் உருவாவது ஏன்?

Published On:

| By Minnambalam Desk

ராஜன் குறை

நடிகர் ஜோசப் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி துவங்கி மூன்றாம் ஆண்டில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று முதல்வராக ஆட்சிப்பொறுப்பினை ஏற்றிருப்பது பலரையும் வியக்க வைத்துள்ளது. பல தேர்தல் கணிப்பாளர்களும், அரசியல் விமர்சகர்களும், அவர் வெல்ல மாட்டார் என்று நினைத்ததற்குக் காரணம் அவர் வலுவான கட்சி அமைப்பை உருவாக்கவில்லை என்பதுதான். மேலும் அவர் அரசியல் பிரச்சினைகளில் அறிக்கைகள் விடவில்லை, போராட்டங்களில் ஈடுபடவில்லை, ஊடகங்களை சந்திக்கவில்லை என பல போதாமைகள்.

ஆனால் கடந்த பத்தாண்டுகளில் நிகழ்ந்துள்ள செல்பேசிகளின் பெருக்கம், அதன் மூலமாக சமூக ஊடகங்கள் உருவாக்கியுள்ள “மெய்நிகர் வெளி” (Virtual Space) எவ்வளவு ஆற்றல் மிக்கது என்பதை பலராலும் கணிக்க முடியவில்லை. அதனால் வேர்மட்ட கட்சி அமைப்பு இல்லாமலேயே, ஒரு தொகுதியின் வேட்பாளர் யார் என்று தெரியாமலேயே, விஜய் எல்லா தொகுதிகளுக்கும் பிரசாரத்திற்கு செல்லாமலேயே, ஏராளமானோர் விஜய் என்ற கதாநாயக பிம்பத்திற்கு, அவர் சின்னமான விசிலுக்கு வாக்களித்துள்ளனர். 

ADVERTISEMENT
Continuity of Cinematic Hero's Image

ஏன் தேர்தல் முடிவுகள் இப்படி அமைந்தன என்பதை விவாதிக்கும்போது பலரும் தி.மு.க ஆட்சியின் குறைகள், கட்சி அமைப்பின் பிரச்சினைகள் என்று பல காரணங்களைக் கூறுகின்றனர். அப்படியானால், அவற்றால் விளைந்த அதிருப்தியின் பலன் எதிர்கட்சியான அ.இ.அ.தி.மு.க-விற்குத்தானே சென்றிருக்க வேண்டும்? எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஒன்றியத்தில் ஆட்சி செய்யும் சக்திவாய்ந்த பாஜக-வுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தாரே? அந்த கூட்டணி வெல்லவில்லையே? மற்றொரு சாத்தியமாக திராவிடம், இந்திய தேசியம் இரண்டிற்கும் மாற்றாக தமிழ் தேசிய அடையாளத்தைப் பேசிய நாம் தமிழர் சீமானுக்கு மக்கள் வாக்களித்திருக்கலாமே? அதுவும் நடக்கவில்லையே?

தேர்தல் முடிவுகளில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 35% வாக்குகளையும், 108 தொகுதிகளையும் பெற்றுள்ளது. தி.மு.க கூட்டணி 31.4% வாக்குகளையும், 73 தொகுதிகளையும் பெற்றுள்ளது. அ.இ.அ.தி.மு.க-பாஜக கூட்டணி 27.2% வாக்குகளையும், 53 தொகுதிகளையும் பெற்று மூன்றாமிட த்திற்கு தள்ளப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி 4% வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம் தி.மு.க-விற்கு மாற்று என்பது திரைநாயக பிம்பமாக மட்டுமே அமையும் என்ற நிலை தொடர்கிறது.

ADVERTISEMENT

என்னுடைய 25 ஆண்டுகால ஆய்வின் விளைவாக நான் இதற்குக் கூறக்கூடிய காரணம் தத்துவார்த்த மானுடவியல் சார்ந்தது. அதனை சுருக்கமாகக் கூறிவிட்டு பின்னர் விரிவாக வரலாற்றுப் பின்புலத்தை விளக்க விரும்புகிறேன். ஆங்கிலத்தில் ஆய்வுக்கட்டுரைகளாக நான் இந்த கருதுகோள்களை பிரசுரித்துள்ளேன்.

பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் தலைமையில் சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை திராவிட-தமிழ் அடையாளம் கொண்ட மக்கள் தொகுதியை உருவாக்குவதில் பெருவெற்றி பெற்றன. தமிழ்நாட்டு மக்களின் அகம் சார்ந்த இறையாண்மை வடிவம் என்பது திராவிட-தமிழர் என்ற தன்னுணர்வே ஆகும். அதுவே வரலாற்றின் ஊற்றுக்கண்.  

ADVERTISEMENT

ஆனால் திராவிட தமிழரின் புறம் சார்ந்த இறையாண்மை, குடிமைத் தன்னிலை இறையாண்மை (sovereign right bearing citizenship), இந்தியர் என்றும் இந்திய ஒன்றிய அரசாங்கம் வழங்குவது என்றும் உருவாகிவிட்டது. தி.மு.க போதிய சுயாட்சி உரிமைகள் பெறுவதன் மூலம் இந்த இடைவெளியை கூட்டாட்சியத்தால் சமன் செய்ய முயல்கிறது. அது நிறைவேறாத போது வெகுஜன மனோவியல் இந்த இறையாண்மை பற்றாக்குறையை (sovereign deficit) கற்பனை வெளியில், மெய்நிகர் தன்மையில் திரைநாயக பிம்பத்தால் ஈடு செய்துகொள்ள விரும்புகிறது.

Continuity of Cinematic Hero's Image

தி.மு.க-விற்கு மாற்று தமிழ் திரையுலகம் உருவாக்கும் மெய்நிகர் பிம்பமே என்பதால் தேசிய கட்சிகள் தமிழ்நாட்டு தேர்தல்களில் தி.மு.க-விற்கு மாற்றாக முடிவதில்லை. அதே சமயம், தேசிய கட்சிகளால் தி.மு.க தமிழ்நாட்டிற்கான சுயாட்சி உரிமைகளை பெறும் முயற்சியை தள்ளிப்போட முடிகிறது. தி.மு.க திராவிட-தமிழர் என்ற தன்னுணர்வை வளர்க்க, படைப்பிலக்கியத்தை, நாடக மேடையை, திரைக் கதையாடல்களை பயன்படுத்தியதால், அந்த திரைக்கதையாடல்களின் மெய்நிகர் வெளியிலிருந்து தி.மு.க-விற்கு மாற்று உருவாவது எம்.ஜி.ஆர் வடிவத்தில் சாத்தியமாகி, இன்றும் தொடர்கிறது.

எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா என்ற மெய்நிகர் திரைபிம்பங்களின் மாற்று அரசியல் முனை ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின் தொடராதபோது, கட்சியமைப்பு எடப்பாடி பழனிசாமியிடம் இருந்தாலும், அது முகமற்ற உடலாகிவிட்டது. அந்த வெற்றிடத்தில் விஜய் என்ற திரைக்கதாநாயக பிம்பம் குடியேறிவிட்டது. கட்சியமைப்பிடம் நாயக பிம்பம் இல்லை; நாயக பிம்பத்திடம் கட்சி அமைப்பு இல்லை. இரண்டும் தனித்தனியாக போட்டியிட்ட தில் நாயக பிம்பமே வென்றது. காரணம் தி.மு.க-விற்கு மாற்றாக மெய்நிகர் பிம்பம்தான் தேர்தலில் வெல்ல முடியும்.

Continuity of Cinematic Hero's Image

எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை: திரைநாயக பிம்பத் தொடர்ச்சி

புரட்சி நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் தி.மு.க-விலிருந்து 1972-ஆம் ஆண்டு வெளியேறி அண்ணா தி.மு.க கட்சியைத் துவங்கியபோது அது அதிர்வலைகளை உருவாக்கியது. ஒரு திரை நடிகர் அரசியல் தலைவராக நிலைத்து நிற்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது. தி.மு.க பேச்சாற்றல், எழுத்தாற்றல் மிக்க, கருத்தியல் வலுக்கொண்ட தலைவர்களால் உருவானது. தமிழ் மறுமலர்ச்சி என்று அறிஞர்களால் குறிப்பிடப்படும் தமிழ் பண்பாட்டின் அச்சு ஊடக விரிவாக்கத்தின் பின்னணியில் ஏற்பட்ட திராவிட-தமிழ் தன்னுணர்வின் வெளிப்பாடாக அவர்கள் அமைந்தார்கள்.

அண்ணாவிற்குப் பிறகு முத்தமிழ் அறிஞராக, அரசியல் அணிசேர்க்கையில், போராட்ட வியூக வகுப்பில், கருத்தியல் புலத்தில் அளப்பரிய பயிற்சி கொண்ட கலைஞர் தலைமையேற்றார். அதனோடு ஒப்பிடும்போது எம்.ஜி.ஆருக்கு அரசியலில் போதுமான பயிற்சி இல்லையே என்று பலரும் கருதினார்கள். ஆனால் தி,மு.க கட்சியிலிருந்து பிரிந்து வந்தவர்கள், கட்சியின் துணை அமைப்பாக இருந்த  அவரது ரசிகர் மன்ற வலைப்பின்னலின் துணையுடன் தேர்தலில் வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். புரட்சித் தலைவர் ஆனார். அண்ணாவின் பெயரைச் சொல்லி கட்சி நடத்தினார்.

எம்.ஜி.ஆரின் மீது ஏன் மக்களுக்கு அவ்வளவு ஈர்ப்பு ஏற்பட்டது, எவ்வாறு அவரால் அவரது திரைநாயக பிம்பத்தை அரசியலுக்கு பயன்படுத்த முடிந்தது என்பது குறித்த ஒரு புதிர் நீடித்தது. பல கேள்விகள் எழுந்தன. தமிழர்கள் சினிமா பிம்பத்திற்கும் நிஜ வாழ்க்கைக்கும் வேறுபாடு தெரியாதவர்களா? சினிமாவில் அவர் வீரச்செயல்கள் செய்து நல்லவர்களை, தர்மத்தை காப்பாற்றினால், நிஜ வாழ்விலும் அப்படிச் செய்வார் என்று நினைக்கிறார்களா? திராவிட இயக்கம் பகுத்தறிவை முன்நிலைப்படுத்தியதென்றால், இது போன்ற மன மயக்கம் எப்படி சாத்தியம்? என்றெல்லாம் பலரும் கேள்விகள் எழுப்பினர்.

ஆங்கிலம் பயின்ற மேட்டிமைச் சக்திகள் ஒட்டுமொத்தமாகவே திராவிட இயக்கம் முதிர்ச்சியற்ற உதிரி மனிதர்களின் (riff raff) இயக்கம் என்று கருதியதால், எம்.ஜி.ஆரை அதன் நிரூபணமாகவே பார்த்தது. எல்லோருமே கூத்தாடிகள், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்றெல்லாம் கூறப்பட்டன. ஆனால் அண்ணா உள்ளிட்ட பலரது கருத்தியல் வலுவை அறிந்தவர்கள், எப்படி எம்.ஜி.ஆர் தி.மு.க-விற்கு மாற்றாக உருவானார் என்று வியக்கத்தான் செய்தார்கள். கல்வித்துறை சார்ந்தவர்களும் ஆர்வம் கொண்டார்கள். பலரும் எம்.ஜி.ஆர் பிம்பம் அவர் மறைந்து பல ஆண்டுகள் கழித்தும் தமிழ் வெகுஜன உளவியலில் செலுத்தும் ஆதிக்கத்தை விளங்காப்புதிர் (enigma) என்று குறிப்பிடுவர்.

Continuity of Cinematic Hero's Image

எம்.ஜி.ஆர் 1987-ஆம் ஆண்டு மறைந்தபோது, அவர் மனைவி வி.என்.ஜானகி, அவரும் ஒரு காலத்தில் திரைக்கலைஞர் என்றாலும் வெகுகாலமாக நடிக்காதவர், முதல்வரானார். எம்.ஜி.ஆரின் வலுதுகரமான ஆர்.எம்.வீரப்பன், ஜானகி அம்மையாரை வழிநடத்தினார். ஆனால் எம்.ஜி.ஆரின் பிற்காலப் படங்களில் அவருடைய இணையாக நடித்தவரும், எம்.ஜி.ஆரால் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக அறிவிக்கப்பட்டவருமான ஜெயலலிதா கட்சியின் மற்றொரு பிரிவின் தலைவரானார். அடுத்த நடந்த 1989 தேர்தலில், ஜெயலலிதா அணியையே மக்கள் அங்கீகரித்தனர்.

Continuity of Cinematic Hero's Image

அதாவது எம்.ஜி.ஆரின் நிஜ வாழ்க்கை இணையரைவிட, திரைப்பிம்ப இணையான ஜெயலலிதாவே அவரது அரசியல் வாரிசாக முடிந்தது. இது மிக முக்கியமாக நாம் கருத்தில் கொள்ள வேண்டிய உண்மை. ராஜீவ் காந்தி தலைமையிலிருந்த காங்கிரசுடன் 1991-ஆம் ஆண்டு கூட்டணி அமைத்திருந்த ஜெயலலிதா, ராஜீவ் படுகொலை ஏற்படுத்திய அனுதாப அலையில் முதல்வரானார். அதன் பின் தி.மு.க-வின் மாற்றாக எம்.ஜி.ஆரின் தொடர்ச்சியாக 25 ஆண்டு காலம் தொடர்ந்தார்.

தி.மு.க, அ.இ.அ.தி.மு.க என்ற இரண்டு கட்சிகள் பல்வேறு தொழில், சமூக உறவு முரண்களையெல்லாம்  தொகுத்துக் கட்டமைத்து முரணரசியல் எதிரிணைகளாக உறுதிப்பட்ட பின், மூன்றாவதாக ஒரு கட்சியை உருவாக்க முயன்ற கதாநாயக நடிகர்கள் யாரும் வெற்றிபெற முடியவில்லை. பாக்கியராஜ், டி.ராஜேந்தர், கார்த்திக், சரத்குமார் ஆகியோரைவிட விஜய்காந்த் அதிக வாக்குகளைப் பெற்றாலும், ஜெயலலிதாவுடன் 2011-ஆம் ஆண்டு கூட்டணி வைத்தபோதுதான் கணிசமான தொகுதிகளை வென்றார். மறுபடியும் மூன்றாவது முனையாக மக்கள் நலக் கூட்டணிக்குத் தலைமை தாங்கியபோது படுதோல்வியடைந்தார். காரணம் எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா என்ற பிம்பத் தொடர்ச்சியின் இடம் அன்றைக்கு காலியாகவில்லை.

ஆனால் 2016-ஆம் ஆண்டு தேர்தலில் வென்ற பின் ஜெயலலிதா மரணமடைந்ததால் அவரது அரசியல் வாரிசு யார் என்பது தெளிவாகவில்லை. அவருடைய உடன்பிறவா சகோதரியாக கூடவே வாழ்ந்து. அவரது அரசியல் வாழ்வை நிர்வகித்து வந்த சசிகலா ஒருவேளை அந்த தொடர்ச்சியைக் கொடுத்திருக்கலாம். ஆனால் பாஜக அதனை விரும்பவில்லை. கட்சி அதனால் பிளவுபட்டு, ஓட்டப்பட்டு, பிரிந்து பலவிதமாக சேதமடைந்தது. ஆனாலும் எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னத்தையும், கணிசமான வாக்கு வங்கியையும் தன் பக்கம் தக்கவைப்பதில் வெற்றி பெற்றார். பிரச்சினை என்னவென்றால் அது தி.மு.க-விற்கு மாற்றாக முடியும் என்னுமளவு வலுவாக இருக்கவில்லை.

இந்த சூழ்நிலையை உணர்ந்துதான் விஜய் அரசியல் நுழைவு நடந்தது. தி.மு.க ஆட்சியில் தொடர்ந்தால் தமிழ்நாடு அரசியல் பொருளாதாரத்தில் மேலும் வலிமை பெற்று, இந்திய அளவில் கூட்டாட்சியக் கோட்பாட்டை (Federalist Doctrine) வலுப்படுத்திவிடும் என்ற அச்சம் கொண்ட ஒன்றியவாத சக்திகள் (Unionists) நேரடியாகவும், மறைமுகமாகவும் விஜயை ஆதரித்து இயங்கின; அவருக்கான ஊடக ஆதரவு தளத்தையும் கட்டமைத்தனர்.

ஒரு திரைநாயக பிம்பத்தைக் காண கூட்டம் கூடும் என்ற இயல்பான சாத்தியத்தை சாக்காக வைத்து, கூட்டக் காட்சி அரசியலை பெரும் ஊடக நிகழ்வுகளாகக் (media event) கட்டமைத்தன. அதனைத் தொடர்ந்து மெய்நிகர் வெளி ஊடக வலைப்பின்னலில் மெய்நிகர் போராளிகளை உருவாக்கி (Virtual Warriors) முதிரா மனம் கொண்ட இளைஞர்களிடம் பெரும் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. உச்சகட்டமாக விஜய் குழந்தைகளை தனக்கு வாக்களிக்கச்சொல்லி பெற்றோரிடம் அடம்பிடிக்கச் சொன்னார். எப்படியோ ஒரு திரைநாயக பிம்பத்தை மீண்டும் தி.மு.க-வுக்கு மாற்றாக உருவாக்கும் முயற்சி வெற்றி பெற்றுவிட்டது.

எம்.ஜி.ஆர் உருவாக்கத்தின் அரசியல் பின்னணி

அச்சு ஊடக பயன்பாடு தமிழ்நாட்டில் பரவலாகி, பண்டைய தமிழ் இலக்கியமெல்லாம் பதிக்கப்பட்டு மறுமலர்ச்சி ஏற்பட்டபோது, ஆரிய மொழியான சமஸ்கிருதத்திற்கும், தமிழிற்குமான நெடுங்கால சமூக முரண்பாடு பொதுமன்ற விவாதத்திற்கு வந்தது. தமிழ் ஆரிய சமஸ்கிருதத்திற்கு தொடர்பில்லாத திராவிட மொழிக்குடும்பத்தை சார்ந்தது என்ற ஆங்கில ஆய்வாளர்கள் முடிவு திராவிட-தமிழ் அடையாளம் உருவாகக் காரணமானது. ராமலிங்க அடிகள், மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை, நவீன சைவர்கள், அயோத்திதாச பண்டிதர், நவ பெளத்தம், சென்னை லெளகீக சங்கம் என பலவேறுபட்ட சமூக புத்தாக்க சிந்தனைகள் பார்ப்பனர்களின் சமூக ஆதிக்கம், பார்ப்பனீய-ஜாதீய சமூக ஒழுங்கு, வர்ண தர்ம கருத்தியல், சமஸ்கிருத புராணக் கதையாடல்கள் ஆகியவற்றை விமர்சித்து, நிராகரித்து உருவாயின.

காலனீய ஆட்சியில் ஒற்றை நிர்வாக அலகாக உருவாக்கப்பட்ட இந்தியா, ஆங்கிலம் படித்த இந்திய உயர் வகுப்பினர் ஆட்சியில் பங்கு கோரியபோது இந்திய தேசிய அரசியலுக்கு வித்திட்டது. இந்திய தேசிய காங்கிரஸ் என்பது குடிமைச் சமூக அமைப்பாகத்தான் துவங்கியது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஆங்கிலம் படித்தவர்களே ஒன்று கூடியதால் பிரச்சினை இருக்கவில்லை. ஆனால் காலப்போக்கில் ஆங்கிலம் பயிலாத பொதுமக்களும் பங்கெடுக்கத் துவங்கியபோது மொழி ஒரு பிரச்சினையானது. அப்போதே இந்துஸ்தானி மொழியை தேசிய மொழியாக்கும் கருத்து தோன்றியது. ஆனால் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இந்துஸ்தானி மொழி சமஸ்கிருதமயமாகி நவீன இந்தியாக உருவெடுத்தது. வட மாநில மக்களின் மொழிகளெல்லாம் பேச்சு மொழிகளாகச் சுருங்கி, கல்வி நவீன இந்தியில் மட்டுமே வழங்கப்பட்டது. வட மாநிலங்கள் சமூக, பொருளாதார வளர்ச்சியில் பின் தங்கியதற்கு இது ஒரு காரணம் என ஆய்வாளர்களால் இப்போது உணரப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே சமஸ்கிருத மேலாதிக்கம், பார்ப்பனீய வர்ண தர்மம், ஜாதீய சமூக ஒழுங்கு போன்றவற்றிற்கு எதிராக உருவாகியிருந்த சிந்தனைப் போக்குகள் 1937-ஆம் இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்க முற்பட்டபோது கிளர்ந்தெழுந்தன. இதுவே திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகத்தின் அரசியல் அணிகள் கட்டமைக்கப்பட உரமானது. மற்றொருபுறம் காலனீய எதிர்ப்பு தன்னுணர்வு என்பதே மொழி சார்ந்து உருவானதால் காங்கிரஸ் இயக்கத்திலும் பாரதியார், வ.உ.சி, நாமக்கல் ராமலிங்கம் என பல தமிழ் ஆளுமைகள் மக்கள் மனதில் முதன்மை பெற்றனர். பாரதியால் ஈர்க்கப்பட்ட பாரதிதாசன் திராவிட தமிழுணர்வின் முதன்மைக் கவிஞர் ஆனார்.

இந்த பின்னணியில்தான் திராவிட முன்னேற்றக் கழகம் இந்தியக் குடியரசுடன் இணைந்து உருவாகி, தேர்தல் களத்தில் காங்கிரசிற்கு மாற்றாக வடிவெடுக்கத் துவங்கியது. அறுதிப் பெரும்பான்மையினர் எழுத்தறிவற்று இருந்த 1950-1970 காலகட்டத்தில் திரைப்படம் தமிழ் மக்கள் தொகுதியை கட்டமைக்கும் பிரதான ஊடகமாக மாறியது. அப்போதுதான் அண்ணா, கலைஞர் ஆகியோரின் வசனங்கள் நாடக மேடையிலிருந்து திரைவெளிக்குச் சென்றன. அந்த திரைவெளியில் இரண்டு முகங்கள் இணைந்தன – கலைஞரின் தமிழைப் பேசின. கலைஞர் -எம்.ஜி.ஆர்- சிவாஜி என்ற கலாசார முக்கோணம் உருவானது.

கலைஞரின் இறவாப் புகழ் கொண்ட வசனங்களால் உருவான பராசக்தி (1952) படத்தில் சிவாஜி கணேசன் அறிமுகமானார். இவரது உணர்ச்சி ததும்பும் முக அமைப்பும், தமிழ் வசன உச்சரிப்பும் இவரை அக உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்க குணசித்திர நடிகராக உருவாக்கியது. கலைஞர் வசனங்களால் புகழ் பெற்ற மந்திரிகுமாரி (1950). மலைக்கள்ளன் (1954) ஆகியவற்றால் நட்சத்திர அந்தஸ்த்தைப் பெற்ற எம்.ஜி.ஆர் துடிப்புமிக்க உடல் அசைவுகளால் மக்களைக் கவர்ந்து சாகச கதாநாயகனாக மாறினார்.

இதன் விளைவாக திராவிட தமிழர் இறையாண்மையின் அகப்பரிமாணமாக சிவாஜியும், புறப்பரிமாணமாக எம்.ஜி.ஆரும் உருவாயினர். அகப்பரிமாண இறையாண்மையின் அடையாளமான சிவாஜி காங்கிரசில் சேர்ந்தார். புறப்பரிமாண இறையாண்மையின் அடையாளமான எம்.ஜி.ஆர் தி.மு.க-வில் தொடர்ந்தார். இந்த நிகழ்வு இந்திய ஒன்றியத்துடன் தமிழ் சுயம் பொருந்திப்போவதற்கான மெய்நிகர் வெளி இணைப்பாக மாறியது எனலாம். கீழ்கண்ட அட்டவணை மூலம் அதனைப் புரிந்துகொள்ளலாம்.

இந்த அட்டவணையில் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் இடம் மாறியிருப்பது நிற வேறுபாட்டினால் சுட்டக் காட்டப்படுகிரது. இவ்விதம் நிகழ்ந்தது தமிழ் சுயமும், இந்திய ஒன்றிய இறையாண்மையும் பொருந்திப்போக வகை செய்தது.

இன்றைய தேர்தல் முடிவுகள்

நடந்து முடிந்த தேர்தலில் ஒரு வித்தியாசமான இணை நிகழ்ந்துள்ளது. அகவெளி நாயகரான, சிவாஜியின் வாரிசு எனக் கருதப்படக்கூடிய கமலஹாசன் தி.மு.க கூட்டணியின் அங்கமானார். தி.மு.க-வை ஆதரித்தார். புறவெளி சாகச நாயகனான, குணசித்திர நடிப்பு சாத்தியமில்லாத விஜய் தி.மு.க-விற்கு மாற்றாகக் கட்சி கண்டு எம்.ஜி.ஆர் இடத்தில் ஆட்சியை பிடித்துள்ளார். இது தமிழ் சுயம் மேலும் வலுவடைந்து வருவதையும், புற வெளி இறையாண்மை இன்னும் வெகுகாலத்திற்கு மெய்நிகர் பிம்பங்களால் மட்டும் இட்டு நிரப்பப் பட முடியாது என்பதையும் குறிக்கிறது.

இன்னும் துல்லியமாகச் சொன்னால் விஜய் நாயக பிம்பத்தின் உள்ளீடாக மாற காங்கிரசும், பாஜக-வும் போட்டிபோடுவது ஒன்றியவாத சக்திகள் (Unionists) நேரடியாக தமிழ்நாட்டில் முரணரசியல் செய்ய இயலாது என்று ஏற்றுக் கொள்வதின் வெளிப்பாடுதான். இந்திய மக்களாட்சி இயங்கியலில் முற்போக்கு சக்திகள் என்பவை கூட்டாட்சிவாத (Federalist) சக்திகள்தான். அவற்றிற்கு தலைமையேற்று நடத்தும் சாத்தியமும், ஆற்றலும், வரலாற்று இன்றியமையாமையும் கொண்ட கட்சி தி.மு.க. 

இருபத்தோராம் நூற்றாண்டு வெகுஜன அரசியலில் மக்கள் நலன் சார்ந்த முன்னெடுப்புகள் பலவும் கூட்டாட்சிவாத சக்திகளால்தான் நிகழ்கின்றன என்பதில்தான் அதன் சாராம்சமான முக்கியத்துவம் அடங்கியுள்ளது. கூட்டாட்சியத்தை பழைய தேசியவாத மயக்கத்திற்குள் ஆழ்த்த முயன்ற சீமானின் முயற்சிகள் சந்தித்துள்ள பின்னடைவும் மிக ஆரோக்கியமானதுதான். பாஜக ஒன்றியவாத சக்தியாக தெளிவாக வெளிப்படுகிறது. தி.மு.க உள்ளிட்ட சில மாநில கட்சிகள் கூட்டாட்சிவாத சக்திகளாக உள்ளன.

காங்கிரஸ் எந்த நிலையெடுக்கப்போகிறது என்பதில்தான் சிக்கல் தோன்றியுள்ளது. ராகுல் காந்தி தி.மு.க உறவை துண்டித்திருப்பது அவர் ஒன்றியவாத சார்பை மேற்கொள்வதின் திட்டவட்டமான அடையாளம் எனலாம். பாஜக-வை எதிர்க்க வேண்டுமானால் ஒற்றை தேசிய கட்சியாகக் காங்கிரஸ் காட்டிக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப் பட்டிருக்கலாம். பீஹாரில் தேஜஸ்வியுடன் இணக்கம் பேணாதது, வங்காளத்தில் மமதா பானர்ஜிக்கு எதிராகக் களமாடியது ஆகியவற்றுடன் தி.மு.க உறவு முறிவை இணைத்துப் பார்க்க வேண்டும். இந்த அணுகுமுறை காங்கிரஸ் பாஜக-வை வெற்றிகொள்ள உதவாது என்பதே நம் அக்கறை.

கட்டுரையாளர் குறிப்பு:  

From MGR to Vijay: The Continuity of the Cinematic Hero's Image - Article in Tamil by Rajan Kurai

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள:rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share