இந்தியா கூட்டணியில் இருந்து திமுக வெளியேறிவிட்ட நிலையில் திமுக கூட்டணியில் (VCK DMK Alliance) விசிக நீடிப்பதா? அல்லது காங்கிரஸுடன் இணைந்து இந்தியா கூட்டணியில் (INDIA VCK Congress Alliance) தொடருவதா? என்பது குறித்து சில வாரங்களில் முடிவு எடுக்கப்படும் என்று அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
PTI செய்தி நிறுவனத்துக்கு தொல். திருமாவளவன் எம்.பி. அளித்த பேட்டி: திமுகவின் எதிர்காலம் என்பது இன்னும் பாதிப்படையவில்லை. அவர்கள் 60 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருக்கிறார்கள். திறம்படச் சட்டசபையில் பணியாற்றுவார்கள். ஆகவே எந்தப் பாதிப்பும் அரசியல் எதிர்காலத்தில் நிகழாது என்று நான் கருதுகிறேன்.
காங்கிரஸ், தவெக-வுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டது. அதனால் திமுக, மக்களவை சபாநாயகருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறது. அதில், ‘நாங்கள் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி-க்களுடன் இணைந்து அமர மாட்டோம், எனவே திமுக உறுப்பினர்களுக்குத் தனியாக ஒரு பகுதி அல்லது இடம் ஒதுக்கப்பட வேண்டும்’ என்று கேட்டுள்ளனர். இதிலிருந்து, எதிர்காலத்தில் திமுக ‘இந்தியா’ கூட்டணியில் ஒரு அங்கமாக இருக்காது என்பதை நாம் தெரிந்து கொள்கிறோம்.
எனவே, தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்காது. இந்தச் சூழலில், விசிக ஒரு முடிவை எடுத்தாக வேண்டும். நாங்கள் திமுக-வுடனேயே தொடரப் போகிறோமா அல்லது ‘இந்தியா’ கூட்டணியில் இருக்கும் காங்கிரஸுடன் இணைந்து செல்லப் போகிறோமா என்பதை இன்னும் நாங்கள் தீர்மானிக்கவில்லை. எனவே, இன்னும் சில வாரங்களுக்குள் எங்களது உயர்நிலைக் குழுவைக் கூட்டி இது குறித்து முடிவெடுப்போம்.
தேர்தலுக்கு முன்பே முடிவெடுத்துவிட்ட காங்கிரஸ்
மற்றவர்களுக்கு முன்பாகவே தவெக-வுடன் இணைய வேண்டும் என்கிற காங்கிரஸின் இந்த முடிவிற்குப் பின்னால் இருக்கும் காரணம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் என்னால் உணர முடிகிறது, இது தேர்தலுக்கு முன்பே அவர்களால் விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்று. இது ஒரு தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தம் என்று நான் நம்புகிறேன். அதனால்தான் தேர்தல் முடிவுகள் வந்த ஒரே நாளில், காங்கிரஸ் திமுக கூட்டணியை விட்டு வெளியேறி, தவெக-விற்குத் தனது ஆதரவை வழங்கியது. மேலும் எதிர்காலத்தில் காங்கிரஸானது தவெக-வுடன் இணைந்து பயணிக்கும் என்றும் அறிவித்திருக்கிறது. இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
