தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, மதச்சார்புள்ள வந்தே மாதரம் பாடலை தொடர்ந்து பாடினால் அரசுக்கான ஆதரவை விடுதலை சிறுத்தைகள் திரும்பப் பெறுமா என்பது குறித்து அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லியில் இன்று மே 10-ந் தேதி செய்தியாளர்களை திருமாவளவன் எம்.பி. சந்தித்தார். அப்போது, “வந்தே மாதரம் விவகாரத்தில் இப்போதைய நிலைப்பாட்டை விஜய் அரசு தொடர்ந்தால், உங்களுடைய ஆதரவு புதிய அரசுக்குத் தொடருமா?” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த திருமாவளவன், “இப்பதான் பதவி ஏற்றுள்ளனர். மே 13-ஆம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஆகவே அதற்கு எந்த நெருக்கடியையும் தர நாங்கள் விரும்பவில்லை. தோழமையோடுதான் நாங்கள் வந்தே மாதரம் பாடலுக்கான எதிர்ப்பை தெரிவிக்கிறோம்.
வந்தே மாதரம் பாடல் பிற மாநிலங்களில் அல்லது இந்திய ஒன்றிய அரசு நடத்துகிற விழாக்களில் அதனுடைய இசை வடிவம் மட்டுமே ஒலிக்கப்படுகிற நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது என்றாலும் கூட, பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆளுகிற மாநிலங்களில் வந்தே மாதரம் பாடல் ஒலிப்பது நடைமுறையில் இல்லை.
குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில். தமிழ்நாட்டில் இதுவரை எந்த நிகழ்விலும் இந்தப் பாடல் ஒலிக்கப் பெற்றதில்லை. தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் பின்பற்றப்பட்டு வருகின்றன, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
முதல் முறையாக இந்த ஒரு நிலைப்பாட்டை இந்த அரசு பொறுப்பேற்றதுமே மேற்கொண்டிருப்பது என்பது அதிர்ச்சி அளிக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ஒரு ஏமாற்றத்தை அளிக்கிறது” என்றார்.
