அதிமுகவினருக்கு 4 அமைச்சர்கள் பதவி வழங்க முதல்வர் விஜய் ஒப்புதல் தந்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.
2026 சட்டமன்றத் தேர்தல் திருப்பத்துக்கு மேல் திருப்பம் தந்துள்ளது.
108 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதற்கிடையே தமிழகத்தின் முக்கிய கட்சியான அதிமுகவுக்குள் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அந்த கட்சி 11 தேர்தல்களில் தோல்வியை சந்தித்துள்ளது.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும் என அக்கட்சியில் கலகக் குரல்கள் வெடித்துள்ளன. அதிமுகவின் மூத்த தலைவர்களான சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி, சி. விஜயபாஸ்கர் ஆகியோர் அடங்கிய மூவரணி தலைமையில் இந்த கலகம் வெடித்துள்ளது. இது தொடர்பாக நமது டிஜிட்டல் திண்ணையில் பதிவிட்டிருந்தோம்.
அதேபோல, முதல்வர் விஜய்க்கு இந்த மூவரணியில் உள்ள அதிமுகவின் 34 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தருவது எனவும் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஆதரவு கடிதங்களையும் தயார் செய்து வைத்துள்ளனர் என்பதையும் நமது டிஜிட்டல் திண்ணையில் பதிவு செய்திருந்தோம்.
மேலும், 34 அதிமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவை கொடுப்பதால் தங்களுக்கு 5 அமைச்சர் பதவி வேண்டும் எனவும் இந்த மூவரணி, தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையும் நாம் பதிவு செய்திருந்தோம். இருந்த போதும் தவெக தரப்பில் இருந்து சரியான பதில் வராமல் இருந்தது.
இந்நிலையில் இன்று முதல்வர் விஜய் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் பாடப்பட்டது, தமிழ்த் தாய் வாழ்த்து 3-வதாக பாடப்பட்டது, முந்தைய திமுக அரசு மீதான கடுமையான விமர்சனம் ஆகியவையால் சிபிஐ, சிபிஎம், விசிக அதிருப்தியை அறிக்கைகளாக வெளியிட்டுள்ளன.
இதனால் இந்த கட்சிகள் ஆதரவு, முதல்வர் விஜய்க்கு தொடர்ந்து நீடிக்குமா? என்ற விவாதங்களும் எழுந்துவிட்டன.
இதனையடுத்து அதிமுகவின் 34 எம்.எல்.ஏக்கள் ஆதரவை ஏற்றுக் கொள்வது; அதிமுகவினருக்கு 4 அமைச்சர் பதவி தருவது என முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
அதேபோல விஜய்க்கு முதன் முதலில் ஆதரவை தெரிவித்த காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர்கள் பதவி வழங்கவும் முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளார் என்கின்றன தகவல்கள்.
இன்னொரு பக்கம், அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு எதிராக பெரும்பாலானா மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்; தற்போதைய நிலையில் சேலம், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர்கள் மட்டுமே எடப்பாடிக்கு ஆதரவாக உள்ளனர் என்கின்றன தகவல்கள்.
