திருப்பத்தூர் சட்டசபை தொகுதியில் 1 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதி பதவி ஏற்க தடை விதிக்க கோரி திமுக வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.
திருப்பத்தூர் தேர்தல்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளராக சீனிவாச சேதுபதி, திமுக வேட்பாளராக பெரிய கருப்பன் போட்டியிட்டனர். மே 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது இருவருக்கும் இடையே கடும் போட்டி இருந்தது. 233 தொகுதிகள் முடிவு அறிவிக்கப்பட்ட நிலையில் திருப்பத்தூர் தொகுதி முடிவு மட்டும் இழுபறியாக இருந்தது. இதன் பின்னர் 1 ஓட்டு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர்.
திருப்பத்தூர் தேர்தல் முடிவும் வழக்கும்
சீனிவாச சேதுபதி (தவெக)- 83,375
பெரிய கருப்பன் (திமுக)- 83, 374
தமது தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட சீனிவாச சேதுபதி எம்.எல்.ஏ.வாக பதவியேற்க தடை விதிக்க கோரி திமுகவின் பெரிய கருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தார். இதனை அவசர வழக்காக இன்று மே 10-ந் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் கோடைகால அமர்வு நீதிபதிகள் விக்டோரியா கவுரி மற்றும் செந்தில் குமார் ஆகியோர் விசாரித்தனர்.
இந்த விசாரணையின் போது, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்குட்பட்ட தபால் வாக்குகள், வேலூர் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு மாற்றி அனுப்பப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, இது குறித்து தேர்தல் ஆணையம் ஏன் பதிலளிக்கவில்லை? இது தொடர்பாக நாளை மே 11-ந் தேதி தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன் இந்த வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சட்டசபை நாளை கூடுகிறது
இந்நிலையில் தமிழகத்தின் புதிய சட்டசபை நாளை கூடுகிறது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா, புதிய எம்.எல்.ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார்.
மே 13-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு
முதல்வர் ஜோசப் விஜய் அரசு வரும் 13-ந் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது. அப்போது தவெக எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதி வாக்கெடுப்பில் பங்கேற்று வாக்களிக்க முடியுமா? இல்லையா? என்பது நாளைய உயர்நீதிமன்ற விசாரணையில் தெரிய வரும்.
தமிழக சட்டசபையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 234. 2 தொகுதிகளில் வென்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் சட்டசபையில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 233.
சட்டசபையில் பெரும்பான்மைக்கு தேவை 117 எம்.எல்.ஏ.க்கள். தற்போதைய நிலையில் முதல்வர் விஜய் அரசுக்கு மொத்தம் 120 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது.
தவெக எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதிக்கு நீதிமன்றம் தடை விதித்தால் முதல்வர் விஜய் அரசுக்கு 119 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கும். இந்த 119 எம்.எல்.ஏக்களும் முழுமையாக வாக்களித்தால் விஜய் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறும்.
