தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
விஜய் பொறுப்பேற்றது முதல் சட்டப்பேரவையில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது வரையிலான புகைப்படங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்ற முதல்வராகியுள்ளார்.

இதற்கான விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.
இதில் ஜோசப் விஜயின் தாய் ஷோபா, தந்தை சந்திரசேகர் மிக எமோஷனலாக காணப்பட்டனர்.

திரை பிரபலங்கள் பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நடிகை திரிஷா விஜய் முதல்வராக பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு வந்தது கவனத்தை ஈர்த்தது.
நேரு ஸ்டேடியத்துக்கு காலை 8:30 மணி முதல் விருந்தினர்கள் வர தொடங்கினர்.
விஜய் அரங்கத்துக்குள் வந்ததும் டிவிகே, டிவிகே என கோஷம் எழுப்பி உற்சாகமாக வரவேற்றனர்.
தொடர்ந்து ஆளுநர் வருகை தந்தபோது, அவரை பூங்கொத்து கொடுத்து விஜய் வரவேற்றார்.

காலை 9:50 மணி அளவில் விழா தொடங்கியது.
முதலில் வந்தே மாதரம் பாடல் இசைக்க பின்னர் தேசிய கீதம் அதன் பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

இதையடுத்து 18-வது முதல்வராக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

முதல்வர் விஜய்யை தொடர்ந்து என் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல் குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டனர்.

இதைத்தொடர்ந்து ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் ஆகியோர் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இதையடுத்து ஆளுநரை அனுப்பி வைத்து விட்டு வந்த விஜய், 200 யூனிட் இலவசம் மின்சார திட்டத்தை செயல்படுத்துவதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.

முதல்வர் விஜய் பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்றார். அவர் விஜய்க்கு அருகே அமர்ந்திருந்தார். இருவரும் சுவாரசியமாக சிரித்துக்கொண்டே பேசிக் கொண்டிருந்தது கவனத்தைப் பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

வழக்கமாக முதல்வர்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையை அணிந்திருப்பார்கள். ஆனால் விஜய் தனது ஃபேவரிட் கோட் சர்ட் அணிந்து வந்ததும் கவனத்தைப் பெற்றது.

நேரு ஸ்டேடியத்தில் நிகழ்ச்சி முடிந்ததும் முதல்வர் விஜய் தலைமைச் செயலகத்துக்கு புறப்பட்டார். அப்போது சாலையின் இரு புறங்களிலும் திரண்டு இருந்த மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் தலைமைச் செயலகத்துக்கு வந்தடைந்த விஜய்க்கு காவலர்கள் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து தலைமைச் செயலகத்துக்குள் சென்ற விஜய் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். அப்போது அவருடன் செங்கோட்டையன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டு அலுவல் பணிகளை தொடங்கினார்.

தலைமைச் செயலகத்தில் தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு நிலை குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து டிஜிபி சந்திப் ராய் ரத்தோரிடம் கேட்டறிந்தார்.

முதல்வரான பின்னர் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் திராவிடர் கழக தலைவர் வீரமணியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதைத்தொடர்ந்து சட்டப்பேரவை தலைவராக நியமிக்கப்பட்ட கருப்பையா பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை அடுத்து தலைமைச் செயலகம் சென்றார். தற்போது தலைமைச் செயலகத்தின் முக்கிய பிரிவுகள் மற்றும் அமைச்சர்களின் அலுவலகங்களில் விஜயின் படங்கள் வைக்கப்பட்டது.

மாலை 6 மணியளவில் நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்துக்கு திரும்பினார் விஜய்.
விஜய் முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் நிலையில் அவருக்கு திரை பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
