தமிழக அரசின் கடன் விவகாரத்தில் முந்தைய திமுக அரசின் மீதான விமர்சனம் மற்றும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் சர்ச்சையில் முதல்வர் ஜோசப் விஜய்க்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்ட தவெக தலைவர் ஜோசப் விஜய் மற்றும் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக் கொண்ட ஒன்பது பேருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது மனமுவந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வரவேற்பு
போதை ஒழிப்பு, மகளிர் பாதுகாப்பு, 200 யூனிட் வரை மின் கட்டணம் இல்லை என மூன்று அறிவிப்புகளை இன்று முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். இதை வரவேற்கிறோம்.
தமிழ்நாடு அரசின் கஜானா காலியாக இருப்பதாகவும், 10 இலட்சம் கோடி கடன் சுமையை வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். அதுகுறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமெனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
முந்தைய திமுக அரசு மீதான விமர்சனம்
தமிழ்நாட்டின் கடன் அளவு ₹10 இலட்சம் கோடி என்று வெறுமனே குறிப்பிடுவது தவறான புரிதலை ஏற்படுத்தும்; ஏனெனில், கடனை எப்போதும் ஒரு குறிப்பிட்ட அளவுகோலோடு ஒப்பிட்டே மதிப்பிட வேண்டும். கடனை மதிப்பிடுவதற்கான சரியான முறை, அதனை மாநிலத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியோடு (GSDP) ஒப்பிட்டுப் பார்ப்பதே ஆகும்.
தமிழ்நாட்டின் கடன் அளவு, 15-ஆவது நிதிக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள்ளேயே உள்ளது. கடனின் முழுமையான அளவுகளை மட்டும் சுட்டிக்காட்டி அச்சமூட்டுவது, அரசியல் நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படும்.
3-வதாக பாடப்பட்ட தமிழ்த் தாய் வாழ்த்து
இன்றைய நிகழ்வில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ப் பாடல் மூன்றாவதாக ஒலிக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக, அரசு விழாக்களின்போது தொடக்கத்தில் ‘தமிழ்த்தாய் வாழ்த்தினை’ ஒலிக்கச் செய்வது நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டுவரும் ஒரு மரபாகும். ஆனால். இன்று அம்மரபினை மீறி, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மூன்றாவதாகப் பாடியுள்ளனர். அதாவது, வழக்கத்திற்கு மாறாக ‘வந்தே மாதரம்’ பாடலை முதலாவதாகவும், தேசிய கீதத்தை இரண்டாவதாகவும் இசைத்த பின்னரே, கடைசியாக தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாடியுள்ளனர். இந்த அணுகுமுறை மிகவும் அதிர்ச்சயளிப்பதாக உள்ளது. இது அதிகாரிகளின் கவனக்குறைவால் நிகழ்ந்ததாகக் கருத இயலவில்லை. மாறாக, மாண்புமிகு ஆளுநரின் விருப்பப்படியோ அல்லது ஆளுநரை மகிழ்விக்கவோ செய்யப்பட்டதா என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது. இது குறித்து விளக்கமளிக்க வேண்டியது முதலமைச்சரின் கடமையாகும்.
முதல்வர் விஜய் விளக்கம் தர வேண்டும்
இனிவரும் காலங்களிலும் அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடல் ஒலிக்கப்படுமா? அதுவும் முதலில் இடம்பெறுமா? அல்லது அப்பாடல் இனி ஒலிக்கப்படாமல் தவிர்க்கப்படுமா? அடுத்து, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு வழக்கம்போல முதலிடம் தரப்படுமா? இது தொடர்பாகவும் அரசு விளக்கமளிக்க வேண்டும்.
மதச்சார்புள்ள வந்தே மாதரம் பாடலை பாடுவதா?
மதசார்பற்ற அரசமைக்கவே காங்கிரசு, இடதுசாரிகள், முஸ்லீம் லீக் மற்றும் விசிக ஆகிய கட்சிகளின் ஆதரவைக் கோரியதாக தவெக தரப்பில் சொல்லப்பட்டது. அதனடிப்படையில்தான் திமுக கூட்டணியில் அங்கம் வகித்தாலும் அக்கட்சிகள் ஆதரவளிக்க முன்வந்தன. ஆனால், மதசார்புடைய கருத்தைக் கொண்டது என்கிற விமர்சனத்துகுள்ளாகும் வந்தே மாதரம் பாடலை பதவி ஏற்புவிழாவில் இசைக்கச் செய்த நிகழ்வு நெருடலை ஏற்படுத்தியுள்ளது. இது ஆதரவளித்த கட்சிகளுக்கும் எதிரான விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. எனவே, இதற்கு உரிய விளக்கமளிக்க வேண்டியது தவிர்க்க இயலாததாக மாறியுள்ளது.
மதச்சார்பற்ற அரசு- உறுதி மொழி கொடுங்க..
‘மாற்றம்’ என்னும் முழக்கத்தை முன்னிறுத்தி மக்களின் பேராதரவைப் பெற்று முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள ஜோசப் விஜய், அவரது அரசு மதச்சார்பற்ற அரசாகவே இருக்கும் என்ற உறுதிமொழியைத் தமிழ்நாட்டு மக்களுக்கு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.
