பொது வாழ்வில் இருந்து சில காலம் ஓய்வு.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு – காரணம்?

Published On:

| By Pandeeswari Gurusamy

PTR

அரசியலில் இருந்து சில காலம் ஓய்வெடுக்க உள்ளதாக முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 19,128 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் மதார் பத்ருதீனிடம் தோல்வியை தழுவினார்.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று (மே 18) பிடிஆர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் திமுகவிற்காகவும், மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ வாகவும், தமிழ்நாடு அமைச்சராகவும், மத்திய ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினராக இருந்த காலத்தில தான் செய்த பணிகளை விரிவாக விளக்கி உள்ளார்.

இதைத் தொடர்ந்து அரசியலில் இருந்து சிறிது காலம் ஓய்வெடுக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” “கடந்த 10 ஆண்டுகளாகச் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியது, எனது குழுவினரோடு சேர்த்து, இரவு பகல் பாராது உழைக்க வேண்டிய ஒரு தொடர் பொறுப்பாக இருந்தது. இந்நிலையில், எனது சொந்த விருப்பங்களின்படி நேரத்தையும் அன்றாட அட்டவணையையும் முழுமையாகக் கையாளும் வகையில், சில வாரங்கள் ஓய்வெடுக்க ஆவலோடு காத்திருக்கிறேன்.

இதற்கு முன்பு நேரமின்மை காரணமாக என்னால் ஒப்புக்கொள்ள முடியாமல் போன, இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களுக்குச் சென்று உரையாற்றுவதற்கான அழைப்புகளை இனி என்னால் ஏற்றுக்கொள்ள முடியும். நான் அமைச்சராக இருந்த காலத்தில், வெளிநாடுகளில் விரிவுரை ஆற்றவும், நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் வந்த அழைப்புகளை ஏற்பதற்கான தகுந்த அனுமதிகள் எனக்குப் பலமுறை மறுக்கப்பட்டன. தற்போது கிடைத்துள்ள இந்த இடைவெளி அமெரிக்கா, ஐரோப்பா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நீண்ட நாட்களாகக் காத்திருப்பில் இருக்கும் அழைப்புகளுக்குப் பதிலளிக்க எனக்கு வழிவகை செய்யும்.

ADVERTISEMENT

முன்பே குறிப்பிட்டிருந்தபடி, ‘ஹார்பர் காலின்ஸ்’ (Harper Collins) பதிப்பகத்துடன் நான் ஒப்பந்தம் செய்துள்ள புத்தகத்தை எழுதி முடிப்பதற்கான காலக்கெடுவில் ஏற்கனவே தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த ஓய்வு நேரத்தை அந்தப் புத்தகத்தை எழுதுவதற்காகப் பயன்படுத்திக் கொள்வேன். மேலும், அண்மையில் எனக்கு 60 வயது நிறைவடைந்துள்ளதால், எனது ஆரோக்கியத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் வழக்கமான உடற்பயிற்சி மற்றும் சீரான வாழ்க்கை முறை மாற்றங்களில் கவனம் செலுத்த விரும்புகிறேன்.

கடந்த 10 ஆண்டு கால பொதுவாழ்வில் நான் ஏற்படுத்திய மாற்றங்களின் நினைவூட்டலாக—நான் மேற்கொண்ட மிக முக்கியமான திட்டங்கள், நிகழ்வுகள் மற்றும் சாதனைகளை வரும் வாரங்களில் எனது குழுவினர் பொதுவெளியில் முன்னிலைப்படுத்துவார்கள். நான் இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தக் காரணமாய் இருந்த அனைவருக்கும், குறிப்பாக மதுரை மத்திய தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும் எனது வாழ்நாள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்த தேர்தல் வரை, ஒரு சில காலத்திற்கு நான் மக்கள் பிரதிநிதியாக இருக்கப் போவதில்லை என்ற எதார்த்தத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், பொதுச் சேவை ஆற்ற வேண்டும், சமூகத்தில் ஒரு மாற்றத்தை உந்தும் காரணியாக இருக்க வேண்டும் என்ற எனது ஆர்வம் சற்றும் குறையவில்லை.

புதிய ஆற்றலுடனும், புத்துணர்ச்சியுடனும் நான் மீண்டும் வருவேன்!” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share