தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெறும் வழக்கு களில் ஆஜராகி வாதிட 2 கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ளது. கடந்த மே 10ம் தேதி விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அரசு தலைமை வழக்கறிஞராக இருந்த பி.எஸ்.ராமன் ராஜினாமா செய்தார். அதேபோல, அரசு தரப்பின் பல்வேறு வழக்கறிஞர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து, அந்தப் பதவி களுக்கு புதியவர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவருடைய பரிந்துரை அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதி மன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தரப்பில் வழக்குகளில் ஆஜராகி, வாதங்களை முன் வைக்க மூத்த வழக்கறிஞர்கள் பி. வி.பாலசுப்பிரமணியம், டி.கவுதமன் ஆகியோரை கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்
கள் அந்தஸ்தில் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதேபோல மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யனை நியமித்தும் தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தவெக அரசு சார்பில் நியமிக்கப்பட்ட விஜய் நாராயணன் அதிமுக ஆட்சியில் 2017 முதல் 2021 வரை தலைமை அரசு வழக்கறிஞராக இருந்தார். பாலசுப்பிரமணியம், கவுதமன் ஆகியோரும் அதிமுக ஆட்சியில் கூடுதல் அட்வகேட் ஜெனரல்களாக இருந்தனர். அதிமுக ஆட்சியில் அரசு வழக்கறிஞர்களாக இருந்தவர்களை, தவெக ஆட்சியிலும் அரசு வழக்கறிஞர்களாக நியமித்துள்ளது தவெக வழக்கறிஞர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
யார் இந்த ஜான் சத்யன்
சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞராக நியமிக்கப்பட்டுள்ள ஜான் சத்யன், சில ஆண்டுகளுக்கு முன்பு, உச்ச நீதிமன்ற கொலிஜியத்தால், உயர் நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டார். ஆனால், அவரது பெயரை மத்திய அரசு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
