தேர்தலில் திமுக செய்தது என்ன? தவெக ஜெயித்தது எப்படி? விஜய் அரசு என்ன செய்யும்? மு.க.ஸ்டாலின் ஓபன் டாக்!

Published On:

| By Mathi

DMK MK Stalin Election

”மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் சட்டசபை தேர்தல் பணிகளை ஒவ்வொரு கட்டமாக திமுக (DMK) மேற்கொண்டது; ஆனால் தேர்தல் பணிகளையே செய்யாமல் இன்ஸ்டாகிராம், சிறுபிள்ளைகள் மூலம் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துவிட்டது” என முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் (MK Stalin) தெரிவித்துள்ளார்.

சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சியை இழந்த பிறகு தஞ்சாவூரில் இன்று மே 18-ந் தேதி நடைபெற்ற திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. மகள் க. கலையழகி- ராம்பாலாஜி திருமண நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின், முதல் முறையாக பங்கேற்று பேசினார். இந்நிகழ்வில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

ADVERTISEMENT

திமுகவைப் பொறுத்தவரைக்கும் எத்தனையோ தேர்தலைப் பார்த்திருக்கிறது. 1949-ல் தொடங்கிய நம்முடைய கழகம், தொடர்ந்து 52-லே நடைபெற்ற தேர்தலாக இருந்தாலும் சரி, 57-ல் நடைபெற்ற தேர்தலாக இருந்தாலும் சரி, 62-லே நடைபெற்றிருக்கக்கூடிய தேர்தலாக இருந்தாலும் சரி, அதற்குப் பிறகு 67-லே நடைபெற்றிருக்கக்கூடிய தேர்தலாக இருந்தாலும் சரி, 71-லே, இப்படி தொடர்ந்து நடைபெற்றிருக்கக்கூடிய தேர்தல்களில் பல வெற்றிகளைக் கண்டதுண்டு, பல தோல்விகளையும் நாம் சந்தித்திருக்கிறோம்.

பீனிக்ஸ் பறவை போல..

ஆனால், தோல்வி அடைகிற நேரத்திலேதான் திமுக எப்பொழுதுமே ஒரு ஃபீனிக்ஸ் பறவையைப் போல கீழிருந்து எழக்கூடிய நிலையிலே அது வரும்.

ADVERTISEMENT

இங்கே கூட பேசியவர்கள் எல்லாம் ஏதோ ஒரு சோகத்தில் இருப்பது போல… நான் பார்க்கிறேன், அவங்க மட்டும் இல்ல, இந்த மேடையில் இருக்கக்கூடியவங்க மட்டும் இல்ல, எதிரில் இருக்கக்கூடியவங்ககூட ஏதோ சோகமாக உட்கார்ந்திருக்கக் கூடிய காட்சியைப் பார்க்கிறேன். நாம் சோகப்பட வேண்டிய அவசியமே இல்லை. நாம்தான் இன்றைக்கு ஆட்சியில் இருக்கிறோம்.

திமுக அரசின் திட்டங்கள்

நம்முடைய திட்டங்களைப் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அஞ்சு வருஷம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தப்போ, தமிழ்நாட்டு மக்களுக்கு, ஏழை எளியவர்களுக்கு, விவசாயப் பெருங்குடி மக்களுக்கு, நெசவாளர்களுக்கு, தொழிலாளர் தோழர்களுக்கு, அடித்தளத்திலே வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, மாணவர்களுக்கு, மாணவியர்களுக்கு, பெண்களுக்கு, மகளிருக்கு, ஆசிரியர்களுக்கு, இப்படி எல்லாத் தரப்பு மக்களுக்கும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிய ஆட்சி நம்முடைய திராவிட மாடல் ஆட்சி என்பதை யாரும் மறுத்துவிடவோ, மறைத்துவிடவோ முடியாது.

ADVERTISEMENT

நாம் வெற்றி வாய்ப்பை இழந்து, புதிய ஆட்சி பொறுப்பேற்ற போது, புதிய ஆட்சிக்கு பொறுப்பேற்றிருக்கக்கூடியவர்களுக்கு நான் வாழ்த்துச் சொன்னேன். நீங்கள் படித்திருப்பீர்கள், அந்த அறிக்கையைப் படித்திருப்பீர்கள்.

வாழ்த்துச் சொன்னதோடு சொன்னேன், புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கக்கூடியவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கக்கூடியவர்களுக்கு ஒரு வேண்டுகோள்; திராவிட மாடல் ஆட்சி காலத்திலே நிறைவேற்றியிருக்கக்கூடிய திட்டங்களை எல்லாம் நீங்கள் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் என்று ஒரு கோரிக்கை வச்சேன். ஆக, நாம் வைத்திருக்கிற கோரிக்கை, இன்றைக்கு அது எப்படி நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பதை இன்றைக்கு கண்மூடாமல் பார்க்கிறோம். ஆகவேதான் சொன்னேன், நாம்தான் இன்றைக்கு ஆட்சியில் இருக்கிறோம்.

நான் தேர்தல் நேரத்திலே சொன்னேன், இந்தத் திட்டம் இருக்கிற வரைக்கும் நாம் பெண்களுக்கு, மாணவர்களுக்கு, மாணவிகளுக்கு செய்திருக்கக்கூடிய சாதனைகளை எல்லாம் யாராலும் மாற்றிட முடியாது. ஆக, திட்டம் நடக்கிற வரைக்கும் திராவிட மாடல் ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடந்துகிட்டு இருக்கு அப்படின்னு நான் பேசினேன். அதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலை.

தோல்விக்கான காரணம் ஆராய குழு

ஆக, இந்தத் தேர்தலில் தோற்றதைப் பார்த்து நாம் சிதறிடவில்லை, மனச்சோர்வடைந்திடவில்லை. 234 தொகுதிகள்ல இன்றைக்கு என்ன நிலை, எப்படி வெற்றி பெற்றிருக்கிறோம், எப்படி வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம், என்ன காரணம் என்பதைப் பற்றி ஆய்வு செய்வதற்காக நாம் ஒரு குழுவை நியமித்திருக்கிறோம். குழு அமைக்கப்பட்டு, 234 தொகுதிக்கு இன்றிலிருந்து அந்த குழு புறப்பட்டு ஆய்வு நடத்தியிருக்கு. அந்த ஆய்வின் போது, நம்மிடத்தில் என்ன குறை, நம்மிடத்தில் என்ன பிரச்சனை, மக்கள் என்ன நினைச்சிருக்காங்க, எது விடுபட்டு போயிருக்கு, ஏன் இந்த வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம், ஏன் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறோம் இந்தத் தொகுதியில் வெற்றி பெறல என்பதைப் பற்றி ஆய்வு செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கு.

அந்தக் குழு மட்டும் அல்ல, ‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் ஒரு வெப்சைட்டையும் ஆரம்பிச்சிருக்கிறோம். ஆக, அந்த வெப்சைட்ல கழகத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் அல்ல, பொதுமக்களும், அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களும் அதிலே தங்களுடைய கருத்துக்களை வெளியிடலாம் என்று அந்த வெப்சைட்டையும் நாங்க துவங்கி இருக்கிறோம்.

தேர்தல் பணிகள்

ஆகவே, இந்தத் தேர்தலைப் பொறுத்தவரைக்கும் ஒரு சுருக்கமாகச் சொன்னோம்னா, நம்முடைய கட்சி என்பது ஒரு கட்டமைப்பு கொண்டிருக்கக்கூடிய கட்சி. எப்போ நாடாளுமன்றத் தேர்தல் முடிஞ்சதோ, நாடாளுமன்றத் தேர்தல் முடிஞ்சதற்குப் பிறகு, நாம் நம்முடைய பணியைத் தொடங்கிட்டோம். தேர்தல் பணியை, சட்டமன்றத் தொகுதியினுடைய தேர்தல் பணியை நம்ம அப்பவே தொடங்கிட்டோம்.

பாக முகவர்கள் அமைச்சோம், பூத் கமிட்டி அமைச்சோம், ‘ஒன்றிணைவோம் வா’ என்ற தலைப்பில கழக உறுப்பினர்கள் சேர்க்கின்ற அந்தப் பணியைத் தொடங்கினோம். எஸ்.ஐ.ஆர் பணியை முடிச்சோம். அதற்குப் பிறகு இளைஞரணி மண்டல மாநாடுகள் நடத்தினோம், மகளிர் அணியினுடைய மண்டல மாநாடுகள் நடத்தினோம், பாக முகவர்களை எல்லாம் அழைத்து மண்டல மாநாடுகள் நடத்தினோம். ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்பாளர்கள் நியமிச்சோம், மண்டல அளவிலே அதற்கும் சில பொறுப்பாளர்கள் அமைச்சோம்.

தவெக ஜெயிச்சது எப்படி?

இவ்வளவு பணிகளையும் செஞ்சு, ஏன் நாம் ஆட்சிக்கு வர முடியல? ஆனால் எந்தப் பணியும் செய்யாம, வாக்காளர்களை சந்திக்கல, பாக முகவர்களை நியமிக்கல, பூத் ஏஜென்ட் அமைக்கல, இன்னும் சொல்லணும்னா… கவுண்டிங் ஏஜென்ட்டைக் கூட பல இடங்களில் நியமிக்கல, அப்படிப்பட்டவர்கள் இன்றைக்கு வெற்றி பெற்று… வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்திருக்காங்க. அது தவறு இல்லை. ஆனால் அதை என்ன நடந்திருக்கு? சோஷியல் மீடியா. ஆக, சோஷியல் மீடியாவைப் பொறுத்தவரை இன்ஸ்டாகிராம் (Instagram) என்று சொல்லக்கூடிய, அதைப் பயன்படுத்தி ரொம்ப சுலபமாக சிறு பிள்ளைகளை, குழந்தைகளை பிரச்சாரம் செய்ய வச்சு, அவர்களை அவர்களுடைய… தாத்தாக்களை, அப்பாக்களை, அம்மாக்களை, அவங்க வீட்ல இருக்கக்கூடிய பெரியவர்களிடத்தில் அந்த குழந்தைகள் மூலமாக பிரச்சாரங்களை நடத்தி, ஒரு திட்டமிட்ட இந்த பிரச்சாரங்கள் முடிந்திருக்கு. ஆக, அது நம்முடைய கண்ணுக்குத் தெரியாமல் போய்விட்டது. ஆனால் இனிமேல் நாம் உஷாராக இருந்து, அதையும் முறியடிக்கக்கூடிய வகையிலே அந்தப் பணியை நாம் நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் எல்லாம் தீட்டியிருக்கிறோம்.

மீண்டும் ஆட்சிக்கு வருவோம்

எனவே, நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நம்முடைய கழகம் இருக்கு, நம்முடைய இயக்கம் இருக்கு. நாங்கள் இருக்கிறோம், எதைப் பற்றியும் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. மீண்டும் நாம்தான் ஆட்சிக்கு வருவோம், வருவோம் என்ற நம்பிக்கையோடு பணியாற்றுங்கள்.

எனக்கு இருக்கக்கூடிய கவலையெல்லாம், இந்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றிய திட்டப் பணிகள் தொடர்ந்து, இன்னும் பல பணிகள் நிறைவேற்றியிருக்க வேண்டும். இன்னும் ஐந்து ஆண்டுகள் நமக்கு அந்த வாய்ப்புக் கிடைத்திருந்தால், இன்னும் பல பணிகள் நிறைவேற்றியிருப்போம். அது தடைபட்டுப் போயிருக்கிறது. அதை எப்படியாவது, நாம் எதிர்க்கட்சியாக இருந்ததாலும், இன்றைக்கு நாம் மக்களிடத்திலே போராட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை உரிமையோடு எடுத்துச் சொல்ல வேண்டிய அந்த வகையிலே, நம்முடைய கடமையை ஆற்றுவோம், ஆற்றுவோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

வீடியோ:

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share