மத்திய அரசு வழங்கும் மாணவர்களுக்கான நிதி கடந்த இரண்டு ஆண்டுகளாக வந்து சேரவில்லை என்றும், எந்த மறைமுக அழுத்தத்துக்கும் தமிழக அரசு அடிபணியாது என்றும் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டால் தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய அரசு நிர்பந்திப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, “அந்த நிதி எங்களுக்கானது அல்ல, அதிகாரிகளுக்கானதும் அல்ல. அது மாணவர்களுக்கும் மாணவிகளுக்குமான நிதி. எக்காரணம் கொண்டும் அதைத் தடை செய்வது துயரமானது, அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதே சமயம், எந்த மறைமுக அழுத்தத்துக்கும் தமிழக அரசு அடிபணியாது” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
கொள்கை சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை
தொடர்ந்து கட்சியின் கொள்கை குறித்துப் பேசிய அவர், “இருமொழிக் கொள்கை என்பது தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அடிப்படைக் கொள்கை. மண்ணுரிமை, பெண்ணுரிமை போலவே இருமொழிக் கொள்கையும் எங்களது பிரகடனப்படுத்தப்பட்ட கொள்கையாகும். அதை மாற்ற வாய்ப்பே இல்லை. சிங்கப்பூரில் லீ குவான் யூ கூட ஆரம்பத்தில் (Scratch) இருந்து ஒரு நாட்டை உருவாக்கியபோது ஆங்கிலத்தை முன்னிலைப்படுத்தினார். உலகத்தோடு தொடர்பு கொள்ள ஆங்கிலம் போதுமானது என்றார். இந்த நிலையில் தவெக-வை பொறுத்தவரை கொள்கை சமரசம் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை,” என்று கூறினார்.
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு
ஆசிரியர்கள் போராட்டம் குறித்த கேள்விக்கு, “எந்தப் பிரச்சினையையும் பேசித் தீர்க்க முடியும். உலகத்தில் பேசித் தீர்க்க முடியாத பிரச்சினை எதுவும் இல்லை; போரையே பேசித் தீர்க்கிறார்கள். ஆசிரியர்களின் பிரச்சினைகளையும் பேசித் தீர்க்கலாம். சில வழக்குகள் நீதிமன்றத்திலும், சில பிரச்சினைகள் சட்டமன்றத்திலும் உள்ளன. மற்றவை தொடர்பான விவகாரங்கள் இயக்குநரகத்தில் உள்ளன. சட்டத்துக்குட்பட்டு, பேச்சுவார்த்தை மூலம் அனைவருக்குமான ஒரு சுமுகமான (Win-Win) சூழலை உருவாக்க முடியும்,” என்று தெரிவித்தார்.
பள்ளி வாகனப் பராமரிப்பில் ‘Zero Tolerance’
பள்ளி வாகனப் பராமரிப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “பள்ளி வாகனங்கள் சரியாகப் பராமரிக்கப்படவில்லை என்றால் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அரசு, தனியார் என எந்த நிறுவனமாக இருந்தாலும் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பொது நலன் சார்ந்த விஷயங்களில் ‘Zero Tolerance’ (பூஜ்ஜிய சகிப்புத்தன்மை) தான் எங்களது கொள்கை. இதில் கவனக்குறைவு காட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். விடுமுறை நாட்களுக்குள் வாகனங்களை வேகமாகப் பழுது பார்க்குமாறு அறிவுறுத்துகிறேன்,” என்றார்.
