எங்களை பொதுச்செயலாளர் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியது செல்லாது என்று சிவி சண்முகம் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையின்றி வெற்றி பெற்ற தவெகவுக்கு, சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுக தரப்பில் ஆதரவளிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 25 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து இவர்களை அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.
தொடர்ந்து இன்று அதிமுக ம.செக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் 80 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றார்கள் என்றும் அடிமட்டத் தொண்டர்கள் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை அனைவரும் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருக்கிறார்கள் என்று அதிமுக எம்.பி. தனபால் கூறினார்.
இந்தநிலையில் சென்னையில் சிவி சண்முகம், வேலுமணி தரப்பினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
எதையும் கேட்காத எடப்பாடி…
அப்போது, “அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. தோல்விக்கு தோல்வி அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய வாக்கு வங்கி சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
கடந்த 2024 நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல், அந்த தேர்தல் தோல்விக்கு பிறகு நாங்கள் ஒரு ஆறு பேர் அவர் (ஈபிஎஸ்) வீட்டிலே சந்தித்து பேசினோம்.
இனியும் இந்த நிலை தொடர்ந்தால் நாம் எதிர்காலத்தில் வெற்றி பெற முடியாது. பிரிந்தவர்கள், பிரிந்து சென்றவர்கள், நீக்கப்பட்டவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு வலிமையான அனைத்து இந்திய அண்ணாதிராவிடத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அன்றைக்கு வைத்தபோது அதை நிராகரித்தார். ஏற்றுக்கொள்ள மறுத்தார், செவி கொடுக்க மறுத்தார்.
தோல்வி பற்றி நாம் விவாதிக்க வேண்டும் என்று சொன்னோம். அதை மறுத்துவிட்டு அன்றைக்கு தலைமை கழகத்தில் ஒவ்வொரு மாவட்ட கழகமாக கூட்டி அன்றைக்கு அதை திசை திருப்பினார். தோல்விக்கான காரணம் ஆய்வு செய்யப்படவில்லை, அன்றைக்கு உண்மையான ஒரு ஆய்வு கூட்டம் நடைபெற்றிருந்தால் இந்த இயக்கத்தில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற உண்மை நிர்வாகிகளுக்கு தெரிந்திருக்கும். ஏனென்றால் அது அவருக்கு தெரியும், ஆனால் அதை செய்ய தவறிவிட்டார்.
வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட தேமுதிக
அதிமுகவை ஒன்றிணைக்க மறுத்தார். விலகியவர்களை சேர்க்க மறுத்தார். இன்று அவரோடு இருக்கிற நிர்வாகிகளும் ஆகட்டும், எங்களுடன் இருக்கிற நிர்வாகிகள் ஆகட்டும், எல்லோரும் சொன்னோம், வலுமையான கூட்டணியை வையுங்கள், அமையுங்கள். இன்றைக்கு நமக்கு தேவை தமிழக வெற்றி கழகத்தோடு கூட்டணி வையுங்கள் என்று அத்தனை பேரும் சொன்னோம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாகவும் கூட்டணி வைப்பதற்கு நம்மோடு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இன்று அவர் இல்லை என்று மறுக்கலாம், ஆனால் உண்மை அதுதான், நிதர்சனமான உண்மை அதுதான்.
ஆனால் அவர்களை, கூட்டணி பேச வந்தவர்களை உதாசீனப்படுத்தினார். கூட்டணி அமையக்கூடாது என்பதற்காக எப்படியெல்லாம் பேச வேண்டுமோ அதையெல்லாம் பேசி அவர்களை வெளியேற்றுவதிலே குறியாக இருந்தார். தமிழக வெற்றிக் கழகத்தை மட்டுமல்ல, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தையும் சேர்ப்பதற்கு அவருக்கு மனமில்லை, அதை அரை சதவிகித கட்சி என்று சொன்னார். இப்படி சொன்னால் எந்த கட்சி தங்களை ஏற்றுக்கொள்ளும், தாங்கி கொள்வார்கள்? அவர்கள் வலுக்கட்டாயமாக இந்த கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள்.
அடுத்து டாக்டர் கிருஷ்ணசாமி… இப்படி யாரையுமே அரவணைக்காமல், நான் மட்டும் இருந்தால் போதும், எனக்கு மட்டும்தான் வாக்களிப்பார்கள் என்ற மனநிலையிலே யாரையுமே அரவணைக்கவில்லை.
இயக்கத்தில விட்டுச் சென்ற, இந்த இயக்கத்திற்காக ஒரு காலத்தில் பாடுபட்டவர், ஏதோ ஒரு காரணத்திற்காக தவறு செய்திருந்தாலும், திருந்தி “நான் அந்த இயக்கத்திலே வருகிறேன், எனக்கு எந்த பொறுப்பும் வேண்டாம், ஒரு உறுப்பினராக இருக்கிறேன்” என்று கடைசி வரைக்கும் ஓபிஎஸ் சொன்னார்.
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்
அவர் திராவிட முன்னேற்ற கழகத்தில் சேர்வதற்கு முன்னால் கூட சொன்னார். என்னை அதிமுகவில் ஒரு உறுப்பினராக என்னை இணைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். ஆனால் அதையும் ஏற்றுக்கொள்ள மறுத்தார். நான் சேர்க்க மாட்டேன், எந்த காரணத்தை கொண்டும் அந்த நான்கு பேரை நான் சேர்க்க மாட்டேன் என்று சொன்னார்.
ஆனால் இன்றைக்கு ஒரு அறிக்கை விட்டிருக்கிறார். எப்போது? கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம். என்ன சொல்லுகிறார் அந்த அறிக்கையிலே?
‘இன்றுவரை இயக்கத்திற்கு துரோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும், அவர்கள் திருந்தினால் தாய் உள்ளத்துடன் மீண்டும் ஏற்றுக்கொள்ளவும் தெரியும். அவர்களின் வழிகாட்டலின் படியே இன்று நாம் செயலாற்றி வருகிறோம்’… அப்படியா செயலாற்றுகிறீர்கள்.
இன்றைக்கு தனக்கு, தன்னுடைய பொறுப்புக்கு பாதிப்பு வருகிறது என்ற உடனே “தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்” என்று சொல்கிறார்.
இதை கடந்த காலத்திலே செய்திருந்தால், ஒருங்கிணைத்திருந்தால் இந்த நிலைமை அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துக்கு ஏன் ஏற்பட்டிருக்கும்?
இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக வந்திருப்பார். இல்லையென்றாலும் அவருடைய கண் அசைவிலே ஆட்சி அமைந்திருக்கும். அதை தடுத்தது யார்? அதை கெடுத்தது யார்? கெடுத்தது மட்டுமில்ல, மிகப்பெரிய இயக்கமான இந்த அனைத்து இந்திய அண்ணாதிராவிட முன்னேற்ற கழகத்தை இன்றைக்கு படுதோல்வி அடைய செய்ததற்கு யார் காரணம்? எல்லாம் செய்துவிட்டு தங்களை நல்லவர்களை போல இன்றைக்கு அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் ஏதோ துரோகம் செய்துவிட்டதாகவும், நாங்கள் ஏதோ இந்த இயக்கத்தை பிளவுப்படுத்துவதாகவும் இன்றைக்கு சொல்கிறார்கள். அன்றைக்கு நாங்கள் பேட்டி கொடுத்தோமே தவிர எங்களுடைய நிலைப்பாட்டை சொன்னோம், அதன்பிறகு இன்னைக்கு தான் நாங்க வரோம். நாங்கள் யாரை பற்றியும் குறை சொல்லவில்லை.
பொதுச் செயலாளர் எடப்பாடியை பற்றியும் நாங்க எந்த குறையும் சொல்லவில்லை. அவர் செய்திருக்கிற தவறுகளை தான் சுட்டிக்காட்டினோம். தனிப்பட்ட முறையில நாங்கள் யாரையுமே தவறாகவோ விமர்சனமோ செய்யவில்லை, இப்போதும் செய்யவில்லை, நாளைக்கும் நாங்கள் செய்ய மாட்டோம். ஏனென்றால், நாங்கள் எல்லாம் ஒரு காலத்தில் ஒன்றாக பயணித்தவர்கள்.
பொதுக்குழுவை கூட்டுங்கள்
ஆனால் அங்கே என்ன நடக்கிறது? எங்களைப் பற்றி, என்னை பற்றி, குடும்பத்தை பற்றி… “உங்களுடன் இருந்தால் நான் நல்லவன், நான் இல்லை என்றால் துரோகி.” என்னை பற்றி விமர்சிப்பது, குடும்பத்தை பற்றி விமர்சிப்பது… இதுதான் உங்க தலைமை பதவிக்கு தகுதியா? எங்களுக்கு பேச தெரியாதா? பேச வேண்டும் என்றால் எல்லாம் பேசலாம், ஆனால் நாங்கள் பேச மாட்டோம்.
எங்களை பொறுத்தவரை அதிமுகவில் பிரிந்தவர்கள், சென்றவர்கள், நீக்கப்பட்டவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒற்றுமையான, பலமான ஒரு கட்சியாக மீட்டெடுக்க வேண்டும் என்பதுதான்.
இன்றைக்கு சொல்கிறார், “பேசிக்கொள்ளலாம்” என்று சொல்லுகிறார். அதற்கு மாற்று கருத்தே இல்லை, நாங்கள் அதை வரவேற்கிறோம். முதல் நாளில் இருந்தே நாங்கள் இதைத்தான் சொல்லுகிறோம். “பொதுக்குழுவை கூட்டுங்கள், விவாதிப்போம், கலந்தாலோசிப்போம், நல்ல முடிவு எடுப்போம். பொதுக்குழு என்ன முடிவெடுத்தாலும் அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம், தலைவணங்கி நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
இன்னைக்கும் சரி, நாளைக்கும் சரி எங்களுடைய நிலைப்பாடு இதுதான்—பொதுக்குழுவை கூட்டுங்கள், விவாதியுங்கள், பேசுங்கள், முடிவெடுங்கள்.
ஆனால் இன்றைக்கு என்ன பத்திரிக்கைகள் மூலமாக தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் என்ன சொல்லுகிறார்?
“பேசி தீர்த்து கொள்ளலாம்” என்று ஏதோ தன் மீது தவறில்லாதது போலவும், குறை இல்லாதது போலவும், நாங்கள் ஏதோ தவறு செய்துவிட்டது போலவும் ஒரு பிம்பத்தை ஏற்படுத்த பார்க்கிறார்.
நாங்கள் தயார், பேசுவதற்கு தயாராக இருக்கிறோம். பொதுக்குழுவை கூட்டுங்கள், நாங்கள் வருகிறோம், எங்கள் கருத்தை சொல்லுகிறோம், உங்களுடைய கருத்தை சொல்லுங்கள். உங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தாக இருந்தாலும் சொல்லுங்கள், எங்களுடைய மாற்றுக் கருத்தையும் சொல்கிறோம். எது நியாயமோ, பொதுக்குழுவிலே பெரும்பான்மையான பொதுக்குழுவினர்கள் என்ன முடிவெடுக்கிறார்களோ, அந்த முடிவுக்கு நாங்கள் தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம். எங்களுக்கு அதில் மாற்று கருத்து இல்லை.
இந்த பத்திரிக்கையின் வாயிலாக நான் சொல்லுகிறேன், தமிழகத்தில் இருக்கிற கோடான கோடி அனைத்து இந்திய அண்ணாதிராவிட முன்னேற்ற கழகத்தினுடைய தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் நாங்கள் சொல்வது—நாம் எல்லோரும் அனைத்து இந்திய அண்ணாதிராவிட முன்னேற்ற கழகத்தினுடைய தொண்டர்கள், எம்ஜிஆருடைய தொண்டர்கள், அம்மாவுடைய பிள்ளைகள். நம்முடைய நோக்கம் மீண்டும் தமிழ்நாட்டிலே அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆள வேண்டும், வலிமையான ஒரு இயக்கமாக வரவேண்டும். அந்த ஒரே காரணத்திற்காகத்தான் சொல்கிறோம்—எல்லோரும் ஒருங்கிணைப்போம், எல்லோரும் ஒற்றுமையாக இருப்போம், எல்லோரும் ஒற்றுமையாக செயல்படுவோம், பொதுக்குழுவை கூட்டுங்கள்.
கட்சி நிர்வாகிகள் மிரட்டப்படுகிறார்கள்
ஆனால் என்ன நடக்கிறது? ஒரு பக்கம் பேசலாம் என்று சொல்லிவிட்டு, மறுபக்கம் கட்சியில் இருந்து அனைவரையும் நீக்குகிறார். இதுவரை 31 மாவட்ட செயலாளர் பொறுப்புகளை நீக்கி இருக்கிறார், விடுவித்திருக்கிறார். இன்னும் என்ன சொல்லுகிறார்? “யாராவது கையெழுத்து போட மறுத்தால், அவர்கள் கேட்க மறுத்தால் உங்களுடைய பதவி பறிக்கப்படும்… அங்கே கையெழுத்திடாவிட்டால் உங்கள் பதவி பறிக்கப்படும்.” இப்படி அச்சுறுத்தி, மிரட்டி, உருட்டி கட்சிக்காரர்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இப்படி அச்சுறுத்தலிலே வைத்திருந்தால் ஒரு கட்சி எப்படி வளரும்? அன்பாக, பாசமாக அரவணைத்து செல்ல வேண்டும். தொண்டர்களையும் நிர்வாகிகளையும் அரவணைத்து செல்ல வேண்டும், தட்டி கொடுத்து செல்ல வேண்டும், பாசத்தோடு செல்ல வேண்டும். ஆனால் இங்கே என்ன சொல்லப்படுகிறது? “உன் பதவி எடுக்கப்படும், நீக்கப்படுவாய்” என்று மிரட்டப்படுகிறார்கள், அச்சுறுத்தப்படுகிறார்கள். பார்த்தீர்களா, 37 பேர் பதவிகளை நீக்கி இருக்கிறோம்; உங்கள் ஒன்றிய செயலாளர் பதவி எடுக்கப்படும், நகர செயலாளர் பதவி எடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
சட்டவிதி என்ன சொல்கிறது
இந்த நீக்கிய நடவடிக்கை முற்றிலும் சட்டத்துக்கு புறம்பானது, இன்றுவரை, இந்த நிமிடம் வரை நீக்கிய முடிவுகள், புதிய பொறுப்புகள் செல்லாது. ஏனென்றால் ஒரு இயக்கத்திலே பிளவுபட்டால், கருத்து வேறுபாடு ஏற்படுகிற போது, பிளவு என்ற ஒரு நிலைமை வருகிற போது, என்றைக்கு அந்த கருத்து வேறுபாடு வருகிறதோ, என்றைக்கு அந்த பிளவு அதிகாரப்பூர்வமாக வருகிறதோ, அன்றைய தேதியில யார் யாரெல்லாம் பொறுப்பில் இருக்கிறார்களோ, அந்த பொறுப்பில் இருக்கிறவர்தான் நீதிமன்றத்திற்கும் பிரமாண பத்திரத்திலும் கையெழுத்திட வேண்டும், தேர்தல் ஆணையத்திலும் அபிடவிட்டிலே அவர்கள் தான் கையெழுத்திட வேண்டும். இப்போது 31 மாவட்ட செயலாளரை விடுவித்துவிட்டு 31 மாவட்ட செயலாளரை போட்டிருக்கிறார்களே, நாளை தேர்தல் ஆணையத்தில் இந்த வழக்கு வந்தால், நீதிமன்றத்தில் இந்த வழக்கு வந்தால் நாங்கள்தான் கையெழுத்திட வேண்டும். புதிதாக நியமிக்கப்பட்டிருக்கிற யார் கையெழுத்திட்டாலும் செல்லாது.
ஏனென்றால் அதற்கு உதாரணம் வேறு யாரையும் கேட்க வேண்டாம், இவர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்? ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் இடையே பிரச்சினை வந்தபோது தேர்தல் ஆணையத்திலே வழக்கு நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில பெரும்பான்மை பொதுக்குழுவினர் யாருக்கு இருக்கிறார்கள் என்று கணக்கெடுக்கப்பட்டபோது எந்த தேதி நிர்ணயிக்கப்பட்டது தெரியுமா? 5.12.2016…அம்மா இறந்த தேதி. ஆனால் ஓபிஎஸ்க்கும் எடப்பாடி பழனிசாமிக்கும், கட்சியில் பிப்ரவரி 17-ஆம் தேதிதான் சண்டை வருது.
இவர் 500 பேரை நீக்குகிறார், அவர் 500 பேரை நீக்குகிறார்; இவரு 500 பேரை நியமிக்கிறார், அவரு 500 பேரை நீக்குகிறார். ஆனால் தேர்தல் ஆணையம் அதை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. “முந்தைய பொதுசெயலாளர்… உங்களுக்குள் ஏன் பிளவு ஏற்பட்டது, என்ன காரணம்? அதற்கு காரணம் மாண்புமிகு அம்மா இறப்பு.” அந்த தேதியிலே, 5.12.16-லே யார் யார் மாவட்ட செயலாளர், யார் யார் ஒன்றிய செயலாளர், யார் யார் நகர செயலாளர், யார் யார் பேரூர் செயலாளர், யார் யார் பொதுக்குழுவினர், யார் தலைமை நிர்வாகிகளோ, அவர்களுடைய கையெழுத்து மட்டும்தான் செல்லும் என்று சொல்லி, அவர்களுடைய கையெழுத்தை பெற்றுக் கொடுத்து, அதிலே பெரும்பான்மை ஆதரவை பெற்றுத்தான் ஓ. பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் தேர்வு செய்யப்பட்டது. தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இன்றைக்கு என்ன நிலைமை? 4ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. 5ம் தேதியே “திமுகவோடு சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும்” என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொன்ன உடனே கருத்து வேறுபாடு வருகிறது, இரண்டு குழுவாக பிரிகிறது.
ஆனால் அதிகாரப்பூர்வமாக எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்திலே தற்காலிக சபாநாயகரிடத்திலே “நான்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற தலைவர்” என்று மனு கொடுக்கிறார். இங்கே வேலுமணி “என்னை தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்” என்று ஒரு மனுவை கொடுக்கிறார்.
ஆக, அதிமுகவிலே இரண்டு குழுக்கள் மனு கொடுக்கிறது. எனவே, அன்றைக்கு (மே 5) யார் யாரெல்லாம் பொறுப்பில் இருந்தார்களோ அவர்கள்தான் தொடர்ந்து பதவிகளை வகிப்பார்கள். ஆகவே நீங்கள் நீக்கியது செல்லாது, அமலுக்கு வராது. ஆகவே தமிழ்நாடு முழுவதும் இருக்கிற ஒன்றிய, நகர செயலாளர்கள் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்—உங்களை அச்சுறுத்துவதோ, மிரட்டுவதோ எதற்கும் உதவாது. நீங்கள் அச்சப்பட வேண்டியதில்லை, பயப்பட வேண்டியதில்லை, தைரியமாக இருங்கள்.
இன்னைக்கு என்ன சொல்கிறார் “பேசிக்கொள்ளலாம்”, சந்தோஷம், வரவேற்கிறோம். எங்களுக்கு அதில் மாற்று கருத்தே இல்லை. எங்களுக்கு வேண்டியது ஒற்றுமையான அண்ணா திமுக.
இது ஜனநாயக நாடு, உலகத்திலே மிகப்பெரிய ஜனநாயக நாடு. ஒவ்வொரு அமைப்பும் ஜனநாயக ரீதியாக செயல்பட வேண்டும் என்பதுதான் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்களுக்கென்று விதிமுறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும், அந்த விதிமுறைகள் படிதான் நடைபெற வேண்டும்; விதிமுறைகளுக்கு மீறி யாரும் நடக்கக்கூடாது. அந்த சட்ட திட்டங்களை தேர்தல் ஆணையத்திலே பதிவு செய்யப்பட வேண்டும்.
அனைத்து இந்திய அண்ணா திராவிட கழகத்துக்கு என்று சட்டவிதிகள் உருவாக்கப்பட்டு தேர்தல் ஆணையத்திலே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த விதியிலே, விதி 19-லே கிளாஸ் 7- என்ன சொல்லுது? ஐந்தில் ஒரு பாகம் பொதுக்குழுவினர்கள் கையொப்பமிட்டு, “சிறப்பு பொதுக்குழு கூட்ட வேண்டும்” என்று பொதுச்செயலாளரிடம் கொடுத்தால், கொடுக்கப்பட்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்குள்ளாக சிறப்பு பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், புரட்சி தலைவர் இயக்கிய சட்ட விதியிலே தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.
அப்படி சொல்லப்பட்ட நிலைமையிலே இன்றைக்கு என்ன செய்கிறார்கள்? பொதுச்செயலாளர் சொன்னதாக சொல்லி ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்கள். “பொதுக்குழுவை கூட்ட வேண்டாம், நீங்களே தொடரலாம், கூட்ட வேண்டாம்” என்கிறார்கள்.
ஒரு கருத்துக்கு ஆதரவு, எதிர்ப்பு என்பது இருக்கும், அதுதான் ஜனநாயகம். “பேசவே கூடாது, கேள்வியே கேட்கக்கூடாது, எதிர்த்து பேசவே கூடாது, நான் சொல்வதுதான் சட்டம்” என்று சொன்னால் இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? “பேசிக்கொள்ளலாம்” என்று சொல்லுகிறீர்கள், ஆனால் இப்படி பேசிக்கொள்ளலாம் என்று ஒரு பக்கம் சொல்லிவிட்டு, மறுபக்கம் அனைவரையும் கட்சி பதவிகளை நீக்குகிறீர்கள், கட்சியை விட்டு நீக்குகிறீர்கள், “பொதுக்குழுவை கூட்ட வேண்டாம்” என்று கையெழுத்து பெறுகிறீர்கள்; இது எந்த விதத்தில நியாயம்? பேச வேண்டும் என்று சொன்னால் உண்மையாக பேச வேண்டும், உண்மையான எண்ணம் இருக்க வேண்டும், மனம் இருக்க வேண்டும். பொதுமக்களுக்காக, தொண்டர்களை ஏமாற்றுவதற்காக சொல்லக்கூடாது.
“அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தேர்தலில் வெற்றியும் தோல்வியும் சகஜம்” என்று சொல்கிறார். உண்மை, நாங்கள் ஏற்கிறோம்., தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம். ஆனால் இங்கே தோல்வியை தானே சந்திச்சிட்டு இருக்கிறோம்? அதுதான் இங்கு பிரச்சனையே,
மனப்பக்குவம் இல்லை
ஒரு தோல்வி இல்ல, ரெண்டு தோல்வி இல்ல, மூன்று தோல்வி இல்ல. தோல்வியை கூட சந்திச்சுக்கலாம், ஆனால் “அந்த தோல்வியை பற்றி நான் விவாதிக்கவே மாட்டேன்” என்று சொன்னா என்ன அர்த்தம்?
அதுமட்டுமல்ல இன்னொன்று சொல்றார், “பதவி இல்லாமலும் மக்களுக்காக போராடும் இயக்கம், தேர்தலில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளும் இயக்கம் என்கிறார். ஆனால்” பாடம் கத்துக்கிட்ட மாதிரி தெரியலையே.
“தோல்விகளை வெற்றியாக்கி ஆட்சியை பிடிக்கும் இயக்கம்…” ஆமாம், எப்போது? புரட்சித்தலைவி அம்மா இருக்கிற வரைக்கும் தோல்வியை வெற்றியாக்கி காட்டிய தலைவி புரட்சித்தலைவி அம்மா. தோல்வி ஏற்பட்டாலும், “அந்த தோல்வியை என்னுடைய தோல்வி, தோல்விக்கு நான்தான் காரணம்” என்று நேரடியாக ஒப்புக்கொள்கிற தைரியம் உள்ள தலைவர் அம்மா. இங்கே தோல்வியும் ஒத்துக்கொள்ளவில்லை, வெற்றியும் இல்லை, மனப்பக்குவமும் இல்லை” என்று கூறினார்.
