தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றவுடன் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் அதிநவீன வசதிகளுடன் கூடிய “சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை” மாநிலம் முழுவதும் உருவாக்கப்படும் என அறிவித்தார். இந்த நிலையில் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வாய் பேச முடியாத 35 வயது மாற்றுத் திறனாளி பெண் கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ரோட்டில் தள்ளி விடப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பேர் கைது செய்யப்படுள்ளனர்.இச்சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” கடந்த மே 10 ஆம் தேதி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதும், முதல்-அமைச்சர் விஜய், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை” அமைக்க உத்தரவிட்டார். அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், மழையூர் காவல் சரகத்தில் உள்ள கிராமத்தில், தந்தையில்லாத நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் வாய்பேச முடியாத, செவித்திறனில்லாத 35-வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், நேற்று முன்தினம் (17.05.2026) ஞாயிறு அன்று கூலி வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்பும் போது சில சமூக விரோதிகளால் வழி மறித்து, கடத்திச்சென்று, கூட்டு பாலியல் வன்தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்த சகித்துக் கொள்ள முடியாத குற்றச் செயலை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
பாதிக்கப்பட்ட பெண் பரிதாபகரமான நிலையில் சாலையில் அழுது கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த பெண் காவலரின் உதவியோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொடூர குற்றச் செயலில் ஈடுபட்ட கொடுங்குற்றவாளிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், இந்த குற்றச் செயலில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க விடாமல் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தக் குற்றச் செயலில் தொடர்புடைய அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டுமென்றும், பாதிக்கப்பட்ட பெண்ணின் எதிர்காலப் பாதுகாப்புக்காக தமிழ்நாடு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அவருக்கு உயரிய மருத்துவ சிகிச்சை அளித்து உதவ வேண்டுமென்றும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது”என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பதிவில், “புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வாய் பேச முடியாத 35 வயது மாற்றுத் திறனாளி பெண் மகிழுந்தில் கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமக்கு நேர்ந்த அவலத்தை நேரடியாக வெளிப்படுத்துவதற்கு கூட முடியாத நிலையில் உள்ள இளம்பெண்ணை மனித மிருகங்கள் சீரழிந்திருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்.
கறம்பக்குடி பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் பணியாற்றி வரும் அந்தப் பெண், வேலை முடிந்து வீடு திரும்புவதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த போது, அங்கு மகிழுந்தில் வந்த கும்பல் அவரை கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கறம்பக்குடி-ஆலங்குடி சாலையில் தள்ளிவிட்டு சென்றிருக்கிறது.திமுக ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட பெருந்தீமைகளில் குறிப்பிடத்தக்கது கஞ்சா வணிகமும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்தது ஆகும். திமுக ஆட்சி அகற்றப்பட்ட பிறகும் அத்தகைய குற்றங்கள் தமிழகத்தின் சில பகுதிகளில் தொடர்வது கவலையளிக்கிறது.
தமிழகத்தின் முதல்-அமைச்சராக கடந்த 10-ம் தேதி பொறுப்பேற்ற விஜய், பெண்களுக்கு எதிராக குற்றங்களைக் கட்டுப்படுத்த சிறப்பு அதிரடிப்படை, போதைப்பொருள்கள் புழக்கத்தை ஒழிக்க காவல்துறையில் தனி அலகுகள் ஆகியவற்றை அமைப்பதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டிருக்கிறார். திமுக அரசில் ஏற்பட்ட தீமைகளை ஒழிப்பதில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான ஆர்வம் காட்டுவதற்கு இந்த நிகழ்வுகள் சான்றாகும்.
புதுக்கோட்டை அருகே இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிகழ்வில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில் இத்தகைய குற்றங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
