அதிமுக எம்எல்ஏக்கள் அமைச்சர் பதவிக்காக எங்களிடம் வரவில்லை என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (மே 20) அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விசிக, ஐயூஎம்எல் கட்சிகள் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். மேலும் இடதுசாரிகளின் கொள்கை முடிவுகளை நாங்கள் மதிப்போம். சமூகநீதி அடிப்படையில் இயங்கும் தலைவர்கள், கட்சிகள் அமைச்சரவையில் இணைய வேண்டும் என வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “மக்கள் தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி செயல்பட நினைத்ததால் அதிமுகவில் ஒரு தரப்பினர் எங்களுக்கு ஆதரவு அளித்தனர். எம்எல்ஏக்கள் யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பது அவர்களது உரிமை. அவர்களை சிவி சண்முகம் வழி நடத்துகிறார். சட்ட சிக்கல் வந்தால் அவர் சந்திப்பார்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய அதிமுகவை நாங்கள் தோழமையோடு பார்க்கிறோம். அதிமுக நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.
தேர்தலில் தோல்வியைத் தழுவிய பிறகு நல்ல எதிர்க்கட்சியாக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் பின்வாசல் வழியாக ஆட்சியை அமைக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டார். திமுகவுடன் எடப்பாடி பழனிசாமி கைகோர்க்க நினைத்ததைத் தற்கொலைக்குச் சமம் என அதிமுகவினர் கருத்து தெரிவித்தனர்.
திமுக தனது கொள்கைகளை மறந்து அதிமுகவுக்கு ஆதரவு தர முயற்சித்தது. மு.க. ஸ்டாலின், உதயநிதி, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து குதிரை பேர அரசியலை நடத்தினர் எனக் குற்றம் சாட்டினார்.
இதைத் தொடர்ந்து,சிவி சண்முகம் அணி அமைச்சரவையில் இடம்பெறுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “யூகங்களுக்கு பதில் அளிக்க இயலாது. அதிமுக எம்எல்ஏக்கள் அமைச்சர் பதவிக்காக அவர்கள் எங்களிடம் வரவில்லை” என்று தெரிவித்தார்.
