தமிழக அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற ஆதவ் அர்ஜுனாவின் அழைப்பிற்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, விசிக அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என முதலமைச்சர் விரும்புவதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,“ஆதவ் அர்ஜுனாவின் அழைப்பிற்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். எங்கள் கட்சியின் உயர்நிலைக் குழு கடந்த 8ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இரவு 9 மணி அளவில் கூட்டம் நிறைவடைந்தது. கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலானோர் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் எனும் கருத்தை முன்வைத்தனர். இருப்பினும், இறுதி முடிவை தலைவர் எடுப்பார். அவரது முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவோம் என உறுதியளித்தனர்.
அதன் அடிப்படையில் 9ஆம் தேதி பொதுச் செயலாளர்கள் இருவருடனும் கலந்தாலோசித்து, தவெக ஆட்சி அமைப்பதற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினோம். பதவியேற்புக்குப் பிறகு வேளச்சேரிக்கு வந்த முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். அதை இப்போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீண்டும் வெளிப்படையாக வலியுறுத்தியுள்ளார். இது குறித்து எங்கள் முன்னணி பொறுப்பாளர்கள், பொதுச் செயலாளர்கள் உள்ளிட்டோருடன் கலந்துபேசிய பின்னர் முடிவை அறிவிப்போம்” என்றார்.
அதிகாரத்தில் பங்கு என்பதே விசிகாவின் கொள்கை என்பதை சுட்டிக்காட்டிய செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில்,“தவெக கூட்டணியில் இணைந்து நாங்கள் தேர்தலை சந்திக்கவில்லை. நாங்கள் திமுக கூட்டணியில் இடம்பெற்று இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றோம். தவெகவுக்கு ஆட்சி அமைக்க இரண்டு இடங்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினோம். தற்போது தவெக தரப்பில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய இரு கட்சிகளும் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என வெளிப்படையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் அழைப்பை நாங்கள் மதிக்கிறோம். இருப்பினும், இதற்காக மீண்டும் உயர்நிலைக் குழுவைக் கூட்டத் தேவையில்லை. பொதுச் செயலாளர்கள், பொருளாளர், முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட முன்னணி பொறுப்பாளர்களுடன் கலந்துபேசி முடிவை அறிவிப்போம்” என்றார்.
ஆரம்பத்தில் இருந்தே தவெக ஆட்சியில் பங்கு தருவது குறித்து வெளிப்படையாகப் பேசி வரும் நிலையில் திருமாவளவனின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு, “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூல் வெளியீட்டு விழாவிலேயே முதலமைச்சர் விஜய் விடுதலை சிறுத்தைகளுக்கு அழைப்பு விடுத்தார். ‘திருமாவளவன் எங்கே இருந்தாலும் அவரது உள்ளம் இங்கேதான் இருக்கும்’ என்று அந்தக் கூட்டத்தில் வெளிப்படையாகக் கூறினார். அதை நாங்கள் அழைப்பாகவே புரிந்துகொண்டோம். ஆனால் தவெக கூட்டணியில் இடம்பெறும் சூழல் உருவாகவில்லை.
நாங்கள் திமுக கூட்டணியிலேயே பயணித்தோம். எங்களுக்கு அமைச்சரவையில் இடம் வேண்டும் என நிபந்தனை விதிக்கவில்லை. நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினோம். இப்போது விடுதலை சிறுத்தைகளுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டும் என அழைப்பு வந்துள்ள நிலையில், முன்னணி பொறுப்பாளர்களுடன் கலந்துபேசி முடிவெடுப்பது தவிர்க்க முடியாதது” என்றார்.
இடதுசாரிகளின் முடிவைத் தொடர்ந்து தாங்கள் முடிவெடுப்பதாகக் கூறியது குறித்த கேள்விக்கு,“இடதுசாரிகள் என்ன முடிவெடுத்தார்களோ அதே முடிவைத்தான் நாங்களும் எடுத்தோம். அவர்கள் 8ஆம் தேதி மாலை 4 மணிக்கு முடிவை அறிவித்தனர். நாங்கள் உயர்நிலைக் குழு கூட்டத்துக்குப் பிறகு மறுநாள் அறிவித்தோம். கட்சிக்கு நடைமுறை விதிகள் உள்ளன. ஒவ்வொரு பொறுப்பாளரும் தங்கள் கருத்தைச் சொல்வார்கள். அனைவரையும் ஒருமித்த கருத்துக்கு கொண்டு வருவது தலைவரின் பொறுப்பு. எனவே சிறிது நேரம் எடுத்தது. இருப்பினும் எந்தத் தாமதமும் இல்லை,
ஆனால் மீண்டும் மீண்டும் இந்த இயக்கத்தின் வளர்ச்சியை பொறுக்காத சிலர் விடுதலை சிறுத்தைகள் எதற்காக தாமதம் செய்தார்கள் ஏன் இரண்டு நாட்கள் எடுத்துக் கொண்டார்கள் என்று அறிவுஜீவிகள் கேள்வி எழுப்பினர். இடதுசாரிகள் என்ன முடிவை எடுத்தார்களோ அதே முடிவை நாங்கள் எடுத்தோம். இப்போது தவெக தரப்பில் ஒரு அழைப்பு வரும் நிலையில் எங்கள் தோழர்கள் அந்த அழைப்பை ஏன் ஏற்கவில்லை என்ற கேள்வியை எழுப்பக்கூடும் ஆகவே முன்னணி பொறுப்பாளர்களோடு கலந்து பேசிய பிறகு அறிவிப்போம்” என்று திருமாவளவன் தெரிவித்தார்.
