நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை (Seeman) துப்பாக்கியால் சுட்டுக் கொல்வேன் என இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் எம்.பி. ராமநாதன் அர்ச்சுனா (Arjuna) பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



இலங்கை தமிழ் எம்.பி. ராமநாதன் அர்ச்சுனன் அண்மையில் தமிழ்நாட்டுக்கு வருகை தந்திருந்தார். தமிழக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன் உள்ளிட்டோரை ராமநாதன் அர்ச்சுனா எம்.பி. சந்தித்து பேசினார்.
இதனையடுத்து விசிக தலைவர் தொல். திருமாவளவனுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வியிலும் ராமநாதன் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்றார்.
இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் மே 18-ந் தேதி ராமநாதன் அர்ச்சுனா எம்.பி. பேசியதாவது: இந்த மண்ணிலே கொலை செய்யப்பட்டு, பலாத்காரம் செய்யப்பட்டு, சிதைக்கப்பட்டு, அழிக்கப்பட்ட என் இனத்தின் வரலாறுகளுக்கு இன்றைய தினம் மே 18.
வீரவணக்கம்- அஞ்சலி
ஒரு தமிழீழ நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் இன்றைய தினம் என்னுடைய வீர வணக்கங்களையும், என்னுடைய… என்னுடைய அஞ்சலிகளையும் செலுத்துகிறேன்.
இனப்படுகொலை நாள்
மே 18 ஒரு இனப்படுகொலை நாள். ஒரு இனம் அழிக்கப்பட்ட நாள். ஒரு இனம் சிதைக்கப்பட்ட நாள். ஒரு போராட்டம் காட்டிக்கொடுக்கப்பட்ட நாள்.
விஜய் (VIJAY), ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன்
அதையெல்லாம் தாண்டிச் சொல்வதாக இருந்தால், ஒட்டுமொத்தமாக தமிழ் பேசுகிறோம் என்கின்ற ஒரு காரணத்துக்காக தமிழன் புதைக்கப்பட்ட இந்த மண்ணிலிருந்து மீண்டும் ஒரு தமிழ்க் குரல் கேட்க வேண்டும் என்று ஆசைப்படுகின்ற தமிழ்நாட்டு மக்களுக்கும், அதேநேரம் இந்த மே 18-ஆம் தேதி எங்களுடைய இனப்படுகொலையை நடந்த விடயத்தைத் தங்களுடைய மனதிலே நிறுத்துவோம் என்று சொன்ன தமிழ்நாட்டு முதலமைச்சர், அன்புக்கும் பாசத்துக்கும் உரிய அண்ணா விஜய் அவர்களுக்கும், தளபதியின் தளபதி ஆதவ் அர்ஜுனா அவர்களுக்கும், ராஜ்மோகன் அண்ணாக்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவிற்கான எனது பயணம், என்னைப் பொறுத்தவரைக்கும் மிகப்பெரிய வெற்றியைத் தந்திருக்கிறது. அரசியல் தெரிந்தவர்களுக்கு அது நன்றாகத் தெரியும். தமிழகம் தமிழீழம் என்பது வார்த்தைகளால் மட்டுமல்ல, மொழிகளால் மட்டுமல்ல, உணர்வுகளால் மட்டுமல்ல, தமிழகம் தமிழீழம் என்பது இரத்தத்தால் இணைந்த இரண்டு பிரதேசங்கள்.
இலங்கையை தமிழ்நாட்டிடம் கொடுக்கலாம்
என்னுடைய கடந்த நாடாளுமன்ற உரையிலே நான் சொல்லியிருப்பேன்; யாழ்ப்பாணம், மட்டக்களப்பை தமிழ்நாட்டுக்கு கொடுங்கள் என்று. இப்போது எனக்கு இந்தப் பயணத்திற்குப் பிறகு சொல்ல வேண்டியிருப்பது ‘இலங்கையையும் சேர்த்து தமிழ்நாட்டுக்காக எடுத்துக் கொள்ளுங்கடா..
இங்கே ஊழல், இங்கே தமிழன் அடக்கப்படுகிறான், ஒடுக்கப்படுகிறான், இங்கே ஊழல்
தமிழனுக்கும் சிங்களனுக்கும் இங்கே நாடாளுமன்றத்திலே வேற்றுமைகள் இல்லை. ஆனால், இன்று பாதைகளிலே சிங்கள மக்களும் தமிழ் மக்களும் அடிப்பட்டுக் கொள்கிறார்கள் என்றால், இந்தப் பிச்சைத்தனமான இந்த அரசியல்வாதிகள், முக்கியமாக எங்களுடைய தமிழ் பேசுகின்ற அரசியல்வாதிகள் காரணம்
இந்த மண்ணிலே சிங்கள மக்களை எதிர்க்கக் கூடாது என்று நான் சொன்னால், சிங்கள மக்களோடு சேர்ந்து வாழ்வோம் என்று நான் சொன்னால், இவர்கள் பின்னால் இருக்கிறவர்கள் சொல்வார்கள், ‘இல்லை இல்லை, சிங்கள மக்களைக் கொல்ல வேண்டும்’ என்று.
விஜய்க்கு நன்றி
தமிழக முதலமைச்சர் விஜய் அண்ணா அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். எங்களுக்கு வலிக்கிறது. எங்களுக்குப் போவதற்கு இடமில்லை. தமிழகம் மட்டும்தான் எங்களுக்கு இருக்கக்கூடிய ஒரே ஒரு இடம். அங்கேதான் எங்களால் வரமுடியும். ஏனென்றால், தமிழகத்தில் கால்பதிக்கின்ற போதுதான் இன்னொரு அந்நிய நாட்டுக்கு வந்திருக்கிறேன் என்ற உணர்வு எங்களுக்கு இருக்காது. ஏனென்றால், தமிழகம் எங்களுடைய இரத்தம் சிந்திய இடம். என்னுடைய தேசியத் தலைவர் பிரபாகரன்… என்னுடைய தேசியத் தலைவன் கடவுள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆனால், சாதாரண சிங்கள மக்களை எதிர்ப்பதற்கு நான் முட்டாள் அல்ல. அப்பாவி சிங்கள மக்களை எதிர்ப்பதற்கு நான் முட்டாள் அல்ல.
சிங்கள இனவாத அடக்குமுறை அரசு தமிழினப் படுகொலையை 2009 மே மாதம் 18-ஆம் தேதி… செய்தது, 2009-ஆம் ஆண்டு செய்ததை இன்றைக்கும் மனதிலிருத்தி இன்றைய ஒரு தந்தையை இழந்தவனாக இந்த நாடாளுமன்றத்திலே நான் கதைத்துக் கொண்டிருக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரைக்கும் அரசியல் என்பது எங்களுடைய தமிழ் மக்களை அழிக்கிறது.
தமிழகத்தில் எனக்கு ஆதரவு
தமிழ்நாட்டிலே 2 நாட்கள் பயணத்தின் போது, தமிழ்நாட்டு மக்கள் என்னை எவ்வளவு ஆதரித்தார்கள் என்பதைத் தமிழ்நாட்டிலே என்னைக் கடந்து வந்த உறவுகளுக்கும், என்னுடைய ஊடகப் பேட்டிகளைப் பார்த்த உறவுகளுடைய பின்னூட்டல்களில் இருந்தும் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.தமிழ்நாடு எங்களுடைய தமிழீழ தேசத்தை அங்கீகரிக்கிறது.
இது வலி. இது ஒரு ஒருவனின் வலி இல்லை, ஒருத்தியின் வலி இல்லை, இசைப்பிரியா மட்டுமல்ல ஆயிரம் இசைப்பிரியாக்கள் புதைக்கப்பட்ட மண்ணிலே இன்று புத்தக் கோயில்கள் கட்டப்படுகிறது. எங்களுடைய வலிகளை எவனுமே கேட்பதற்குத் தயாராக இல்லை. இங்கே காட்டிக் கொடுக்கிறோம்; பெத்த தாயைக் காட்டிக் கொடுக்கிறோம், தங்கையைக் காட்டிக் கொடுக்கிறோம், அக்காவைக் காட்டிக் கொடுக்கிறோம், ஒரு தமிழினத்தைக் காட்டிக் கொடுக்கிறோம்.
ஒரு காட்டிக் கொடுக்கின்ற இனத்தோடுதான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற போது, சிதைக்கப்பட்ட ஒரு இனத்திலிருந்து உங்களிடம் கேட்கிறேன், மறுபடியும் எங்களுடைய மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் அதற்குரிய அரசியலை என்னைச் செய்ய விடுங்கள்.
சீமானுக்கு (SEEMAN) பகிரங்க கொலை மிரட்டல்
நான் எங்களுடைய அண்ணன் சீமான்… அண்ணன் சீமான் அவர்கள் அன்றைய தினத்தில் சொல்லியிருந்தார், ”அவன் என்னடா” என்று சொல்லி கேவலமான வார்த்தைகள் எல்லாம் கதைச்சிருந்தார்.
அண்ணே… நல்ல காலம் நீங்க இந்தியாவுல!
நான் இந்தியாவுக்கு வரும் போது ஆயுதம் கொண்டு வர இயலாது. இந்த ஆயுதம் கொண்டு வர முடிந்திருந்தால் நாய் உன்னைச் சுற்றுப்பேன்டா! நல்ல காலம்… நல்ல காலம் நீ இப்போது இந்தியாவுல! ஏனென்றால் இந்திய மக்கள் நல்லவர்கள். எங்களுடைய தேசியம் கதைக்கப்படுகின்ற போது உன்னை, அவர்கள் தேசியம் கதைக்கிறாய் என்பதற்காகப் பார்க்கிறார். டேய் சுட்டு இருப்பேன்டா! நீ வந்திருந்தால் யாழ்ப்பாணத்துல உனக்கு வெடி வெச்சிருப்பேன். ஆனால் நீ இப்போது இந்தியாவுல. பாதுகாப்பாக இந்தியாவிலே இருந்து கொள்.
எங்களுடைய இனத்தை விற்காதே..எங்களுடைய வலிகளை விற்காதே. எனக்கு வலிக்குது, என் அம்மா… என்னுடைய தந்தை இறந்திருக்கிறார், என்னுடைய தாய் இறந்திருக்கிறாள், எங்களுக்கு வலியடா, விற்காதே! அவ்வளவுதான் கேட்கிறேன். இவ்வாறு ராமநாதன் அர்ச்சுனன் எம்.பி. பேசினார்.
