கரூரில் (Karur) கடந்த ஆண்டு 41 பேர் பலியான துயர சம்பவத்தின் போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட 19 போலீசார் அதிரடியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவரான இன்றைய முதல்வர் விஜய் பிரசாரம் செய்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்த சம்பவம்.
இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. கரூரில் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் இன்றைய முதல்வர் விஜய் மற்றும் தவெக நிர்வாகிகளை டெல்லிக்கு வரவழைத்தும் விசாரணை நடத்தினர்.
தமிழக சட்டசபை தேர்தலில் தவெக வெற்றி பெற்று தற்போது ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக விஜய் கடந்த மே 10-ந் தேதி பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர்.
டிஎஸ்பி (DSP) உட்பட 19 போலீசார் கூண்டோடு மாற்றம்
இந்நிலையில் கரூர் துயர சம்பவத்தின் போது பணியில் இருந்த காவல்துறையினர் 19 பேர் கூண்டோடு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் செல்வராஜ், தனிப்பிரிவு ஆய்வாளர் மணிவண்ணன், தனிப்பிரிவு காவலர்கள் ராஜாமணி, ராமலிங்கம், மோகன்ராஜ், கதிர்வேல் உள்ளிட்ட 19 போலீசார் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் ஆட்சியர் மாற்றம்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கரூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய ரவிக்குமார் மாற்றப்பட்டு முத்துக்குமரன் நியமிக்கப்பட்டார். கரூர் துயர சம்பவத்தின் போது ஆட்சியராக பணியுரிந்த தங்கவேல் கடந்த பிப்ரவரி 24-ந் தேதி பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.
