அமைச்சரவையில் விசிக, ஐயூஎம்எல், இடதுசாரிகள்? – முதல்வரின் விருப்பத்தை வெளியிட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!

Published On:

| By Pandeeswari Gurusamy

விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக), ஐயூஎம்எல் மற்றும் இடதுசாரிகளைச் சேர்ந்தவர்கள் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் விரும்புவதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (மே 20) அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “”2026 தேர்தலுக்குப் பிறகு தமிழகம் முழுவதும் பெண்களும் இளைஞர்களும் சேர்ந்து ஒரு புதிய மாற்றத்தையும் வரலாற்றையும் உருவாக்கப் போகிறார்கள். கடந்த 50 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றத்திற்கான ஒரு தலைவராக நம்முடைய தலைவர் உருவாகியுள்ளார். தற்போதைய அரசியல் சூழ்நிலையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் திருமாவளவன் அவர்களை அமைச்சரவையில் பங்கேற்க அன்போடு அழைக்கிறோம். முதலமைச்சரின் விருப்பமும் இதுவே ஆகும். மேலும், ஐயூஎம்எல் கட்சியைச் சேர்ந்த நமது இஸ்லாமிய சகோதரர்களும் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்பதை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். இதை எங்கள் தலைவர்களிடமும் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.

இடதுசாரி சிந்தனை கொண்ட, சமூக நீதியின் அடிப்படையில் மதச்சார்பற்ற கொள்கையில் உள்ள எல்லா தலைவர்களும் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்பது முதலமைச்சரின் விருப்பம், அது அவரது கனவு. ‘ஒரு அன்பான குடும்பம் எப்படி இருக்குமோ, அதுபோல் அமைச்சரவை இருக்க வேண்டும்’ என்று முதலமைச்சர் நினைக்கிறார்.” என கூறினார்.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share