உலகிலேயே சிறந்த சொல் ‘சுயமரியாதை’ என சொன்னவர் தந்தை பெரியார்- OXFORD பல்கலை.யில் முதல்வர் ஸ்டாலின்

Published On:

| By Mathi

London Thanthai Periyar MK Stalin Speech

உலகத்திலேயே மிகச் சிறந்த சொல், சுயமரியாதை என சொன்னவர் தந்தை பெரியார்; இங்கே தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் என்ற தகுதியைவிட பெரியாரின் பேரன் என்ற கம்பீரத்துடன் நான் நிற்கிறேன் என பெருமிதத்துடன் பேசினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

லண்டன் OXFORD பல்கலைக் கழகத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா கருத்தரங்கில் தந்தை பெரியார் படத்தை இன்று (செப்டம்பர் 5) திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை

ADVERTISEMENT

பல நூறு ஆண்டுகளாக, உலகின் சிறந்த அறிவாளிகளை உருவாக்கும் இந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அரங்கத்தில் பேசுவதை பெருமையாக நினைக்கிறேன்.

இங்க தமிழ்நாட்டு முதலமைச்சர், தெற்காசிய அரசியலை புரட்டிப் போட்ட இயக்கமான தி.மு.க. தலைவர் என்ற தகுதியோட மட்டுமில்ல; பெரியாரின் பேரன் என்ற கம்பீரத்துடன் நிற்கிறேன்.

ADVERTISEMENT

உலகம் முழுவதும் தேவைப்படும் பெரியார்

பகுத்தறிவுப் பகலவன் – அறிவாசான் தந்தை பெரியாரின் படத்தை, ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் திறந்து வைப்பதை வாழ்நாள் பெருமையாக நினைக்கிறேன்.

ADVERTISEMENT

பகுத்தறிவுப் பட்டொளி, உலகம் முழுவதும் பரவி வருகிறது என்பதன் அடையாளம்தான் இந்த படத்திறப்பு!

பெரியார் இன்று உலகம் முழுவதும் தேவைப்படுறார் என்பதன் அடையாளமாக, அவருடைய படம் இங்கே திறக்கப்படுகிறது.

பெரியார் உலகமயமாக்கல்

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அறிவின் அடையாளம் மட்டுமல்ல; உரிமையின் அடையாளம்! மனித உரிமையின் அடையாளம்! உலக அடையாளம்! அப்படிப்பட்ட இங்கு தந்தை பெரியாரின் படம் திறக்கப்படுவது உலகப் பெருமை!

பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தை உலகமயமாக்கும் நோக்கத்துடன் இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ள பேராசிரியர்கள் பைசல் தேவ்ஜி, ஜேம்ஸ் மல்லின்சன் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய நன்றி!

பெரியாரின் கொள்கை வாரிசு

சுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சியாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பொறுப்பில் இருக்கும் எனக்கு, இதைவிடப் பெருமை இருக்க முடியாது.

தந்தை பெரியாரின் கொள்கை வாரிசு என நான் தொடர்ந்து சொல்கிறேன். பலமுறை பெரியாரைப் பார்த்திருக்கேன். எங்கள் வீட்டில் நடைபெற்ற திருமணத்தை நடத்தி வைக்க, தந்தை பெரியார் வருகை தந்தார், அப்போது, இந்தக் கையால அவருக்கு உணவு பரிமாறி இருக்கிறேன். இதைச் சொல்கிற போது எனக்குள் பெருமை பொங்குகிறது!

ஒரு இனத்துக்கே சுயமரியாதை உணர்வை ஊட்டி தலைநிமிர வைத்த தந்தை பெரியாரை இன்று உலகம் கொண்டாடி வருவதுதான் தமிழ்நாட்டுக்கும் திராவிடர் இயக்கத்துக்கும் கிடைத்த மிகப்பெரிய பெருமை!

இங்கிலாந்தின் செயிண்ட் அந்தோணி கல்லூரி- பெல்லியோல் கல்லூரி இணைந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் இரண்டு நாள் மாநாட்டை ஒருங்கிணைக்கிறாங்க என என்னிடன் சொன்ன போது எனக்கு அளவில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது.

உலகின் மிகச் சிறந்த சொல் சுயமரியாதை

நினைத்துப் பார்க்குறேன்…

1983 செப்டம்பர் 21-ஆம் நாள், இதே ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில், மானமிகு ஆசியர் வீரமணி கலந்து கொண்ட, தந்தை பெரியார் நூற்றாண்டு விழா நடைபெற்றது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று மீண்டும் அதே ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியாரின் பகுத்தற்வு ஒளி பரவுகிறது! 

பெரியாருக்கு மிக மிகப் பிடித்தமான சொல், சுயமரியாதை!

உலகில் எந்த அகராதியைக் கொண்டுவந்து காட்டினாலும் இதைவிட சிறந்த சொல்லைக் காட்ட முடியாது என்று சொன்னவர் தந்தை பெரியார்.

ஒரு மனிதனுக்கு சுயமரியாதை எண்ணத்தை ஊட்டிவிட்டால் அவன் வெற்றிப் பெறுவான் என சொன்னவர் தந்தை பெரியார்.

அதுமட்டுமில்ல, “உலகத்துலேயே உயிரைக் கொடுத்து பெற வேண்டிய ஒன்னே ஒன்னு சுயமரியாதைதான்”-என அழுத்தம் திருத்தமாக சொன்னவர் தந்தை பெரியார்.

மனிதனின் சுயமரியாதையை பாதுகாப்பதற்குதான் அனைத்து அரசியல் தத்துவங்களும் தேவை என சொல்லி, தாம் உருவாக்கிய இயக்கத்துக்கே சுயமரியாதை இயக்கம் என பெயர் வைத்தவர் பெரியார்.

அப்படிப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டை முன்னிட்டு, இங்கே மாபெரும் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர்களால் ஆய்வுரைகள் நிகழ்த்தப்பட்டிருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியும் மனநிறைவும் அடைகிறேன்.

ஆய்வாளர்கள் ஜெயரஞ்சன், ஆனந்தி, வெங்கடாசலபதி

தமிழ்நாடு அரசின் திட்டக்குழு துணைத் தலைவராக சிறப்பாகப் பணியாற்றி வரும் பேராசிரியர் ஜெயரஞ்சன் அவர்களும், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி மைய பேராசிரியர் வெங்கடாசலபதி அவர்களும், பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகளை ஆய்வு செய்த பேராசிரியர்  எஸ்.ஆனந்தி அவர்களும் இன்று இங்கே வருகை தந்துள்ளனர்.

இந்த விழாவுக்கு மகுடம் வைப்பது போல, தமிழ்நாட்டின் மிகச்சிறந்த ஆய்வாளர்கள்ல ஒருத்தரான பேராசிரியர் முனைவர் ஆ.இரா.வெங்கடாசலபதியும், பேராசிரியர் கார்த்திக் ராம் மனோகரனும் இணைந்து உருவாக்கி உள்ள ‘‘The Cambridge Companion to Periyar’’ என்ற ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு ஆங்கில நூல் வெளியீட்டு விழா அமைந்துள்ளது. இதை வெளியிடுகிற பெருமையும் எனக்குக் கிடைத்துள்ளது.

இந்த சிறப்பான நூலை, இந்த ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்றவரான ஆ.இரா.வெங்கசாலசபதி அவர்களின் முயற்சியால், பெரியார் குறித்த நூலை Cambridge University Press வெளியிட்டுள்ளது. தந்தை பெரியார் உலகமயமாகிட்டார் என்பதன் அடையாளம்தான் இது!

பெரியாரியம் என்றால் என்ன?

தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாட்டில் பிறந்தார். தமிழில் பேசினார். ஆனால் அவருடைய சிந்தனைகள் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது; மானிடச் சமுதாயத்துக்கானது! உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது! அதுதான் பெரியாரியம்!

பெரியாரியம் என்றால் என்ன? என யாராவது கேட்டால்,

அவர்களுக்கு நாம் அறிமுகப்படுத்த வேண்டிய அடிப்படைகள்

  • சுயமரியாதை  
  • பகுத்தறிவு 
  • சமதர்மம் 
  • சமத்துவம் 
  • மானுடப்பற்று 
  • ரத்த பேதமில்லை  
  • பால் பேதமில்லை 
  • சுய முன்னேற்றம் 
  • பெண்கள் முன்னேற்றம்  
  • சமூகநீதி 
  • மதசார்பற்ற அரசியல் 
  • அறிவியல் மனப்பான்மை

என்றுபெரியாரியத்தை அறிமுகப்படுத்த வேண்டும். பரந்து விரிந்த அறிவுக்கடலான தந்தை பெரியாரின் சிந்தனைகளை உள்வாங்க, இந்த அறிமுகம் நிச்சயம் பயன்படும்!

இந்தச் சிந்தனைகளின் அடிப்படையிலான சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளாக, ஆறு குறிப்புகளை, ‘குடிஅரசு’ இதழில் தந்தை பெரியார் எழுதினார்.

முதலாவது

சமூக வாழ்வில் ஒருவருக்கு ஒருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது.

இரண்டாவது –

ஏழை, பணக்காரன் ஏற்றத்தாழ்வு இல்லாமல் எல்லாப் பொருளும் பூமியும் எல்லாருக்கும் சரிசமமாக இருக்க ணும்.

மூன்றாவது

ஆணுக்கும் பெண்ணுக்கும் சகல துறைகளிலும் சமத்துவம் இருக்கணும்.

நான்காவது

சாதி, மதம், தேசம், வருணம்,கடவுள் ஆகியவை அற்ற மனித சமூக ஒற்றுமை நிலவ வேண்டும்

ஐந்தாவது

அனைத்து மனிதரும் உழைத்து அதன் பயனை அனைவரும் சமமாக பயன்படுத்த வேண்டும்.

ஆறாவது

யாரும் எதற்கும் அடிமை ஆகாமல், அவரவர் அறிவு – ஆராய்ச்சி – உணர்ச்சி –  காட்சி ஆகியவற்றுக்கு இணங்கி நடக்க முழு சுதந்திரம் இருக்க வேண்டும்.

இதெல்லாம் உலகம் முழுவதும் – அனைத்து நாடுகளுக்கும், அனைத்து மக்களுக்கும் பொதுவான கருத்தியல்கள்! அதுனாலதான் பெரியார் கொள்கை, உலகளாவிய கொள்கை என்று நாம் சொல்கிறோம்.

இவ்வளவு முற்போக்கான கருத்தியல்களை, நூறு ஆண்டுகளுக்கும் முன்பே, அதுவும் பழமைவாதங்களும் மூடநம்பிக்கைகளும் நிரம்பியிய மண்ணில் பேசி, மக்களை எழுச்சிப் பெற வைத்தவர் தந்தை பெரியார்!

தந்தை பெரியாரின் உலக பயணம்

சுயமரியாதை இயக்கத்தை அவர் சாதாரணமாக தோற்றுவிக்கவில்லை. உலகம் முழுவதும் பயனம் மேற்கொண்டார். உலகம் எப்படி இருக்கிறது என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்து, தமிழ்நாட்டுக்கு எடுத்துச் சொன்னார்… தமிழ்நாடும் தமிழரும் தலைநிமிர்ந்தனர். அதனால்தான் அவர் தந்தை பெரியார்!

தந்தை பெரியாரின் உலகப் பயணங்களை சுருக்கமாக பட்டியலிட்டுச் சொல்ல வேண்டும் எனில்

1929-ல – மலேசியா, சிங்கப்பூருக்கும் –

1932 -ல எகிப்து, கிரீஸ், துருக்கி, ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து, போர்ச்சுக்கல், சோவியத் ரஷ்யா என ஓராண்டு முழுவதும் பயணம் செய்தார்.

இதே இங்கிலாந்து நாட்டில், 1932-ம் ஆண்டு ஜூன் 16 முதல் ஜூலை 6 வரைக்கும் பல்வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்தார். இங்கே தான், கம்யூனிஸ்ட் தலைவர் லெனின் எழுதிய ‘மதம்’ என்ற நூலை வாங்கினார். அதை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து, தமிழாக்கம் செய்து வெளியிட்டார்.

இங்க இருக்க பார்ன்ஸ்லே-வில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கிடையே துணிச்சலாகப் பேசினார் பெரியார். அந்தக் கூட்டத்தில் இருந்த நிறைய பேர், லேபர் பார்ட்டியைச் சேர்ந்தவர்கள். அப்போது, இந்தியால பிரிட்டிஷ் ஆட்சிதான் நடந்து கொண்டிருந்தது.. ஆனா அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், “இங்கே தொழிலாளர் நட்பு ஆட்சிய நடத்துறதா சொல்றீங்க. ஆனா, இந்தியால தொழிலாளர்களுக்கு விரோதமா ஆட்சி நடத்துறீங்க”-னு வெளிப்படையாக குற்றம்சாட்டினார். இந்த துணிச்சல்தான் தந்தை பெரியார். அதனால்தான், காலங்கள் கடந்தும், என்றென்றும் பெரியார் என அனைவராலும் போற்றப்படுகின்றார். இன்னும் எத்தனை நூறு ஆண்டுகள் கடந்தாலும், தந்தை பெரியார் தொடர்ந்து நினைக்கப்படுவார்; போற்றப்படுவார்!

நாத்திகம் அல்ல- பகுத்தறிவு

அவர் இந்தச் சமூகத்தில் விதைத்தது நாத்திகம் இல்லை; பகுத்தறிவு! அதனால்தான் “நானே சொன்னாலும், உன் புத்திக்கு சரினு பட்டது ஏத்துக்கோ, இல்லனா விட்டுடு” என சொன்னார் பெரியார்.

வெறும் நம்பிக்கையை கண்டுப்பிடிப்பா ஏற்கக் கூடாது என்று சொல்லி, அனைத்தையும் கேள்வி கேட்கச் சொன்னவர் தந்தை பெரியார். அனைத்துக்கும் விடையை கண்டுப்பிடிக்க வேண்டும். எதையும் லாஜிக்கலாக அணுக வேண்டும். இந்த அறிவியல் சிந்தனையைத்தான் பரப்பினார்; அறிவியல் மனப்பான்மையைத்தான் விதைத்திருந்தார் தந்தை பெரியார்.

இன்று ஏற்பட்டுள்ள அத்தனை அறிவியல் மாற்றங்களையும், ‘இனிவரும் உலகம்’- என்று தொலைநோக்குப் பார்வையுடன் சொன்ன சிந்தனையாளர் தந்தை பெரியார். பகுத்தறிவும் அறிவியலும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும்.  அறிவின் கூர்மைதான் பகுத்தறிவு என்று எடுத்துச் சொன்னதால்தான், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அவரைப் பற்றி அவர் மறைந்து இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னரும் விவாதிக்கிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் புத்தகம் வெளியிடுகிறது.

சுயமரியாதை இயக்கத்த 1925-ஆம் ஆண்டு தொடங்கினாலும், சுயமரியாதைச் சிந்தனையானது பெரியாருக்கு இளமைக் காலத்திலேயே வந்துவிட்டது. அவர் அப்பவே அப்படித்தான்! 

பெரியாரின் வாழ்வியல்

தந்தை பெரியாரின் லைஃப் ஹிஸ்டரிய கொஞ்சம் பார்த்தால், அவர் காலத்தை மீறி செய்த புரட்சிகள் புரியும்!

ஆதிக்க சாதியினர் வீட்டில் தண்ணீர் குடித்ததால், அவமானப்படுத்தப்பட்டதும், தாழ்த்தப்பட்டோர் வீட்டில் தண்ணீர் குடித்ததால் சொந்த வீட்டில அவமானப்படுத்தப்பட்டதும் சின்ன வயதிலேயே அவர் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

பெரியாரின் தங்கை மகள் அம்மாயிக்கு 10 வயதிலேயே, 13 வயது பையன்கூட திருமணமாகி, மணமான அறுபதாவது நாளே மணமகன் இறந்துட்டார். மறுமணத்துக்கு குடும்பத்துல உள்ள எல்லாரும் எதிர்ப்புத் தெரிவித்தாலும், அதையெல்லாம் மீறி, அந்த பெண்ணுக்கு இரண்டாவது திருமணத்தை நடத்தி வைத்தார். மாற்று சமூகத்தினரின் காதல் திருமணங்களை ஊரார் எதிர்ப்பை மீறி நடத்தி வைத்தார்.

தெருக்களுக்கு வைக்கப்பட்ட சாதிப் பெயர்களை நீக்கினார். நகராட்சிப் பள்ளிகளில் தீண்டப்படாத வகுப்புக் குழந்தைகள் சேரவும், படிக்கவும் வழி கண்டார். இந்திய விடுதலைப் போராட்ட இயக்கத்தில் சேர்ந்த பெரியார், அங்கேயும் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்புவதில் முனைப்பாக இருந்தார். சேரன்மாதேவி குருகுலத்தில் அனைவருக்கும் சமமான உணவு தரப்பட வேண்டும்;, வைக்கத்தில் அனைவரையும் கோவில் தெருவில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று போராடினார். 

இடஒதுக்கீடு உரிமைக்காக காங்கிரஸ் மாநாடுகளில் தீர்மானங்களைக் கொண்டு வந்தார். அந்த தீர்மானங்கள் எல்லாம் தோற்கடிக்கப்பட்டது. அங்கேயும் உயர் சாதியினரின் ஆதிக்கம் இருப்பதைப் பார்த்து, அரசியல் விடுதலை மட்டும் போதாது, சமூக விடுதலையும் தேவை என அதில் இருந்து வெளியேறினார். அப்படி உருவானதுதான், இன்றைக்கு நாம் விழா எடுத்துக் கொண்டாடும் சுயமரியாதை இயக்கம்!

சுயமரியாதை இயக்க அடிப்படை கொள்கைகள்

சமூகநீதி – பெண்களுக்கு சொத்துரிமை – தீண்டாமை ஒழிப்பு – பொது இடங்களில் பட்டியலினத்தவர்க்கு தடை இருக்கக் கூடாது – நில உரிமை – கைம்பெண் மறுமணம் – தமிழுக்கு முக்கியத்துவம் – சமஸ்கிருத ஆதிக்க எதிர்ப்பு – இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு ஆகியவைதான் சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகள்.

இந்தக் கொள்கைகளுக்காக பெரியார் அலைந்த அலைச்சல் யாரும் அலையாதது. 14.2.1937 அன்று மட்டும், ஒரே நாளில், 17 சிற்றூர்களில் பெரியார் பேசி இருக்கார்.  16.2.1962 அன்று மட்டும் 19 கூட்டங்களில் பெரியார் பேசி இருக்கார். அதுவும் அப்ப அவருக்கு என்ன வயசு? 82 வயது! 95 வயதிலும் 98 நாட்கள் அலைந்தவர் தந்தை பெரியார்.

இவ்வளவு உழைப்பு எதுக்காக?

நம்ம மண்ணில் வாழுகிற மனிதர்களை மானமும் அறிவும் உள்ள சுயமரியாதைமிக்க மக்களாக்கத்தான் ஓயாம உழைத்தார் தந்தை பெரியார்.

உலகத்தில் எந்த சீர்திருத்த இயக்கத்துக்கும் இல்லாத பெருமையும் புகழும் பெரியார் இயக்கத்துக்கு உண்டு.

பெரியாரின் இந்த சாதனைகள் எல்லாம், ஆயுதம் தாங்காத புரட்சிகள்! ரத்தம் சிந்தாத புரட்சிகள்!

அவரோட சீர்திருத்தக் கொள்கைகள் எல்லாம், சட்டங்கள் ஆவதை பார்த்த பெருமை பெரியாருக்கே உண்டானது!

சிந்தனைகளுக்கு செயல் வடிவம் தரும் அரசு

உலகம் எத்தனையோ சிந்தனையாளர்களை – சீர்திருத்தவாதிகளைப் பார்த்துள்ளது! எத்தனையோ புரட்சிகரமான சிந்தனைகளை அவர்கள் பேசியிருக்காங்க. ஆனா, அந்த சிந்தனைகளை செயல்வடிவமாக்குற ஆட்சியாளர்கள் இருக்கவே மாட்டாங்க.

இது உலகத்தில் எந்த சீர்திருத்த இயக்கத்துக்கும் கிடைக்காத புகழ்!

நம்ம தமிழ்நாட்டுல மட்டும்தான், ஒரு சீர்திருத்த இயக்கம், அரசியல் இயக்கமாக எழுச்சிப் பெற்று, வெகுஜன மக்களை கன்வின்ஸ் பண்ணி – அவங்களோட ஆதரவை வாக்குகளாகப் பெற்று – சீர்திருத்தக் கருத்துக்களை நடைமுறைப்படுத்தி, அவற்றை சட்டமாகவும் ஆக்கி அந்தச் சமுதாயத்தை மேன்மையடையவும் வைத்துள்ளது.

சமூக நீதிக் கொள்கையை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்குமான கொள்கையாக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற வைத்தவர் தந்தை பெரியார். தமிழ்நாடு என பெயர் சூட்டப் போராடியவர் பெரியார். ஆட்சி அதிகாரத்தை அடைந்து அதை செய்து காட்டியவர் பேரறிஞர் அண்ணா. முத்தமிழறிஞர் கலைஞர், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சட்டம் கொண்டு வந்தார். பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்று பெரியார் தீர்மானம் போட்டார். அதை சட்டம் ஆக்கியவர் முதலமைச்சர் கலைஞர். அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் அதிகாரம் வேண்டும் என பெரியார் சொன்னார். அத சட்டம் ஆக்கி நிறைவேத்தித் தந்தது திராவிட இயக்க ஆட்சி.

சமத்துவபுரம்

இது எல்லாவற்றையும்விட, நான் பெருமையோட சொல்கிறேன், சாதியைக் கடப்பதற்காக இந்தியாவிலேயே வேற எந்த மாநிலமும் செய்யாத முன்னெடுப்பாக, பேரறிஞர் அண்ணா அவர்கள் “சுயமரியாதைத் திருமணச் சட்டத்தையும்”, தலைவர் கலைஞர் அவர்கள் “சமத்துவபுரம்” திட்டத்தையும் கொண்டுவந்து, தந்தை பெரியாரின் எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுத்திருக்கோம்!

பெரியாரால்  கல்வி பெற்றவர்கள் – வேலை வாய்ப்பைப் பெற்றவர்கள் – அதிகாரம் பொருந்திய பதவிக்கு வந்தவர்கள் – குறிப்பாக பெண்ணினம் அடைந்த வளர்ச்சி – ஒடுக்கப்பட்ட மக்கள் அடைந்த உயர்வுகள் அனைத்தையும் இன்றைக்கு நாம் கண் முன் பார்க்கிறோம். படிக்கக் கூடாது என கல்வி மறுக்கப்பட்டவங்க அனைத்து கல்வி நிலையங்களிலும் முதலிடத்துக்கு வந்து நிற்கின்றனர். வீட்டை விட்டே வெளிய வரக்கூடாது என தடுக்கப்பட்ட பெண்கள் – இன்று உலகத்தையே வலம் வருகிறார்கள், உலகத்தைத் தாண்டி விண்வெளிக்கே சென்று வருகின்றனர். கோயிலுக்குள்ள கால் வைக்கக் கூடாது என்று தடுக்கப்பட்டவங்களோட கரங்கள் இன்று கருவறையில வழிபாட்டை நடத்திட்டு இருக்கு.

இந்த ஐரோப்பிய பயணத்துல பார்க்கிறேன்… ஒடுக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து முன்னேறி வந்து ஏராளமான பேர் இங்க நல்ல பொசிஷன்ல இருக்காங்க. 

பொருளாதார முன்னேற்றம்

தமிழ்நாடு அனைத்திலும் முன்னேறி வருகிறது. கல்வியில்- பொருளாதாரத்தில் – தொழில் வளர்ச்சியில்- வாழ்க்கைத் தரத்தில்- உள்கட்டமைப்பு வசதியில முன்னேறி இருக்கிறோம். உழைப்பின் சாதனை உற்பத்தி சாதனையாக மாறி இருக்கிறது.

பட்டினிச் சாவு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. வளமான தமிழ்நாடாக வளர்த்து வருகிறோம். மற்ற மாநிலங்கள் வியந்து பார்க்கும் மாநிலமாக உயர்ந்திருக்கிறோம். இதுதான் திராவிட இயக்கத்தின் சாதனை!

பெரியார் கண்ட வளர்ச்சியை நாங்க தமிழ்நாட்டில் செயல்படுத்தி வருகிறோம்.. பெரியாருக்கே இந்த ஆட்சி காணிக்கை என சொன்னார் பேரறிஞர் அண்ணா. தமிழர் தந்தை பெரியார் மறைந்தபோது அரசு மரியாதைக்கு ஆணை பிறப்பித்தார் தமிழினத் தலைவர் கலைஞர். பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளா அறிவித்து – செப்டம்பர் 17 அன்று தமிழ்நாட்டையே உறுதிமொழி எடுக்க வைத்தது நம்ம திராவிட மாடல் அரசு.

செல்ல வேண்டிய தூரம் அதிகம்

அதற்காக, பெரியார் கண்ட கனவுகள் அனைத்தையும் நாம நிறைவேத்திட்டோம் என சொல்லமாட்டேன். இந்த நூறாண்டில் ஒரு சமூகமா நாம அடைந்துள்ள வளர்ச்சி என்பது, ஒரு குழந்தை நடை பழகுற மாதிரிதான்! நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் இருக்கு. நம்முடைய பயணம் நெடியது. இந்தப் பயணத்தில் ஏற்படுகிற தேக்கங்களை – தேவையற்ற இடைஞ்சல்களை – பழைய குளறுபடிகளை நாம ஒதுக்க வேண்டும். போலி பெருமைகளில் சிக்கி மறுபடியும் பின்னோக்கிப் போய்விடக் கூடாது. நம்மை பின்னோக்கி இழுக்க அத்தனைவிதமான தந்திரங்களையும் மேற்கொள்வர். கொஞ்சம் ஏமாந்தாலும், நம்மோட அத்தனை உழைப்பும் கேள்விக்குறியாகிடும்.

சாதி வேறுபாடுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் முற்றிலுமாக விலகும் பயணத்தின் பல்வேறு படிநிலைகளை நாம படிப்படியாகத் தாண்டி வரணும். இதற்கான முயற்சிகளில் திராவிட முன்னேற்றக் கழகமும் – நம்ம திராவிட மாடல் அரசும் தொடர்ந்து பயணிக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன்னர், சுயமரியாதை இயக்கம் எந்த நோக்கத்துக்காகத் தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கம் படிப்படியாக நிறைவேறி வருகிறது. 

  • பிறந்த நாடு 
  • பேசும் மொழி
  • வாழும் சூழ்நிலை 

இதுக்கெல்லாம் கட்டுப்பட்டு அறிவுரை சொன்னவங்க மத்தியில, இதுக்கெல்லாம் வெளிய நின்று அறிவுரை சொன்னவர் பெரியார். திருவள்ளுவர் திருக்குறளை தமிழில் எழுதினாலும் அது உலகப் பொதுமறையாக இருப்பதைப் போல, பெரியார் சிந்தனைகள் உலகம் முமுழுவதும் தேவையானவை. உலக சமுதாயம் ஏற்றுக்கொள்ளத் தக்கவை. உலகமே கூட்டுறவு மயம் ஆகணும்னு சொன்னார் பெரியார். மனிதப்பற்று தவிர வேற எந்தப் பற்றும் தேவையில்லை என சொன்னார் பெரியார். நிறபேதம் இல்லை! ரத்தபேதம் இல்லை! பால் பேதம் இல்லை!-னு பெரியார் சொன்னதெல்லாம் இன்றைக்கு உலகம் ஒப்புக்கொண்ட உண்மைகள்.

உலகம் முழுவதும் பெரியாரின் சிந்தனைகள்

அந்த வகையில பெரியாரின் சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவ வேண்டும். இங்கே நிலவும் அனைத்து விதமான ஒடுக்குமுறைகளையும் களைய வேண்டும். சமூக உரிமைகள் முதல் தனிமனித உரிமைகள் வரை அனைத்தும் நிலைநாட்டப்பட வேண்டும். ஒவ்வொரு பிரிவினரோட உரிமையையும் இடஒதுக்கீடு என்ற உரிமை மூலமாக நிலைநாட்டி இருக்கிறோம். அதே போன்ற இடஒதுக்கீட்டுக் கொள்கைய அனைத்து நாடுகளும், ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்கு வழங்க வேண்டும். சமூக உரிமையில் அக்கறை கொண்ட அமைப்புகள் முன்னெடுக்க வேண்டும். அஃபிர்மேட்டிவ் ஆக்சன்-னு சில நாடுகளில் இப்பவே இருக்கு. கேம்பஸ் டைவர்சிட்டி, ஸ்டூடண்ட் டைவர்சிட்டினு பல முன்னணி கல்லூரி, பல்கலைக் கழகங்களில் இருக்கிறது. 

பல்வேறு உலக மொழிகளில் பெரியாரின் கருத்துகளை தமிழ்நாடு அரசு மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறது. இன்றைக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் வெளியிட்டு இருப்பது போல, மற்ற பல்கலைக்கழகங்களும் வெளியிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

“சுயமரியாதை உணர்ச்சிதான் உலக மக்களையே ஒரு குடும்ப சகோதரர்களாக மாற்றும். அப்போதுதான் இந்த இயக்கத்தின் உண்மைச் சக்தியும் பெருமையும் வெளிப்படும்”-என பெரியார் சொன்னார். பெரியாரின் சுயமரியாதைக் கொள்கையை வென்றெடுக்க இதுபோன்ற கருத்தரங்குகள் வழிவகுக்கும். 

உணர்ச்சிவசப்பட்டு நிற்கிறேன்..

தமிழ்நாடு முதலமைச்சராக எத்தனையோ வெளிநாடுகளுக்கு நான் சென்றிருக்கேன். பல்வேறு நிகழ்ச்சிகள்ல கலந்துகொண்டு இருக்கேன். ஆனால், இந்த நிகழ்ச்சி, என்னை உணர்ச்சிவயப்பட வைத்துள்ளது. இதற்கு காரணம், இது பெரியாருக்கான நிகழ்ச்சி!

லண்டனில் இருக்கிறேனா தமிழ்நாட்டுலதான் இருக்கிறேனா என நினைக்கும் வகையில இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. இந்த அழகான, அவசியமான, அறிவுப்பூர்வமான, ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை மீண்டும் தெரிவிக்கிறேன். பெரியார் உலகமயம் ஆகிறார். உலகம், மானுடத்தன்மையை மதிப்பதாக மாறட்டும். நன்றி வணக்கம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share