திமுக கூட்டணி நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்தது போல, அதிமுகவில் இருந்து பிரிந்து வந்தவர்கள் நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்தால் அது வரவேற்கத்தக்கது என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
விருத்தாசலத்தில் தேமுதிக பொதுச்செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான பிரேமலதா விஜயகாந்த் இன்று (மே 20) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவரிடம் சட்டமன்றத்தில் உங்களுடைய கன்னிப் பேச்சு எப்போது? என்று செய்தியாளார்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அவர், “ இன்னும் கன்னி பேச்சை தொடங்கவில்லை. அன்றைக்கு பேசியது வெறும் அறிமுக பேச்சு தான்.
இன்னும் என்னுடைய கன்னி பேச்சு, தொகுதிக்கான பேச்சு, அது மட்டுமல்ல இலாகாக்கள் தொடர்பான பேச்சு வருகிற போது உறுதியாக நான் நிச்சயம் பேசுவேன்.
என்னுடைய தொகுதியை இந்த விருதாச்சலத்தை மாவட்டமாக மாற்றுவது தான் முதலில் என்னுடைய கோரிக்கை. அதை வாக்குறுதியிலும் சொல்லி இருக்கிறேன்.
முதல்வருடைய கவனத்திற்கும் கொண்டு சென்று மாவட்டமாக மாற்ற நிச்சயம் எல்லாவிதத்திலும் நான் முயற்சி எடுப்பேன்” என்று கூறினார்.
முதல்வர் அறையில் ரீல்ஸ் எடுக்கிறார்கள் என்று பேசப்படுகிறதே,…
“இதைப் பற்றி எனக்கு எந்த கருத்தும் கிடையாது. மக்களே இன்றைக்கு ரீல்ஸ் மோகத்திலும் சோசியல் மீடியா மோகத்திலும் இருக்கிறார்கள். இது தவறான ஒரு முன்னுதாரணம் என்பதை வருங்காலம் அவர்களுக்கு நிரூபிக்க போகிறது.
முதல்வர் ஆபீசிலேயே இப்படி நடக்கிறது என்றால் இதைவிட ஒரு எடுத்துக்காட்டு ஒன்றும் இருக்க முடியாது. அதனால் அதைப் பற்றி எனக்கு எந்த கருத்தும் இல்லை. மக்கள் புரிந்து கொண்டால் போதும்”
தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பல எம்எல்ஏக்கள் கல்வித் தகுதி குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளதே….
“அதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். அவர்களை யார் தேர்ந்தெடுத்தார்களோ, அந்தக் கட்சியிடம் கேட்க வேண்டிய கேள்வி. ஆட்சி அமைத்திருப்பவர்களிடம் இந்த கேள்வியை கேளுங்கள்”
சட்டமன்றத்தில் ரத்தன் பண்டிட் பற்றி நீங்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு நல்ல தீர்வு கொடுத்து இருக்கிறார்கள்….
“இதற்காக முதல்வருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு அரசாங்கம் நல்ல விஷயத்தை தமிழ்நாட்டுக்காக தமிழக மக்களுக்காக முன்னெடுக்கிறது என்றால் அதை வரவேற்கின்ற முதல் கட்சி தேமுதிக தான். அதே நேரத்தில் ஏதாவது தவறுகள் நடந்தால் எதிர்க்கட்சியாக அதை சுட்டிக்காட்ட வேண்டியதும் நம்முடைய தேமுதிகவின் கடமை. இதுதான் கேப்டன் எங்களுக்கு சொல்லிக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார். அவர் வழியில் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம்.”
மதுக்கடைகள் மீதான நடவடிக்கைகள் பற்றி…
“ 717 மதுபான கடைகளை உடனடியாக மூடி இருக்கிறார்கள். பள்ளிகள் கோயில்கள் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூடி இருக்கிறார்கள். அதற்கு என்னுடைய வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன்“ என்றார். ”
குதிரை பேரம் சர்ச்சை பற்றி…
குதிரை பேரம் இல்லை என்பதை வெளிப்படையாக முதல்வர் அறிவிக்க வேண்டும். குதிரை பேரம் இல்லை என்று சொல்லி அன்றைய தினம் முகத்தை மூடி சென்றது யார்?
இன்றைக்கு அதிமுகவில் ஒரு குரூப்பை அவரே நேரடியாக சந்திக்கிறார். இது எந்த வகையில் நியாயம் என எல்லோரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு நமது மதச்சார்பற்ற வெற்றி கூட்டணியில் இடம் பெற்றவர்கள் எப்படி எந்த நிபந்தனையும் இல்லாமல் ஆதரவு தெரிவித்தார்களோ… அதுபோல அதிமுகவிலிருந்து பிரிந்து வந்தவர்கள் நிச்சயமாக நிபந்தனை இல்லாத ஆதரவு தெரிவித்தால் அது வரவேற்கத்தக்கது. இல்லை என்றால் உறுதியாக அது குதிரை பேரத்திற்கு தான் வழிவகுக்கும்.
தமிழகம் இதுவரை காணாத அந்த குதிரை பேரம் நிச்சயம் நடக்கக்கூடாது என்பதை அன்றைக்கு நான் முதல்வரிடம் சொல்லி இருக்கிறேன். அதை பரிசீலிக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்”
முதல்வராக பொறுப்பேற்ற பிறகு எல்லா தலைவர்களையும் அவர் சந்திக்கிறார். ஆனால் ஒரு கட்சித் தலைவராக ஏன் உங்களை சந்திக்கவில்லை விஜயகாந்த் நினைவிடத்திற்கும் வரவில்லையே?
“அதை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும் இதற்கு நான் பதில் சொல்ல முடியாது”
தேமுதிகவுக்கு எம்.பி. பதவி கொடுப்பதை எடப்பாடி பழனிசாமி தடுத்தார் என சிவி சண்முகம் சொல்லியிருக்கிறார். இது உண்மையா?
இது பற்றிய பேப்பரை திருவண்ணாமலையிலேயே நான் காட்டினேன். பிறகு உண்மையா என்று என்கிட்ட ஏன் திருப்பி கேட்கிறீர்கள். அவர் (எடப்பாடி) ஒரு ராஜ்ய சபா எம்பி என கையெழுத்து போட்டுக் கொடுத்தது உண்மை. அதைத்தான் அன்றைக்கு திருவண்ணாமலை கோயிலில் பத்திரிகையாளரிடம் காட்டினேன். ஆனால் அவர் யார் யாரோ சொல்வதற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது என்று கூறியது உகந்தது அல்ல. சிவி சண்முகம் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை.
