எத்தனை கட்சி மாறியவர் இந்த ஆதவ் அர்ஜுனா… ஓ.எஸ்.மணியன் காட்டம்!

Published On:

| By Kavi

ஆதவ் அர்ஜுனா அதிமுகவையும் திமுகவையும் சம்பந்தப்படுத்தி அவதூறான செய்திகளை சொல்லி வருகிறார் என்று ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,  “மக்கள் தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி செயல்பட நினைத்ததால் அதிமுகவில் ஒரு தரப்பினர் எங்களுக்கு ஆதரவு அளித்தனர். தேர்தலில் தோல்வியைத் தழுவிய பிறகு நல்ல எதிர்க்கட்சியாக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டிருக்க வேண்டும்.

ADVERTISEMENT

ஆனால் பின்வாசல் வழியாக ஆட்சியை அமைக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டார். திமுகவுடன் எடப்பாடி பழனிசாமி கைகோர்க்க நினைத்ததைத் தற்கொலைக்குச் சமம் என அதிமுகவினர் கருத்து தெரிவித்தனர்” என்று கூறியிருந்தார். 

இதற்கு பதிலளித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்,  “ஆதவ் அர்ஜுனா அதிமுகவையும் திமுகவையும் சம்பந்தப்படுத்தி அவதூறான செய்திகளை சொல்லி வருகிறார். ஆதவ் அர்ஜுனா அவருடைய அரசியல் காலத்தை கொஞ்சம் முன்னே சென்று பார்க்க வேண்டும். அவர் எத்தனை கட்சிகள் மாறி மாறி வந்திருக்கிறார் என்பதையும் பார்க்க வேண்டும். 

ADVERTISEMENT

விடுதலை சிறுத்தைகள் கட்சியிலே  பயணித்தார்.  திராவிட முன்னேற்ற கழகத்திலே இணைந்தார். அதற்குப் பின்னால் அதிமுக பொதுச்செயலாளரிடமும் இணைவதற்கு பேசினார்  துணை பொதுச்செயலாளர் வேண்டும் என்று கேட்டார், அதெல்லாம் மறுக்கப்பட்டது.

அவர் சொல்லுகிற குற்றச்சாட்டை நாங்கள் 100% மறுக்கிறோம். அதாவது எங்களுடைய பொதுச்செயலாளர் எடப்பாடி, சட்டமன்றத்தில், மக்கள்மன்றத்தில் தொடர்ந்து திமுகவின் மக்கள் விரோத நடவடிக்கைகளை, சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற பிரச்சினைகளை எல்லாம்  எடுத்து வைத்து வருகிறார்.

ADVERTISEMENT

அதேபோல எழுச்சி பயணத்தில் தமிழ்நாடு முழுக்க பயணம் செய்து,  திராவிட முன்னேற்ற கழக அரசின் அலங்கோலங்களை, சட்ட விரோத நடவடிக்கைகளை, மக்கள் விரோத நடவடிக்கைகளை, குறிப்பாக திராவிட முன்னேற்றக்கழக அரசின் ஆட்சியினுடைய இயலாமையை, ஆட்சி நடத்துகிற மோசமான நடவடிக்கைகளைப் பற்றி கடுமையாக விமர்சித்திருக்கிறார். மூலை முடுக்கெல்லாம் அவருடைய குரல் ஒலித்திருக்கிறது . 

அதேபோல சட்டமன்ற தேர்தலின் போதும் எடப்பாடி  அனைத்து தொகுதிகளுக்கும் சென்று, அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று திராவிட முன்னேற்றக்கழக அரசின் மோசமான நடவடிக்கைகளை, மக்கள் விரோத நடவடிக்கைகளை விளக்கமாக, விலாவாரியாக விவரித்து சிறப்பாக எடுத்து வைத்திருக்கிறார். 

இன்னமும் சொல்லப்போனால், தேர்தல் களத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தை விமர்சனம் செய்ததுதான் எடப்பாடியாருடைய முக்கிய வெற்றிக்கு காரணமாக அமைந்திருக்கிறது. அதனால் தான் கூட்டணியோடு சேர்ந்து 53 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறோம்.

இதைக்கூட அறியாமல், தெரியாமல், புரியாமல் ஆதவ் அர்ஜுனா எடப்பாடி  மீது குற்றம் சொல்வது, அவர்கள் குதிரை பேரம் நடத்திவிட்டார்கள்… அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் கருத்து வேறுபாடு உள்ள சிலரை அழைத்து அவர்கள் அமைச்சராக்க அல்லது ஆதாயம் தேட அல்லது கட்சியை, ஆட்சியை காப்பாற்ற முடிவு செய்திருப்பதன் காரணமாக ஒரு குதிரை பேரத்தை நடத்திவிட்டார்கள்…. அதை மூடி மறைக்க எடப்பாடி மீது,  பல அவதூறான செய்திகளை அவர் சொல்லி வருகிறார் என்பதையே காட்டுகிறது. இதை  நாங்கள் கண்டிக்கிறோம்” என்றார். 

இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள்,   ஆதவ் அர்ஜுனா குதிரை பேரத்தில் ஈடுபட்டார் என்று சொல்கிறீர்கள்.  ஆனால் கம்யூனிஸ்ட்கள் திருமாவளவன் ஆகியோர் அதிமுக, திமுக கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினர். 

இதற்கு ஓ.எஸ்.மணியன்,  “அதிமுக சார்பில் நாங்கள் ஏதாவது கருத்து சொல்லி இருக்கோமா?  எப்போதாவது பேசி இருக்கோமா?” என்று பதிலுக்கு கேள்வி எழுப்பினார். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share