30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த ஏப்ரல் 9ம் தேதி சட்டமன்றம் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற்றது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் 12 தொகுதிகளிலும், திமுக 5 தொகுதிகளிலும், பாஜக 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. மேலும் அதிமுக, காங்கிரஸ், லட்சிய ஜனநாயக கட்சி தலா 1 தொகுதியினை கைப்பற்றின. தவெக கூட்டணி 3, சுயேட்சை வேட்பாளர்கள் 3 இடங்களில் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில் கடந்த 18ம் தேதி தற்காலிக சபாநாயகரான அன்பழகனுக்கு கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில் ஆளுநர் கைலாஷ் நாதன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில் இன்று காலை 9.37 மணிக்கு முதலமைச்சர் ரங்கசாமி உள்பட எம்.எல்.ஏக்களின் பதவியேற்க சட்டசபை இன்று கூடியது. இதைத்தொடர்ந்து, சட்டமன்ற செயலாளர் தயாளன் ஆளுநர் கைலாஷ்நாதன் தற்காலிக சபாநாயகராக அன்பழகனை நியமித்த உத்தரவை வாசித்திருந்தார். இதைத்தொடர்ந்து தற்காலிக சபாநாயகர் அன்பழகன், உறுப்பினர்கள் பதவியேற்கும் நடைமுறைகளை விளக்கினார்.
முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணன் ஆகியோர் எல்ஏக்களாக பதவியேற்றனர். அவர்களை தொடர்ந்து வெற்றி பெற்ற எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் அன்பழகன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தவெக வேட்பாளர் ராமு தான் போட்டியிட்ட மணவெளி தொகுதியில் 13,822 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அவருக்கும் இன்று தற்காலிக சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். ராமு எம் எல்ஏவாக உறுதி மொழி எடுக்கையில் தவெக தலைவர் விஜய்யின் புகைப்படத்தை காட்டி கடவுள் என பேசினார்.
உடனடியாக எதிர்ப்பு தெரிவித்த சபாநாயகர் விஜய் குறித்து அவர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தினார். மேலும் ஏற்கனவே 1008 கடவுள்கள் உள்ளனர். இவர் என்ன 1009 ஆவதா? என கேள்வி எழுப்பினார். மேலும் இதுபோல் யாரும் செய்ய கூடாது என தெரிவித்தார்.
