முதல்வர் விஜய் (Vijay) தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ் (Congress) கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்கள் இடம் பெற உள்ளதாக அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக கே.சி. வேணுகோபால் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களான வழக்கறிஞர் ராஜேஷ் குமார் (கிள்ளியூர் எம்.எல்.ஏ.) மற்றும் பி. விஸ்வநாதன் (மேலூர் எம்.எல்.ஏ.) ஆகியோரை இணைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். அவர்கள் நாளை அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளனர்.
இது நமக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும். ஏனெனில், 59 ஆண்டுகள் என்ற நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ்நாடு அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இணைகிறது. அவர்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு மக்களின் நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்றும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் மக்கள் நலன் சார்ந்த மற்றும் முற்போக்கான ஆட்சிக்கான துணிச்சலான பார்வையை நனவாக்க அவர்கள் பாடுபடுவார்கள் என்றும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
