சவுக்கு சங்கர் மீது போடப்பட்டிருந்த குண்டாஸ் சட்டத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது.
பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் கடந்த ஆட்சியில் திமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார். பெண் போலீஸ் அதிகாரிகளையும் அவதூறாக பேசியிருந்தார்.
இந்த சூழலில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டன.
ஒவ்வொரு முறை கைது செய்யப்படும் போதும் அவர் ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. இதற்கான உத்தரவை முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண் பிறப்பித்திருந்தார்.

இந்த சூழலில் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை தமிழ்நாடு அரசு இன்று (மே 20) ரத்து செய்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ‘சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்த விவரங்கள் ஆலோசனை வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்த ஆலோசனை வாரியம் அவரை தடுப்பு காவலில் வைப்பதற்கு போதுமான காரணம் இல்லை என்று கூறியது.
அதன்படி அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு காவல் உத்தரவை அரசு ரத்து செய்கிறது.
எனவே அவர் வேறு ஏதேனும் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தாலோ அல்லது நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனையை அனுபவித்து வந்தாலோ தவிர போதுமான காரணம் இல்லாததால் தடுப்பு காவலில் இருந்து அவரை உடனடியாக விடுவிக்க உத்தரவிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை தொடர்ந்து சவுக்கு சங்கர் விரைவில் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உத்தரவு நகல்கள் காவல் ஆணையர், புழல் சிறை கண்காணிப்பாளர், ஆலோசனை குழு தலைவர், டிஜிபி, சிறைத்துறை டிஜிபி, சவுக்கு சங்கர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
