அம்பேத்கர் அயலக உயர்கல்வித்திட்டத்தில் பயிலும் மாணவர் பாரதிதாசனை தனிப்பட்ட முறையில் வஞ்சிப்பதற்கு எந்த உள்நோக்கமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவருக்கு விரைவில் பணம் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
“மாணவர் பாரதிதாசன் விவகாரத்தில் ஏற்கனவே தொடர்புடைய அரசு செயலாளர், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ஆகியோரிடத்தில் நாங்கள் பேசியிருக்கிறோம். இந்த ஆண்டு அயல்நாட்டில் கல்விபெறும் 360 மாணவர்களுக்கு உதவித்தொகை அளிக்கிறோம். கிட்டத்தட்ட 131 கோடி ரூபாய் இந்த ஆண்டு அதற்காகத் தமிழ்நாடு அரசு செலவிடுகிறது என்பதையெல்லாம் விளக்கினார்கள்.
இரண்டாம் ஆண்டுக்கான உதவித்தொகையில் பல்கலைக்கழகத்திற்கான கல்விக் கட்டணம், அவருடைய வாழ்வாதாரச் செலவு ஆகியவற்றிற்கு ரூ.12 லட்சம் இதுவரையில் அளிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய தொகையை விரைவில் அனுப்ப வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்; விரைவில் அனுப்புவார்கள் என்று நம்புகிறேன். சில விவரங்களைக் கேட்டு மின்னஞ்சல் (E-mail) மூலம் அனுப்பியிருக்கிறார்கள் என்ற தகவலை அத்துறையின் இயக்குநர் நேற்று என்னிடத்தில் பேசினார். ஆகவே, விரைவில் அதை அனுப்புவார்கள் என்று நம்புகிறேன் என்றார்.
‘மாணவர் எல்லா விவரங்களையும் நான் கொடுத்துவிட்டேன்; பல்கலைக்கழகத்தின் வழியாகவும் அனுப்பியுள்ளோம். எல்லாமும் சரியாகச் செய்தும் கூட எனக்குத் தனிப்பட்ட முறையில் இந்த அழுத்தம் கொடுக்கப்படுகிறது’ என தெரிவித்துள்ளார். இது மேலும் அழுத்தத்தைக் கொடுக்காதா? அந்த மாணவர் 12,000 ரூபாய்க்குச் ஷூ வாங்கியுள்ளார் என்பது குறித்துச் செய்திக்குறிப்பு கொடுப்பது சரியா? என்ற கேள்விக்கு, ‘எல்லா மாணவர்களும் எந்த மாதிரியான நடைமுறையைப் பின்பற்றுகிறார்களோ, அதே நடைமுறையை இந்த மாணவரும் பின்பற்ற வேண்டும் என்று நாங்கள் கேட்டுள்ளோம்’ என்ற விளக்கத்தைத் தந்திருக்கிறார்கள். ‘மற்ற மாணவர்கள் எப்படி உரிய விவரங்களை ஆவணங்களோடு, ஆதாரங்களோடு தந்து அந்தத் தொகையைப் பெற்றுக்கொள்கிறார்களோ, அதே போல் இவரும் பெற வேண்டும் என்றுதான் நாங்கள் கடிதம் எழுதியிருக்கிறோம்’ என இயக்குநர் நேற்றும் என்னிடத்தில் பேசினார். ஆகவே அவரைத் தனிப்பட்ட முறையில் வஞ்சிப்பதற்கு எந்த உள்நோக்கமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவருக்கு விரைவில் பணம் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன் என்றார்.”
