தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் 2026 – 27 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.
பின்னர் பட்ஜெட் மீதான விவாதம், துறைவாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றன. கடந்த செப்டம்பர் 8ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்தது.
இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 13 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
அவற்றில் 12 மசோதாக்களுக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

தமிழ்நாடு நகர் ஊரமைப்பு திருத்தச் சட்டம் 2026, தமிழ்நாடு தொழில் எளிதாக்கல் திருத்தச் சட்டம், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் திருத்த சட்டம், தமிழ்நாடு ஊதியம் வழங்குதல் திருத்த சட்டம், தமிழ்நாடு ஊராட்சிகள் இரண்டாம் திருத்தச் சட்டம், தமிழ்நாடு நிதி ஒதுக்கீட்டுச் சட்டம், தமிழ்நாடு வேளாண்மை விளைபொருள் விற்பனை ஒழுங்குமுறைப்படுத்துதல் இரண்டாம் திருத்த சட்டம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் திருத்தச் சட்டம், தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி திருத்த சட்டம், தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி இரண்டாம் திருத்தச் சட்டம்,
தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி இரண்டாம் திருத்தச் சட்டம், எம்எல்ஏக்களுக்கு கார் வழங்குதல் உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
அதே சமயம் தனியார் பல்கலைக்கழகங்களில் நிர்வாக நடைமுறைகள் தொடர்பான சட்டத்திருத்த மசோதா ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்படாமல் உள்ளது.
இது உயர்கல்வித்துறை பல்கலைக்கழக விதிகளுடன் தொடர்புள்ள மசோதா என்பதால் குடியரசு தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
