தமிழ்நாடு சட்டசபையில் இன்று (ஆகஸ்ட் 17) கோவை மாணவன் கொலை தொடர்பாக திமுக சார்பில் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது அமைச்சர் நிர்மல் குமார் பேசுகையில், “கோவை மலுமிச்சம்பட்டியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வரும் 19 வயது மாணவன் அமுதன், அதே கல்லூரியில் பயிலும் சக மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாகக் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், 09.08.2026 அன்று இரவு 8 மணி அளவில் இரண்டாம் ஆண்டு பயிலும் அமுதனின் நண்பர்களுக்கும் நான்காம் ஆண்டு பயிலும் சில மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் மீது முதலில் தாக்குதல் நடத்தியதாகத் தெரியவந்துள்ளது.
இதனால் ஏற்பட்ட முன்பகை காரணமாக 10.08.2026 அன்று அதிகாலை 1.30 மணி அளவில் அமுதனும் அவரது நண்பர்களும் ஏற்கனவே தகராறில் ஈடுபட்ட நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்களின் மலுமிச்சம்பட்டியில் தங்கியிருக்கும் அறைக்குச் சென்று தாக்குதல் நடத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து ஒத்தைக்கால் மண்டபம் பூங்கா நகரில் உள்ள மற்றொரு அறைக்குச் சென்று அதிகாலை 5 மணியளவில் அங்கேயும் மாணவர்களைத் தாக்கிவிட்டுத் கைபேசிகளை எடுத்துக்கொண்டு கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் தப்பிச் சென்றுள்ளனர். காயமடைந்த மாணவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள் அமுதனையும் அவரது நண்பர்களையும் 10.08.2026 அன்று காலை 8:30 மணி அளவில் வழிமறித்துத் தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், அங்கிருந்த மாணவர்கள் அமுதனைத் தொடர்ந்து தாக்கிவிட்டு அவரைச் சுமார் 10:30 மணியளவில் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று மலுமிச்சம்பட்டியில் உள்ள அமுதனின் நண்பரின் அறையில் விட்டுச் சென்றுள்ளனர். சுமார் மதியம் 3 மணியளவில் அமுதன் மயக்க நிலையில் இருந்ததைக் கண்டு அவரது நண்பர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துக் காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளார்.
அன்றைய தினமே கோயமுத்தூர் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் இரண்டு வெவ்வேறு குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் அமுதன் இறப்பு குறித்து வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு 11.08.2026 அன்று சுமார் 5 மணியளவில் அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்டது தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட குற்றவியல் வழக்கு எண் 310/2026-ன் கீழ் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் அமுதன் உள்ளிட்டோர் சக மாணவர்களைத் தாக்கியது தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட குற்றவியல் வழக்கு எண் 309/2026-ன் கீழ் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினரின் தீவிர விசாரணையில், 09.08.2026 அன்று ஏற்பட்ட இரு குழுக்களுக்கு இடையிலான பழிவாங்கும் நோக்கிலான தாக்குதலே அமுதனின் மரணத்திற்கு வழிவகுத்ததாகத் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாகப் போதைப்பொருள் பயன்படுத்தியதாகப் புகாரிலோ காவல்துறை விசாரணையிலோ அறியப்படவில்லை. மேலும் பழிவாங்கும் சம்பவங்களைத் தடுக்கத் தேவையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
முதல்வரின் ஆணைக்கிணங்க மாணவர் அமுதனின் இறப்பு காரணமாகத் துயரத்தில் உள்ள குடும்பத்தினரைச் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் 15.08.2026 சனியன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதற்கட்டமாக ரூபாய் 6 லட்சம் அவரது குடும்பத்திற்கு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கைப் பொறுத்தவரை போதைப்பொருள் பயன்படுத்துவதைப் பார்த்துக் காவல்துறையினரிடம் புகார் அளித்தவர்களின் விவரங்களைச் சம்பந்தப்பட்ட நபர்களிடம் தெரிவித்ததாகவும், அதன் காரணமாகப் புகார் அளித்தவர் சரமாரியாகத் தாக்கப்பட்டு உயிரிழந்ததாகவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளபடி எந்தவொரு சம்பவமும் இந்த வழக்கில் நடைபெறவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறேன். மேலும் இவ்வழக்கு போதைப்பொருள் தொடர்பான வழக்கும் அல்ல. இரு வேறு மாணவர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதம் மற்றும் அதைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கும் நோக்கிலான தாக்குதல் காரணமாகவே இச்சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. எனவே உண்மை நிலவரத்திற்கு மாறாக இவ்வழக்கைப் போதைப்பொருள் தொடர்பான சம்பவமாகச் சித்தரித்து வழக்கின் உண்மைத்தன்மைகயைத் திசைதிருப்ப வேண்டாம் என்று தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைப் பொறுத்தவரையில் உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் காவல்துறைக்கோ, அரசுக்கோ இல்லை. இவ்வழக்கில் காவல்துறையினர் எந்தவிதக் காலதாமதமும் இன்றி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை விரைவாகக் கைது செய்துள்ளனர். வழக்கினைத் தொடர்ந்து கண்காணித்து மூன்று மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தொடர்புடையவர்கள் மீது துரித நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை பெற்றுத்தர முதல்வர் ஆணையிட்டுள்ளார். அரசு என்றென்றும் சட்டம் ஒழுங்கைப் பேணிக்காப்பதிலும் சமரசம் இல்லாமல் துரித நடவடிக்கை எடுப்பதிலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் துணைநிற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்களிடையே குழுக்களாக நடைபெறும் இக்கருத்து வேறுபாடு மற்றும் மனக்கசப்புகளைக் களைந்து ஒற்றுமையை உருவாக்கும் வகையில் மாணவர்களை நல்வழிப்படுத்தவும், ஆசிரியர் ஒருவர் ஸ்டூடென்ட் கவுன்சிலராக (Student Counselor) இருக்கும் முறையை மேம்படுத்தி வேற்றுமையைக் களைந்திட நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகள் வாயிலாக மாணவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு நல்வழிப்படுத்தும்” என்றார்.
