அமுதன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: 10 பேர் கைது, வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்ந்தது!

Published On:

| By Pandeeswari Gurusamy

கோவை இந்துஸ்தான் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் கூடுதலாக தாழ்த்தபடுத்தபட்டோர் மீதான வன்கொடுமை வழக்கும் சேர்க்கப்பட்டுள்ளது.

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன், கடந்த 10-ஆம் தேதி சக மாணவர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

போதைப்பொருள் குற்றச்சாட்டு

மாணவர்களுக்கு இடையேயான மோதலில் அமுதன் உயிரிழந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், போதைப்பொருள் விவகாரம் தொடர்பாகவே தனது மகன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அமுதனின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், இந்த போதைப்பொருள் குற்றச்சாட்டை கோவை மாவட்டக் காவல்துறையும் கல்லூரி நிர்வாகமும் மறுத்துள்ளன.

இதனிடையே, அமுதனின் பெற்றோரை தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அமுதனின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை உறுதுணையாக இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், இச்சம்பவம் குறித்து வரும் திங்கள்கிழமை சட்டப்பேரவையில் விரிவாகப் பேசவிருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

ADVERTISEMENT

இச்சம்பவம் குறித்து அமுதனின் நண்பர் ஸ்ரீமன் அளித்த புகாரின் பேரில், செட்டிபாளையம் காவல்துறையினர் 14 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

கலவரத்தில் ஈடுபடுதல், சட்டவிரோதமாக வழிமறித்தல், சட்டவிரோதமாக அடைத்து வைத்தல், கடத்தல், கொலை முயற்சி, கொலை ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது ‘தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவு’ கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

10 பேர் கைது – 4 பேருக்கு வலைவீச்சு:

இவ்வழக்கை விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஏற்கனவே 9 மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தேனியைச் சேர்ந்த சச்சின் என்ற மாணவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் கைதானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. தலைமறைவாக உள்ள எஞ்சிய 4 மாணவர்களைத் தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களின் விவரம்:

  • 17 வயது சிறுவன்
  • ஆராமுதன்
  • அரவிந்த்
  • சிவரோகித்
  • மணி பாலு
  • சந்தோஷ்
  • ஸ்ரீராம்
  • ஹரீஸ் பாண்டியன்
  • லலித் ஆதித்யா
  • சச்சின்

கைது செய்யப்பட்ட 10 பேரிடமும் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share