கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் 58 வயது பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள கருப்பக்கால் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (58). இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். திருமணமாகிய மகள் பாலக்காட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 12-ஆம் தேதி வழக்கம்போல் வேலை முடிந்து மகன் வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, சாந்தி ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது தலை மற்றும் முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் இருந்தன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர், சாந்தியின் சடலத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
சம்பவம் நடந்த பகுதியைச் சுற்றியிருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிப் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கு இந்தக் கொலைச் சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்தச் சிறுவனை மடக்கிப் பிடித்துக் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், 58 வயது பெண்ணைக் கட்டையால் தாக்கிப் படுகொலை செய்ததைச் சிறுவன் ஒப்புக்கொண்டான்.
சம்பவம் நடந்த தினத்தன்று இரவு, சாந்தியின் வீட்டிற்குள் 17 வயது சிறுவன் அத்துமீறி நுழைய முயன்றதைப் பார்த்த சாந்தி கூச்சலிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், அங்கிருந்த மரக்கட்டையை எடுத்துச் சாந்தியைத் தாக்கியதில் அவர் மயங்கி விழுந்துள்ளார்.
மயங்கிய நிலையில் கிடந்த பெண்ணிடம் சிறுவன் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதுடன், வீட்டில் இருந்த மிக்ஸி மற்றும் செல்போன் ஆகியவற்றைத் திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளான். மயங்கிய நிலையில் கிடந்த சாந்திக்குத் தொடர்ந்து ரத்தப்போக்கு ஏற்பட்டதால், அவர் பரிதாபமாக உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணைக்குப் பின்னர் 17 வயது சிறுவனைக் கைது செய்த காவல்துறையினர், சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
