கோவையில் மாணவன் அமுதன் கொலை குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொண்டுவந்து அதன் மீது உரையாற்றினார்.
அப்போது உதயநிதியின் பேச்சுக்கு அமைச்சர் நிர்மல் குமார் பதிலளித்துப் பேசுகையில், “தமிழகத்தில் நடக்கும் போதைப்பொருள் பழக்கத்தைக் குறித்துக் குறிப்பிட்டார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தமிழகத்தில் நடைபெறும் போதைப்பொருள் பழக்கத்தைப் பற்றி எல்லோரும் அறிந்த விஷயம் தான். ஏற்கனவே சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாஃபர் சாதிக் என்ற நபர் டெல்லியில் கைது செய்யப்பட்டார். அவருடன் அப்போதிருந்த முதல்வர் குடும்பம், அமைச்சர்கள் குடும்பம் வரை அதிகாரிகள் வரை எவ்வளவு தொடர்பில் இருந்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இதுவரை அந்த நபர் சம்பந்தப்பட்ட எந்த வழக்கும் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்படவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் எல்லா வகையிலும் போதைப்பொருள் எல்லா இடங்களிலும் அதிகமாக இருக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதைத் தடுக்க முதல்வர் அனைத்து வகையிலும் தேவையான சட்டபூர்வ நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். நமது அரசியல் கொள்கையும் போதைப்பொருளை அனைத்து வகையிலும் கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான் முக்கியக் கொள்கை. கடந்த ஆட்சியைப் போல் எந்தச் சம்பவங்களும் நடக்காமல் அனைத்து நடவடிக்கைகளையும் முதல்வர் கண்டிப்பாக எடுப்பார் என்பதை உறுதியாகத் தெரிவிக்கிறோம்” என்றார்.
அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், “அமைச்சர் சம்பந்தப்பட்ட நபர் என்று ஒருவரது பெயரைச் சொல்லித் தெரிவித்தார். அந்தச் சம்பந்தப்பட்ட நபர் மீது அப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்ததும் எங்களது தலைவர் உடனடியாக அவரைக் கைது செய்து கட்சியிலிருந்தும் உடனடியாக நீக்கிவிட்டார். ஆனால் இவர்களது ஆட்சியில் என்ன நடந்தது என்பதை இன்று மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு அமைச்சரே ஐபிஎல் மேட்சில் (IPL Match) பவுடர் நுணுக்கிவிட்டு ‘மாத்திரை நுணுக்கினேன்’ என்று கதை விட்டார். அவரிடம் உங்கள் காவலத்துறை ஏதாவது விசாரணை நடத்தியதா? அவர் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கிறீர்களா? சமீபகாலமாக ஆளுங்கட்சியைச் சேர்ந்த பலர் போதைப்பொருள் வழக்கில் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள்” என்றார்.
அப்போது சபாநாயகர் குறிப்பிட்டு, “ஆதாரம் இல்லாமல் நீங்கள் பேசக்கூடாது” என்றதற்கு, உதயநிதி ஸ்டாலின், “அமைச்சர் பேசியதற்கு ஆதாரத்தை நீங்கள் கேட்டீர்களா?” என்றார். மேலும், “நாங்கள் உடனடியாகக் கைது செய்து கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறோம். உங்கள் அமைச்சர் ஐபிஎல் மேட்சில் பவுடர் நுணுக்கிக்கொண்டிருந்ததை உலகமே பார்த்தது. அதுகுறித்த விமர்சனங்கள் வந்தபோது ‘குழந்தைக்கு மாத்திரை நுணுக்கினேன்’ என்ற கதை விட்டார். அதுகுறித்து ஏதாவது விசாரணையோ நடவடிக்கையோ எடுத்திருக்கிறீர்களா என்பதை கேட்க விரும்புகிறேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “நான் குறிப்பிட்ட போதைப்பொருள் மன்னன் ஜாஃபர் சாதிக் சம்பந்தப்பட்ட எந்தப் பெயர்களையும் சபையின் நாகரிகம் கருதிச் சொல்லவில்லை. அதே நேரத்தில் அந்த வழக்கில் ஒன்றிய அரசு டெல்லியில் பதிவு செய்த வழக்கே தவிர்த்து, அவர் மீது இங்கு எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. அவரைக் காப்பாற்றும் முயற்சிதான் நடந்தது. இதில் தேவைப்பட்டால் யார் யாருடன் எந்தெந்த வகையில் புகைப்படங்கள் எல்லாம் இருக்கிறது என்பது சமூக வலைதளங்களில் வெளியானது. சபை நாகரிகம் கருதி நான் அதை வெளியிடவில்லை, யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. அதை அவர்கள் இத்தோடு நிறுத்திக்கொள்வது நல்லது. போதைப்பொருளைத் தடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” என்றார்.
தொடர்ந்து பேசிய மனிதவளத்துறை அமைச்சர் சரத்குமார், “பேரவைத் தலைவரே, ஸ்டேடியத்தில் இதுபோன்று நடந்தது குறித்த விளக்கத்தை முன்னதாகவே அளித்துள்ளேன். அதில் அவர்களுக்குப் பல்வேறு முரண்பாடான கருத்துக்கள் இருக்கலாம். அப்படி அவர்கள் சொல்கிறார்கள் என்றால், அந்தச் சமயத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிதான் நடந்தது. அப்படியென்றால் ஸ்டேடியம் வாசலில் இருந்து இவர்கள்தான் போதைப்பொருள் விற்றோம் என்பதை ஒப்புக்கொள்கிறார்களா? ஆதாரம் இல்லாமல் விளக்கம் கொடுத்ததற்குப் பிறகும் தேவையில்லாமல் பேசுகிறார்கள். எனக்குக்கூடத் தான் எனது துறையைச் சார்ந்த கிட்டத்தட்ட அரசு வேலை தருவதாகச் சொல்லி 888 கோடி ஊழல் செய்துள்ளனர். எனக்குக்கூடப் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. அதனால் விளக்கம் அளித்த பிறகு பல்வேறு விஷயங்களைத் தெரிவிக்க வேண்டாம்” என்றார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய திமுக எம்.எல்.ஏ கே.என். நேரு, ‘அவரைப் பற்றித் தனிப்பட்ட குற்றச்சாட்டு தெரிவித்தால், அதற்கு மட்டுமே அவர் பதிலளிக்க வேண்டும். அதை விடுத்து, சோதனையின் போது 888 கோடி ரூபாய் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் இருக்கும் ஒரு விவகாரத்தை இங்கு எப்படிக் குறிப்பிட்டுப் பேச முடியும்? அதற்கு என்னால் எப்படி விளக்கம் அளிக்க முடியும்? எனவே, அந்தப் பேச்சைச் சட்டமன்ற அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். அவரைப் பற்றிக் கேட்டால் அதற்குப் பதில் சொல்லுங்கள்; அதைவிட்டுவிட்டு மற்றவர்களைப் பற்றிப் பேசுகிறீர்கள். நீங்கள் வழக்கை நீதிமன்றத்துக்குத் தள்ளினீர்களே, அது என்னவென்று விளக்கம் சொல்லுங்கள்’ என்று கூறினார்.”
