தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது, அவையின் கண்ணியம் குறித்து முன்னாள் முதலமைச்சரும் திமுக சட்டமன்ற உறுப்பினருமான ஓ. பன்னீர்செல்வம் பேசினார்.
அதைத் தொடர்ந்து பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், “சட்டமன்றத்தில் கண்ணியமாகப் பேச வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியிருந்தார். முதல்முறை சட்டமன்ற உறுப்பினராக வந்துள்ள நாங்கள் அதைக் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஆனால், எதிர்க்கட்சித் தலைவருக்கு முதலில் அவையின் கண்ணியத்தைக் கற்பிக்க வேண்டும். முதலமைச்சர் விஜய் பேரவைக்குள் வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நிற்பதில்லை” என்று குற்றம்சாட்டினார்.
இதற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பேசிய அமைச்சர், “முதலமைச்சருக்கு மரியாதை தர வேண்டும் என்ற கண்ணியத்தை எதிர்க்கட்சித் தலைவருக்குச் சொல்லித் தர வேண்டும். 8 கோடி மக்களின் பிரதிநிதியான முதலமைச்சர் ஜோசப் விஜய் உள்ளே வரும்போது, எதிர்க்கட்சித் தலைவர் உதய நிதி அவையில் அமர்ந்திருக்கலாமா?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கும் திமுக உறுப்பினர்கள் மீண்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய சபாநாயகர் ஜே. சி. டி. பிரபாகர், “முதலமைச்சர் உள்ளே வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நிற்க வேண்டுமா அல்லது கூடாதா என்றுதான் அமைச்சர் கேட்கிறார்” என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் கே. என். நேரு, “தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இருந்தபோது, முன்னாள் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவைக்குள் வரும் வேளையில் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நின்றதில்லை. அது அவரவர் விருப்பம் சார்ந்த நடைமுறை. இந்த விவகாரத்தை அவையில் பேசுவதில் தவறில்லை; ஆனால் எதிர்க்கட்சித் தலைவருக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் கூறுவது தவறு” என்று பதிலளித்தார்.
புதிய மரபா?
இதைத் தொடர்ந்து பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், “சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நமது பேரவைக்கு என்று சில மரபுகள் உள்ளன. இந்த அவைக்குப் பேரவைத் தலைவர் மட்டும்தான் தலைவர். பேரவைத் தலைவர் வரும்போது கட்சி வித்தியாசமின்றி அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நிற்பது காலம் காலமாகப் பின்பற்றி வரும் மரபு. முதலமைச்சராக இருப்பவர் அவைக்குள் நுழைந்தவுடன் நேராகத் தனது இருக்கைக்குச் சென்று, அங்கிருந்து ஒரு வணக்கம் செலுத்திவிட்டு அமர்வதுதான் நடைமுறை. ஆனால் தற்போதைய முதுல்வர் விஜய் அவைக்குள் நடந்து சென்று வணக்கம் செலுத்திவிட்டுத் தனது இருக்கையில் அமர்கிறார்; இது ஒரு புதிய வழக்கமாக இருக்கிறது.
இந்த அவையைப் பொறுத்தவரை பேரவைத் தலைவர் வரும்போதுதான் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்ற மரபில் இருந்து விலகி, முதலமைச்சர் வரும்போதும் எழுந்து நிற்க வேண்டுமா என்பதைப் பேரவைத் தலைவர்தான் முடிவு செய்ய வேண்டும். இதில் நான் தெளிவுபெற விரும்புகிறேன். புதிய மரபாக முதலமைச்சர் வரும்போது எழுந்து நிற்க வேண்டும் என்றால், இந்த அவைக்குள் எதிர்க்கட்சித் தலைவர் வரும்போதும் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நிற்க வேண்டுமா என்பதையும் பேரவைத் தலைவர்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று விளக்கம் கேட்டார்.
சபாநாயகர் விளக்கம்
இதனைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர், “காலை 9:30 மணிக்கு அவை கூடுகிறது என்றால், அவை கூடுவதற்கு முன்பாகவே முதலமைச்சர் அவைக்கு வந்து, நடுவே சென்று அனைவருக்கும் வணக்கம் செலுத்துவதை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அப்போது அமைச்சர் ராஜேஷ் குமார், ‘எங்கள் பக்கமும் உங்கள் பார்வை திரும்ப வேண்டும்’ என்று கூறியபோது, முதலமைச்சர் இரு பக்கமும் சென்று வணக்கம் செலுத்தி வருகிறார்.
அவை கூடும்போது பேரவைத் தலைவருக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை. ஆனால், முதலமைச்சர் வரும்போது அவர் வணக்கம் தெரிவிக்கும் வேளையில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட எழுந்து நின்று வணக்கம் செலுத்தியதை நான் பார்த்திருக்கிறேன். மற்ற உறுப்பினர்களும் விருப்பப்பட்டால் எழுந்து நிற்பதைப் பார்த்திருக்கிறேன். இந்த அவையின் கண்ணியமும் மிகச்சிறந்த பாரம்பரியமும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் மரியாதை தெரிவித்துக்கொள்கிறார்கள் என்ற அடிப்படையிலானது.
தமிழக சட்டமன்றத்தில் பரஸ்பரம் மரியாதை தெரிவிப்பது என்ற அடிப்படையில் கட்சி வேறுபாடுகளை மறந்து மதிப்பளிக்கிறார்கள் என்பதுதான் நமது பண்பாடு. எனவே முதலமைச்சர் வரும்போதும், எதிர்க்கட்சித் தலைவர் வரும்போதும் எழுந்து நின்று மரியாதை தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. ஆனால் அப்படித் தெரிவிப்பது தமிழர்களின் பண்பாடு மற்றும் மரபு. அந்த கண்ணியத்தைக் காப்பாற்றுவது அவரவர் விருப்பத்திற்குட்பட்டது; யாரையும் இதைச் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது” என்று தெரிவித்தார்.
