சட்டமன்றத்தில் இன்று பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “போதை பழக்கத்தை தவெக ஆட்சியில் இருக்கும் இந்த 100 நாளில் ஏற்படுத்தி விட முடியாது. 2020-க்கு முன்பு தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் இல்லை என்பதை நாங்கள் மீண்டும் உறுதியாகப் பதிவு செய்கிறோம். போதை கலாச்சாரம் அதிகமாக இருந்தால் குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமைகள் நடக்கும்.
2020-இல் 4,038 போக்சோ (POCSO) வழக்குகள் பதிவானது. 2021-இல் 6,064, 2022-இல் 6,580, 2023-இல் 6,968 மற்றும் 2024-இல் 10,046 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன. பாலியல் தொந்தரவால் இரண்டரை வயது பெண் குழந்தை பலியான சம்பவத்தில் திமுகவின் உறுப்பினர்தான் குற்றவாளி. இது குறித்து இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் அப்போது என்ன பேசினார்? என்ன நடவடிக்கை எடுத்தார்? போதைப்பொருளுக்கு எதிராக எத்தனை கூட்டங்கள் கடந்த 5 ஆண்டுகளில் நடந்தன?
இந்த ஆதாரங்கள் எல்லாம் திமுக ஆட்சியில் காவல்துறையால் கொடுக்கப்பட்ட அறிக்கை; இது தமிழக வெற்றிக் கழகத்தின் அறிக்கை இல்லை. என்றார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிமுக ஆட்சியில் போதைப்பொருள் நடமாட்டம் இல்லை என்று சட்டமன்றத்தில் தெரிவித்துள்ள தகவல் பொய் என கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசின் “உண்மை சரிபார்ப்பு குழு” திட்ட இயக்குநராக இருந்த ஐயன் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பதிவில், “மீண்டும் மீண்டுமா.. பொய் பேசும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
தமிழ்நாட்டில் 2020க்கு முன்பாக போதை கலாச்சாரமே இல்லை என்ற பொய்யை சட்டசபையில் வைத்து அமைச்சர் ஆதவ் பேசுகிறார். அதாவது, 2020க்கு முன்பு போதைப் பொருளை யாருமே பயன்படுத்தல போல. ஆனா Data பொய் சொல்லாது, Narcotics Drugs & Psychotropic Substance Act for the year 2017படி 2017ம் 3812 ஆக இருந்த வழக்குகள், 2020ம் ஆண்டே 5403 ஆக அதிகரித்து விட்டது என்று ஒன்றிய அரசு தரவுகளையே வழங்கி இருக்கு. https://mha.gov.in/MHA1/Par2017/pdfs/par2022-pdfs/RS-14122022/839.pdf
2020ல் போதைப் பொருள் தொடர்பான வழக்குகளில் தமிழ்நாடு 3ம் இடத்தில் இருந்து இருக்கு.
2019ல் தமிழ்நாட்டில் இருந்து 28750 கிலோ கஞ்சா தொடர்பான போதைப் பொருட்கள் கைபற்றப்பட்டன. அது 2020ல் 298678 கிலோ வாக அதிகரித்து இருந்தது.
https://sansad.in/getFile/annex/260/AU705.pdf?source=pqars
2017ல் மதுரையில் கஞ்சா, மதுபானம் போன்ற வஸ்துகளை படித்த இளைஞர்களுக்கு தொடர்ந்து சப்ளை செய்து, போதை பழக்கத்துக்கு அடிமையாக்கி அவர்களை குற்றச் செயல்களில் ரவுடி கும்பல்கள் ஈடுபடுத்துவதாக செய்திகள் வந்த அப்போ பேப்பர் படிக்கலையா ?
https://hindutamil.in/news/tamilnadu/215176-.html பவுடர் நுணுக்குவது நுட்பமான ஆட்கள் கூட இருக்கும் போது கேட்டு தெரிஞ்சுக்கோங்க சார்” என தெரிவித்துள்ளார்.
