தமிழக அரசுப் பேருந்துகளில் நடத்துநர் பணிகளை நிரப்ப உத்தரப்பிரதேச நிறுவனத்துக்கு முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு டெண்டர் விட்டுள்ளதாக ஆட்சிக்கு ஆதரவு தரும் சிபிஎம் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் சுமார் 30,000 காலி இடங்களை நிரப்ப வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. அரசு போக்குவரத்து கழகங்கள் மக்களின் அன்றாட பயணத் தேவைகளை நிறைவேற்றும் அடிப்படையான சேவை நிறுவனமாகும். தமிழ்நாட்டில் தினமும் சுமார் 2 கோடி பேர் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பயணம் செய்து வருகின்றனர். மக்களுக்கு பாதுகாப்பான பயணத்தை வழங்குவது போக்குவரத்துக் கழகங்களின் மிக முக்கியமான கடமையாகும்.
50 ஆண்டுகளாக தேவையான எண்ணிக்கையில் பணியாளர்களை நியமித்து முறையான பயிற்சி வழங்கி சிறப்பான சேவையை போக்குவரத்துக் கழகங்கள் செய்து வந்தன. கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் காலிப்பணியிடங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமித்தனர். இதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் சிஐடியு வழக்கு தொடர்ந்தது. ஒப்பந்தப் பணியாளர் முறை இட ஒதுக்கீட்டை மறுப்பது, சமூக நீதிக்கு எதிரானது, பாதுகாப்பான பயணத்திற்கு பயன்படாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறி திமுக அரசு மேல்முறையீடு செய்தது. அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்ற அரசின் வாதத்தை ஏற்று தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்தது உயர்நீதிமன்றம். வழக்கு இப்போது உச்சநீதிமன்றத்தில் உள்ளது.
உ.பி. நிறுவனத்துக்கு டெண்டர் தந்த தவெக அரசு
திமுக அரசு காலிப்பணியிடங்களைப் நிரப்பாமல், ஒப்பந்தப் பணியாளர்களை ‘சால்வாட்’ என்ற நிறுவனம் மூலம் நியமனம் செய்தது. தவெக அரசு தற்போது “எஸ்.எஸ். எண்டர்பிரைசஸ்” என்ற உத்தரப்பிரதேச நிறுவனத்திற்கு டெண்டர் மூலம் நடத்துனர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது. லட்சக்கணக்கான தமிழக இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக ஆண்டுக் கணக்கில் காத்திருக்கும்போது, அவர்களுக்கு வாய்ப்பை மறுக்கும் வகையில் உத்தரப்பிரதேச நிறுவனத்திற்கு ஒப்பந்தம் முறையில் நியமனம் செய்ய ஆணை வழங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிபோகும்
இதனால் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படும், இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி நியமனம் கைவிடப்பட்டு சமூக நீதியும் பாதிக்கப்படும். எனவே, மாநகரப் போக்குவரத்து கழகத்தில் வெளி முகமை மூலம் நடத்துனர்களை நியமிக்க உத்திரப் பிரதேச நிறுவனத்திற்கு வழங்கியுள்ள ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்றும், சிந்தூரி மேனேஜ்மெண்ட் சொல்யூசன்ஸ் என்கிற நிறுவனத்திற்கு நிர்வாக பணியாளர்கள் 250 பேரை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க ஆணை வழங்கியிருப்பதையும் ரத்து செய்ய வேண்டுமெனவும், போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரந்தரமான முறையில் பூர்த்தி செய்ய வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு பெ.சண்முகம் வலியுறுத்தி உள்ளார்.
வேல்முருகன் கண்டனம்
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு, அரசு வேலை இல்லையா?
வடமாநில நிறுவனங்களுக்கு, தமிழ்நாட்டின் வேலைகள் தாரைவார்க்கப்படுகிறதா?
தமிழ்நாட்டு இளைஞர்கள் 32 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காத்திருக்கும்போது, ஒப்பந்த நிறுவனங்களிடம் அரசுப் பணிகளை ஒப்படைப்பதா?
தமிழ்நாட்டின் அரசு போக்குவரத்துக் கழகங்களில் நிரந்தரப் பணியிடங்கள் காலியாகக் கிடக்கும் நிலையில், நடத்துநர் பணிகளை ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் தமிழக அரசின் நடவடிக்கையை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
சுமார் 1,797 நடத்துநர் பணியிடங்களை ஒப்பந்த முறையில் நிரப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது மட்டுமின்றி, அதற்கான ஒப்பந்தம் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் வேலைக்காகப் பதிவு செய்து ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் இளைஞர்கள் இருக்கும்போது, அவர்களைப் புறக்கணித்துவிட்டு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிகளைத் தனியார் ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்படைப்பது ஏன்?
தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ தரவின்படி, 31.03.2025 நிலவரப்படி 32,35,683 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காகக் காத்திருக்கின்றனர். இந்த 32 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களில் நடத்துநர் பணிக்குத் தகுதியானவர்கள் எத்தனை பேர்? அவர்களில் எத்தனை பேர் போக்குவரத்துக் கழக வேலைக்காகப் பதிவு செய்து காத்திருக்கிறார்கள்? அவர்களுக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை? இந்தக் கேள்விகளுக்கு தமிழக அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களுடைய கல்வித் தகுதியையும் வயதையும் பதிவு செய்து, அரசுப் பணிக்காகக் காத்திருக்கும் இளைஞர்களின் நம்பிக்கையை அரசே சிதைப்பது நியாயமா? இது தவிர, பதிவு செய்யப்படாமல் கல்லூரிகளில் படித்துவிட்டு வேலைகளுக்காகக் காத்திருக்கக்கூடிய இளைஞர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் அதிகமாக இருப்பதை அரசு கவனிக்கத் தவறிவிட்டதா?
ஒருபுறம் வேலைவாய்ப்பை உருவாக்குகிறோம் என்று விளம்பரம். மறுபுறம் ஏற்கெனவே உள்ள அரசுப் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்பாமல் ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் நடைமுறை. இது எந்த மாதிரியான நிர்வாகக் கொள்கை? இது தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு பயன்படுமா?
தமிழ்நாட்டு இளைஞர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவர்கள், தமிழ்நாட்டு இளைஞர்களைப் புறக்கணிப்பது ஏன்?
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசு வேலை இல்லை. தனியார் ஒப்பந்த நிறுவனங்களுக்கு அரசு வேலை இருக்கிறதா? அது எப்படி?
இந்த முரண்பாட்டைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழ்நாடு அரசுத்துறைகள், அரசு நிறுவனங்கள், வாரியங்கள், கழகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அரசுப் பணிகளும் தமிழ்நாட்டின் குடிகளுக்கு 100% வழங்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டின் வரிப்பணத்தால் உருவாக்கப்படும் அரசு நிறுவனங்களிலும், தமிழ்நாட்டு மக்களின் உழைப்பால் இயங்கும் பொதுத்துறை அமைப்புகளிலும் கிடைக்கும் வேலைவாய்ப்பில் தமிழ்நாட்டின் குடிகளுக்கே முழுமையான முன்னுரிமை இருக்க வேண்டும் என்பதே எங்கள் கொள்கை.
இது யாரையும் வெறுப்பதற்கான நிலைப்பாடு அல்ல.
தமிழ்நாட்டின் வளம், வருவாய், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் தமிழ்நாட்டின் குடிகளுக்குள்ள உரிமையைப் பாதுகாப்பதற்கான கொள்கை நிலைப்பாடு.
அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் நடத்துநர், ஓட்டுநர் போன்ற அடிப்படைப் பணிகளை ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்படைப்பது தொழிலாளர்களின் பணிப் பாதுகாப்பை மட்டுமல்ல. எதிர்காலத்தில் பொதுப் போக்குவரத்தையே தனியார்மயமாக்குவதற்கான பாதையைத் திறக்கும் அபாயகரமான நடவடிக்கையாகும்.
ஏற்கெனவே போக்குவரத்து ஊழியர்கள் பணியாளர் பற்றாக்குறை, பணிச்சுமை உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணாமல் ஒப்பந்த முறையை விரிவுபடுத்துவது தொழிலாளர் நலனுக்கு எதிரானது. தொழிற்சங்கங்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் இந்த நடவடிக்கையைத் தொடர்வதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மிகக் கடுமையாகக் கண்டிக்கிறது.
எனவே தமிழக அரசு, 1,797 நடத்துநர் பணிகளுக்கான உத்தரபிரதேச நிறுவனத்துடன் ஏற்படுத்தியுள்ள ஒப்பந்த முறையை உடனடியாகக் கைவிட வேண்டும்.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் தகுதியான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு உரிய வாய்ப்பை வழங்க வேண்டும்.
தமிழ்நாடு அரசுத்துறைப் பணிகள் அனைத்தும் தமிழ்நாட்டின் குடிகளுக்கு 100% வழங்கப்பட வேண்டும். போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க வேண்டும்.
