திமுக ஆட்சியில் ‘டெண்டர் தொகையை உயர்த்தி ஊழல் செய்ததாக’ முதல்வர் விஜய் உள்ளிட்ட தவெக அமைச்சர்கள் குற்றம் சாட்டி வருவதற்கு திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சட்டசபையில் இன்று விரிவான விளக்கம் அளித்தார்.
சட்டசபையில் இன்று (ஆகஸ்ட் 18) எ.வ.வேலு பேசியதாவது: அரசு ஒப்பந்தங்களில் மதிப்பீடு (Estimation) என்பது மிகவும் முக்கியமானது. மதிப்பீட்டின் அடிப்படையில்தான் ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன. மதிப்பீடுகள் தயார் செய்ய அடிப்படையாக SoR (Schedule of Rates) பயன்படுத்தப்பட வேண்டும்.
இதை தயாரிக்கும் குழுவில் நிதித்துறையின் செயலாளர் அல்லது அவரால் நியமிக்கப்படும் ஐ.ஏ.எஸ் அதிகாரி, அதோடு மட்டுமல்லாமல் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, நீர்வளத்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், வீட்டுவசதித்துறை, வனத்துறை, தமிழ்நாடு காவல் வீட்டுவசதிக் கழகம், தோட்டக்கலைத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய துறைகளில் உள்ள தலைமைப் பொறியாளர்கள் அல்லது அவர்களால் நியமிக்கப்படும் பிரதிநிதிகள்தான் இருப்பார்கள்.
இதன் அடிப்படையில்தான் திட்டங்களை மதிப்பீடு செய்வார்கள். இதற்கு மத்திய அரசாங்கத்தின் எஃகு உற்பத்தி நிலையத்தின் ஸ்டீல் விலை, தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் சிமெண்ட் விலை, தொழிலாளர் நலத்துறை சார்பாக நிர்ணயிக்கப்படும் ஊதிய விகிதங்கள், அதோடு மட்டுமல்லாமல் மணல் உள்ளிட்டவற்றின் பில்களை வாங்கித் தொகுக்கின்றனர்.
இந்தக் கூட்டம்தான் முதன்முதலாக இந்த SoR என்ற ‘ஷெட்யூல் ஆஃப் ரேட்ஸ்’ என்பதைத் தயார் செய்து, அதை பொதுப்பணித்துறையின் சார்பாக வெளியிடுகிறார்கள்.
அதுதான் எல்லாத் துறைக்கும் சென்று தயார் செய்யப்படுகிறது.
டெண்டர்களை முறைப்படுத்தத் தெரிந்த அளவிற்கு, டெண்டர் ரேட்டை உயர்த்தி ஊழல் செய்யத் தெரியாது’ என்று ஒரு வார்த்தையைச் சொன்னார். இந்த ‘ஊழல்’ என்ற வார்த்தையை நான் சொல்லவில்லை; முதல்வர் சொன்ன வார்த்தையைத்தான் மேற்கோள் காட்டுகிறேன்.
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா: பொதுவாக ஊரில் ஒரு பழமொழி சொல்லுவார்கள்; “வாழைப்பழத்தில் ஊசி ஏற்றி, அந்த வாழைப்பழத்தையே மக்களுக்குக் கொடுப்பார்கள்” என்று. அதுதான் அவருடைய (எ.வ.வேலு) பேச்சின் கடைசி சுருக்கம்.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவைப் பற்றிச் சொன்னார். கடந்த 5 வருடங்களின் அனைத்துப் பத்திரிகைத் செய்திகளையும் எடுத்துப் பார்த்தால், இந்தத் துறை ஊழல் மட்டும்தான் செய்திருக்கிறது என்று எங்களால் சொல்ல முடியும்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நீங்கள் வரும்போது என்ன சொன்னீர்கள்? “இன்றைக்கு எதையும், யாரையும் குறைகள் சொல்லாமல், நம்முடைய திட்டங்களைப் பற்றிப் பேசுங்கள்” என்று சொன்னீர்கள். பத்திரிகை செய்திகள் தவறானவை; அதற்கான விளக்கத்திற்கு நான் பதில் அளிக்கிறேன், டெண்டரே இன்னும் முடியடையவில்லை.
எங்களுடைய முதலமைச்சர் சொன்னது உண்மை. ஷெடூல் ஆஃப் ரேட்ஸ் (Schedule of Rates) ஏன் இன்னும் அறிவிக்கவில்லை என்றால், அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அதைச் பொதுவாகச் சிவில் ரேட்டின் விலைக்கு ஏற்ப மாற்ற வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். பொதுவாக 3%, 5%, 7% வரை விலை ஏற்றுவார்கள். ஆனால், நாங்கள் கடந்த வருடம் என்ன ஷெடூல் ஆஃப் ரேட்ஸ் இருந்ததோ, அதையே அனைத்துத் துறைகளுக்கும் வழங்கியுள்ளோம்.
ஏனென்றால், கூடிய விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப் போகிறோம். நெடுஞ்சாலைத் துறையிலும் பொதுப்பணித்துறையிலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்ற அனைத்து டெண்டர்களிலும் என்ன நடந்தது என்பதை இன்றைக்கு அவையில் நாங்கள் சொல்ல விரும்பவில்லை.
ஆனால், இந்த கடைசி 60 நாட்களில் 20-க்கும் மேற்பட்ட ப்ராஜெக்ட்களுக்கு ரீ-டெண்டர் விட்டோம். அதனுடைய நேர்மறையான தாக்கம் என்னவென்றால், முதலமைச்சர் சொன்னது போல ஹை வேல்யூ போட்டார்கள் என்பது உண்மை.
சுமார் 20 முதல் 36% வரை மதிப்பு குறைவாக இன்றைக்கு டெண்டர்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதை இந்த மாமன்றத்தில் தாக்கல் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். ஏற்கனவே கடந்த அரசாங்கத்தில் விடப்பட்ட டெண்டர்களை, மீண்டும் புதிதாக டெண்டர் விடும் பொழுது சுமார் 20 முதல் 36% வரை டெண்டரின் மதிப்பு குறைவாகக் கிடைத்து, அந்தப் பணம் எல்லாம் நம்முடைய அரசு கஜானாவுக்கு வந்து கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.
எ.வ.வேலு: யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த ஷெடூல் ஆஃப் ரேட்ஸ் (Schedule of Rates) என்பது 1947-லிருந்து நடைமுறையில் உள்ளது; இது ஒன்றும் புதியது அல்ல.
தனிப்பட்ட அமைச்சர்கள், அதாவது பொதுப்பணித்துறை அமைச்சர் நினைத்தால் அதை தாமாகத் தயாரித்துக் கொள்ள முடியாது; பக்கத்தில் இருக்கும் அமைச்சரும் அதைத் தயார் செய்ய முடியாது.
பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் நிதித்துறைச் செயலாளரின் தலைமையில்தான் அது தயாரிக்கப்படுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டுதான் எஸ்டிமேட் போடப்படுகிறது. இதில் யார் ரேட்டை ஏற்றுவது? ரேட்டை ஏற்றுவதாக அமைச்சர் கூறுவது தவறு.
நாங்கள் டெண்டர் கோரும் பொழுது, ஒப்பந்ததாரர்கள் தனக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக, லாபம் கூட வேண்டாம் என்ற அடிப்படையில் முன்வருவார்கள். தம்மிடம் உள்ள ஆட்களுக்குச் சும்மா சம்பளம் கொடுக்க முடியாது, இயந்திரங்களுக்குத் டீசல் ஊற்றியாக வேண்டும் என்ற சூழ்நிலைக்காகக் குறைந்த மதிப்பீட்டிற்குக் கூட (Low Tender) டெண்டர் கோருவார்கள்.
அவற்றுக்கும் ஆட்சிக்கும் அமைச்சருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை; டெண்டர் விட்டுவிட்டாலே அந்தப் பணி முடிவடைந்துவிடும்.
ஆதவ் அர்ஜுனா: அமைச்சரின் கவனத்திற்கு வராமல் எந்தத் திட்டத்தையும் வெளியிட முடியாது. இது எனது நேரடி கண்காணிப்பிற்கு வந்த பிறகுதான், அனைத்துத் துறை அதிகாரிகளும் இணைந்து தயாரித்தாலும் ஷெடூல் ஆஃப் ரேட்ஸ் பொதுப்பணித்துறை அமைச்சரின் ஒப்புதலுக்குப் பிறகுதான் வெளியிடப்படும்.
அதை நான் இங்குப் பதிவு செய்கிறேன். கடந்த ஆண்டு இருந்த ஷெடூல் ஆஃப் ரேட்ஸையே நாங்கள் தொடர்ந்து பராமரித்து வருகிறோம். ஏனென்றால், தற்பொழுது நாம் ஒரு 7% முதல் 10% வரை உயர்த்தினால், டெண்டர் விடும் இடங்களில் நாம் முன்பு அதிக மதிப்புடன் டெண்டர் விட்டதுடன் ஒப்பிடும் பொழுது, தற்பொழுது 20 முதல் 36% வரை குறைவாக வரும்போது இந்த ஷெடூல் ஆஃப் ரேட்ஸை வைத்து ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். “இன்றைக்கு இருக்கும் ஷெடூல் ஆஃப் ரேட் படிதானே அவர்களும் விடுகிறார்கள்” என்ற வாதத்திற்காக, இதை எங்கள் வெள்ளை அறிக்கையில் தெளிவாகப் பதிவு செய்வோம். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
