ஊழலற்ற ஆட்சி என்ற முதல்வரின் அலுவலகம் அமைக்கும் பணியிலேயே ஊழலா? – பாஜக கேள்வி

Published On:

| By Pandeeswari Gurusamy

முதலமைச்சர் அலுவலகப் பணி டெண்டரில் முறைகேடு என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இது குறித்து அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என பாஜக தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆசீர்வாதம் ஆச்சாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று (ஆகஸ்ட் 18) அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பாரம்பரியமிக்க புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து முதலமைச்சர் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்ற ஜோசப் விஜய் முடிவு செய்துள்ளார். ஏற்கனவே அந்த மாளிகையில் உள்ள அலுவலகங்களை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கும், மாளிகையின் 10-வது தளத்தைப் புதுப்பித்து முதலமைச்சரின் அறை, அதிகாரிகளின் அறைகள், கூட்ட அரங்கு போன்ற பல்வேறு வசதிகளை உருவாக்குவதற்கும் கடந்த ஒரு மாதமாக ஒரு குறிப்பிட்ட நிறுவனம் பணிகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT

அவ்வாறு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் கிட்டத்தட்ட 90 சதவீதம் முடிவடையும் தருவாயில், தமிழக அரசால் ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. இந்த டெண்டரின்படி, முதலமைச்சரின் அலுவலகம் மூன்று தொகுதிகளாக இயங்கும்.

முதல் பிளாக்கிற்கு ரூ. 2.41 கோடி இரண்டாவது பிளக்கிற்கு ரூ.2.01 கோடி, மூன்றாவது பிளாக்கிற்கு ரூ.1.12, கோடி என என மொத்தம் ரூ.5.54, செலவில் ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தப் புள்ளிக்கான கடைசி நாள் செப்டம்பர் 1, 2026 ஆகும். ஏற்கனவே ஒரு பணி கிட்டத்தட்ட 90 சதவீதம் நிறைவடைந்துள்ள சூழ்நிலையில், திடீரென்று இந்த ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது அரசு விதிகளுக்கு முரண்பட்டதாக அமைந்துள்ளதாகப் பாரதிய ஜனதா கட்சி கருதுகிறது.

ADVERTISEMENT

எந்த முதலமைச்சர் தான் “ஊழலற்ற ஆட்சியை அமைப்பேன்” என்று கூறினாரோ, அவரது அலுவலகத்தை அமைக்கும் பணியிலேயே ஊழல் நடந்துள்ளதாகப் பாரதிய ஜனதா கட்சி கருதுகிறது. ஏனென்றால், 90 சதவீதப் பணிகள் முடிந்த பிறகு திடீரென ஒப்பந்தப் புள்ளி கோருவது நடைமுறைக்கு முற்றிலும் எதிரானதாகும்.

இந்தப் பணம் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம். ரூ. 5.54 கோடி செலவழித்து புதிதாக முதலமைச்சர் அலுவலகம் அமைக்க வேண்டிய கட்டாயம் ஏன் என்ற கேள்வி எழுகிறது. நமக்குக் கிடைக்கக்கூடிய தகவல்கள் மிகவும் வியப்பளிக்கின்றன. முதலமைச்சரின் ஜோதிடர் அளித்த அறிவுரையின்படி, முதல்வர் அலுவலகம் வங்காள விரிகுடாவை நோக்கி அமர்ந்திருந்தால் காலம் முழுவதும் முதலமைச்சர் பதவியிலேயே நீடிக்கலாம் என்ற கூற்றின்படி, அவர் சகல வசதிகளையும் கொண்ட புனித ஜார்ஜ் கோட்டை அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றுகிறாரோ என்ற சந்தேகம் வலுக்கிறது.

ADVERTISEMENT

இந்தப் பணியில் 90 சதவீதம் முடிவடைந்த பிறகும் ஒப்பந்தப் புள்ளி கோருவது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி, முடிவடைந்த ஒரு பணிக்கு டெண்டர் கோருவது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று. அதையும் மீறி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அப்படியென்றால் இந்த டெண்டரில் யார் யாரெல்லாம் பங்கேற்பார்கள்? ஏற்கனவே மாணிக்கம் அண்ட் கம்பெனி என்ற நிறுவனத்திற்கு இந்தப் பணி அளிக்கப்பட்டிருந்தால், மீண்டும் அவர்கள் இந்த டெண்டரில் பங்கெடுப்பார்களா? அவர்களுக்கு இந்த ரூ. 5.54 கோடி மதிப்பிலான பணி வழங்கப்படுமா என்ற கேள்வி எழுகிறது.

இந்தச் சூழலில் முதல்வர் இந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே பணப்பட்டுவாடா செய்யப்பட்டிருந்தால் அதையும் ரத்து செய்ய வேண்டும். இதுகுறித்து உடனடியாக முதல்வர் அலுவலகமோ அல்லது அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவோ ஒரு அறிக்கையைப் பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும். மக்களின் வரிப்பணத்தைத் தனது அலுவலகத்திற்கு முறைகேடாகப் பயன்படுத்துவதை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது. இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள இயலாது. முதல்வர் வெளிப்படையான, ஊழலற்ற ஆட்சியைத் தரதான் மக்கள் அவரை முதல்வராக்கி இருக்கிறார்கள் என்பதை முதல்வரிடம் பாஜக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது” என்று தெரிவித்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share