டாஸ்மாக்கில் 11 மதுபான வகைகள் மீதான தடை ஒரே நாளில் ரத்து ஏன்? யார் இந்த ‘என்ரிகா’ ராகவ் ரெட்டி?

Published On:

| By Mathi

Who is this 'Enrica' Raghav Reddy

தமிழக டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்பனை செய்யப்பட்ட என்ரிகா நிறுவனத்தின் 11 மதுபான வகைகளுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையானது.

என்ரிகா மதுபான வகைகளுக்கு தடை

TASMAC நிறுவனத்துக்கு ஆகஸ்ட் 13-ந் தேதி தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் ஒரு கடிதம் அனுப்பியது. அதில், “ மத்திய அரசின் நிறுவனமான இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்- FSSAI-ன் ஆய்வின்படி, M/s. என்ரிகா என்டர்பிரைசஸ் (P) நிறுவனத்தின் மதுபான வகைகளை விற்பனை செய்வது நிறுத்தப்பட வேண்டும்” என உத்தரவிடப்பட்டது.

ADVERTISEMENT

இதனடிப்படையில் தமிழக டாஸ்மாக் மதுபான கடைகளில் என்ரிகா நிறுவனத்தின் 11 மதுபான வகைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தடை விதிக்கப்பட்ட ”வீரன்”, “லூயிஸ்”, ”விஎஸ்ஓபி” உட்பட 11 மதுபான வகைகள் விவரம்:

1) VSOP EXSHAW GOLD BRANDY
2) LOUIS VERNANT XO BLENDED PREMIUM BRANDY
3) Mc Dowells VSOP Brandy
4) NO.1 McDowells Fine Brandy
5) MENSCLUB Deluxe Brandy
6) HONEY BEE FINE Brandy
7) ENRICA VSOP SELECT BRANDY
8) ENRICA PLATINUM RESERVE XO BRANDY
9) ENRICA PREMIUM FRENCH BRANDY
10) VEERAN SPECIAL BRANDY
11) ENRICA OLD INDIE CLASSIC DARK RUM

ADVERTISEMENT

ஒரே நாளில் தடை நீக்கம்

இதனையடுத்து ஆகஸ்ட் 14-ந் தேதி தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வு துறை ஆணையர் ஆர். கஜலட்சுமி ஐஏஎஸ், டாஸ்மாக் மேலாண்மை இயக்குநருக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.

அதில், “FSSAI கடிதங்களின்

ADVERTISEMENT

(1) FSSAI தெற்கு மண்டல அலுவலகக் கடிதம் எண். TN / RCD / FSSAI-SRO / 2026-27/4111, நாள்: 11.08.2026
2) FSSAI தெற்கு மண்டல அலுவலகக் கடிதம் எண். TN / RCD / FSSAI-SRO / 2026-27/4112, நாள்: 11.08.2026

அடிப்படையில் என்ரிகா நிறுவனத்தின் 11 மதுபான வகைகளின் விற்பனையை நிறுத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால், FSSAI தெற்கு மண்டல அலுவலகக் கடிதம் எண். TN/ RCD / FSSAI – SRO / 2026-27 /4128, நாள்: 14.08.2026-ன் படி, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம், 2006 இன் பிரிவு 36(3)(b) இன் கீழ் தமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, F.No.TN/RCD/FSSAI-SRO/2026-27/4111 மற்றும் 41112 ஆகிய எண் கொண்ட, 11.08.2026 தேதியிட்ட தடை உத்தரவானது மேலே குறிப்பிடப்பட்ட 11 பிராண்டுகளுக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. FSSAI கடிதமானது அவசியமான நடவடிக்கைக்காக இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” என கூறப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் என்ரிகா நிறுவனத்தின் 11 மதுபான வகைகள் விற்பனைக்கான தடை ஒரே நாளில் நீக்கப்பட்டது. இப்படி ஒரே நாளில் என்ரிகா நிறுவனத்தின் மதுபான வகைகள் மீதான தடை தமிழ்நாட்டில் நீக்கப்பட்டது பெரும் விவாதப் பொருளாகி இருக்கிறது.

தற்போது சர்ச்சையில் சிக்கி இருக்கும் என்ரிகா நிறுவனம், நாட்டையே அதிரவைத்த டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் மிக முக்கிய பங்கு வகித்த ராகவ் ரெட்டிக்கு சொந்தமானது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஜெயிலுக்கு அனுப்பி டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பறிகொடுக்கும் நிலைமைக்கு உள்ளாக்கியதுதான் மதுபான கொள்கை ஊழல் வழக்கு.

அப்படிப்பட்ட ஊழல் வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ராகவ ரெட்டியின் நிறுவனத்தின் மதுபான வகைகளுக்குதான் தமிழ்நாட்டில் ஒரே நாளில் தடை நீக்கப்பட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

யார் இந்த ராகவ ரெட்டி?

ஆந்திராவின் ஓங்கோலைச் சேர்ந்த தற்போது தெலுங்கு தேசம் கட்சியின் எம்பி மகுண்டா (மகுந்தா) ஸ்ரீனிவாசலு ரெட்டி. இவரது மகன் ராகவ ரெட்டி. இவர்தான் டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் 2023-ம் ஆண்டு பிப்ரவரி 10-ந் தேதி அமலாக்கத்துறையால் (ED) கைது செய்யப்பட்டார்.

அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் பெரிதும் பேசப்பட்ட, அமலாக்கத்துறையால் குறிப்பிடப்பட்ட ஒரு பெயர் ”சவுத் குரூப்”. இது தென் மாநிலங்களைச் சேர்ந்த.. குறிப்பாக தெலுங்கானா மற்றும் ஆந்திராவின் அரசியல்வாதிகள், மதுபான ஆலை தொழிலதிபர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய ஒரு சிண்டிகேட் அமைப்பு.

இந்த சிண்டிகேட்டில் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேக ராவ் மகள் கவிதா, ராகவ ரெட்டி, தொழிலதிபர் சரத் ரெட்டி உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்த சவுத் குரூப்பானது, டெல்லியில் தங்களுக்குச் சாதகமான முறையில் மதுபானக் கொள்கையை உருவாக்கவும், மதுபான விற்பனை வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தவும் அப்போதைய ஆம் ஆத்மி கட்சிக்கு (AAP) சுமார் ₹100 கோடி லஞ்சமாக முன்கூட்டியே வழங்கியது என்பது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு.

இதனடிப்படையில்தான் சவுத் இந்தியா குரூப்பில் இடம் பெற்றிருந்ததாக கருதப்படும் கவிதா, ராகவ ரெட்டி, சரத் ரெட்டி உள்ளிட்ட பலரும் டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

இது தவிர, மகுண்டா அக்ரோ ஃபார்ம்ஸ் என்ற பினாமி நிறுவனம் மூலம் டெல்லியில் 2 மதுபான சில்லறை விற்பனை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் ராகவ் ரெட்டி என்பதும் அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு.

ராகவ் ரெட்டியின் குடும்ப பின்னணி

ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தைப் பூர்வீகமாக கொண்டது ராகவ் ரெட்டியின் குடும்பம். இவரது தந்தை மகுண்டா சீனிவாசலு ரெட்டி. இவரது அண்ணன் பெயர் மகுண்டா சுப்பராம ரெட்டி.

நெல்லூரை பூர்வீகமாக கொண்டவர்களாக இருந்தாலும் பிரகாசம் மாவட்டத்தின் அரசியல் முகம்தான் இந்த சுப்பராம ரெட்டி குடும்பம். பிரகாசம், நெல்லூர் மாவட்ட அரசியலில் இந்த குடும்பம் வைத்ததுதான் சட்டம்.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவில் பல ஆண்டுகளாக மதுபான தொழிற்சாலைகளை நடத்தி வருகின்றனர்.

1991-ல் ஓங்கோல் லோக்சபா தொகுதியில் சுப்பராம ரெட்டி போட்டியிட்டு தேசிய அரசியலில் கால் வைத்தார். 1995-ம் ஆண்டு நக்சலைட்டுகளால் சுப்பராம ரெட்டி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

இதனையடுத்து 1996-ல் ஓங்கோல் தொகுதியில் சுப்பராம ரெட்டியின் மனைவி போட்டியிட்டு வென்றார்.

1998-ல் சுப்பராம ரெட்டியின் தம்பி சீனிவாசலு ரெட்டி போட்டியிட்டு எம்.பி.யானார். பின்னர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியிலும் தற்போது தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி.யாகவும் அவர் உள்ளார். அந்த சீனிவாசலு ரெட்டியின் மகன்தான் ராகவ் ரெட்டி.

சுப்பராம ரெட்டியும் ஜெயலலிதாவும்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கில் சுப்பராம ரெட்டி பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவருக்கு சொந்தமான சில நிறுவனங்களை விற்பனை செய்வது தொடர்பாக ஜெயலலிதா தரப்பில் இருந்து பணம் கொடுக்கப்பட்ட ஆவணங்கள் அந்த வழக்கில் இடம் பெற்றிருந்தன. அதனால்தான் சுப்பராம ரெட்டி சுட்டுக் கொல்லப்பட்ட போது, சென்னையில் இருந்து தனி ஹெலிகாப்டரில் ஜெயலலிதாவும் சசிகலாவும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தடை நீக்கமும் விளக்கங்களும்

இதனிடையே FSSAI தென் மண்டல இயக்குநர் விகே பஞ்சாம் அளித்துள்ள விளக்கத்தில், “என்ரிகா நிறுவன மதுபான வகைகளை ஆய்வு செய்த போது சுவையூட்டிகளில் மாறுபாடு இருப்பது கண்டறியப்பட்டது. அதனால் தடை விதிக்கப்பட்டது. இந்த மாறுபாட்டை சரி செய்ய என்ரிகா நிறுவனம் 30 நாட்கள் அவகாசம் கேட்டது. இதனைத் தொடர்ந்து தடை நீக்கப்பட்டுள்ளது” என்றார்.

தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத் தீர்வை ஆணையர் கஜலட்சுமி கூறுகையில், “என்ரிகா நிறுவனத்துக்கு FSSAI ஏன் தடை விதித்தது? ஏன் தடையை நீக்கியது? என்பது எங்களுக்கு தெரியாது” என்றார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share